கேன்டிடேட் செஸ் : சாம்பியன் பட்டத்தை வென்றார் தமிழ்நாடு வீரர் குகேஷ்!.
கனடாவின் டொரோன்டோ நகரில் "பிடே" கேன்டிடேட் சர்வதேச செஸ் போட்டி நடந்து வருகிறது.இத் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 9 புள்ளிகள் பெற்றுள்ள அவர் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
8 வீரர்கள் - 8 வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில், ரவுண்ட் ராபின் முடிவில் முதலிடத்தை பிடிப்பவர் உலக சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பைப் பெறுவர். இதில் 17 வயதான சென்னையைச் சேர்ந்த குகேஷ் பங்கேற்று, 13வது சுற்று ஆட்டத்தில் பிரான்சுடனும், தொடர்ந்து அமெரிக்காவுடனும் மோதினார். இதையடுத்து 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்த குகேஷ், கடைசி சுற்றான 14வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் நகருராவை எதிர்கொண்டார். தோற்றால் வெளியேற வேண்டும் என்ற சூழலில் வென்றே ஆக வேண்டும் என நிலையில் விளையாடிய குகேஷ், 9 புள்ளிகளைப் பெற்றார்.
மற்றொரு அணியினர் ஆட்டம் டிரா ஆனதைத் தொடர்ந்து குகேஷ் வெற்றிவாகை சூடினார். இதன்மூலம் கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் வென்ற நபர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். இதைத்தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டின் லிரெனுடன் குகேஷ் போட்டியிடுகிறார்.
இந்த குகேஷ் குறித்த அடிசினல் ரிப்போர்ட்!
17 வயதான குகேஷ் செஸ் போட்டிகளில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். அவர் 12 வயது, ஏழு மாதங்கள், 17 நாட்களில் இந்தியாவின் இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார். உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை வெறும் 17 நாட்களில் அவர் தவறவிட்டார். ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் வகித்து வந்த நாட்டின் முதல் நிலை விரர் என்ற பட்டத்தை, 36 ஆண்டுகளுக்குப் பிறகு பறித்து குகேஷ் சரித்திரம் படைத்தார். .
அதிலும் 2018-ல் இந்தியாவில் நிறைய வீரர்கள் கிராண்ட் மாஸ்டர்கள் ஆனார்கள். அந்த ஆண்டில் 8 நபர்களில் 3 இளம் வீரர்கள் கிராண்ட் மாஸ்டர்களாக உருவாகினார்கள்.அவர்கள் பிரஃஞானந்தா, நிஹல் சரின் மற்றும்அர்ஜுன் எரிகைசி ஆவார்கள். அப்போது இவர்கள் தான் இந்திய செஸ்ஸின் வருங்காலம் என்று சொல்லப்பட்டார்கள். குகேஷ் இவர்கள் மூவருக்கும் பிறகு ஒரு ஆண்டு கழித்துத் தான் கிராண்ட் மாஸ்டர் ஆனார். ஆனால் தற்போது அவர்கள் அனைவரையும் கடந்து இந்தியாவின் ட்ரெண்டிங் ஆக மாறியுள்ளார்.
இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களைச் சொல்லலாம். முதலாக குகேஷ் இணையத் தளத்தில் பொழுதுபோக்குக்காக செஸ் விளையாடுவதில்லை. அவர் அதை விரும்புவதும் இல்லை. இது அவருடைய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறது. அவர் இணையதளத்தில் விளையாடிய போட்டிகள் எல்லாம் நெடுநேரம் கால அளவைக் கொண்டது. அவர் குறுகிய கால அளவு உள்ள ஆட்டங்களை பொழுதுபோக்குக்காக விளையாடுவது இல்லை. மற்றொரு காரணம் அவர் இஞ்ஜின்களைத் தாமதமாக உபயோகிக்கத் தொடங்கியது ஆகும். இவர் தனது ரேட்டிங் 2550 வரும் வரை இஞ்சின்களை உபயோகித்தது இல்லை.
இவரின் பயிற்சியாளர் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா ஆவார். இவர் இந்தியாவின் 33-வது கிராண்ட் மாஸ்டர் ஆவார். இவர் குகேஷைப் பற்றி ஒரு முறை சொல்லும் போது “குகேஷ் ஒரு அரிதான விதிவிலக்கு” ஆவார் என்றுக் குறிப்பிட்டுள்ளார்.ஏனெனில், தற்போதைய காலத்தில் செஸ் விளையாடத் தொடங்கும் குழந்தைகள் கூட இஞ்ஜின்களை உபயோகிக்கிறார்கள். ஆனால், குகேஷ் அவற்றை உபயோகிக்காமல் 2550 ரேட்டிங் வரை சென்றுள்ளார்.