ஆவிகளோடு பேச முடியுமா?
கில்லாடிகள் சிலர் தன்னால் ஆவிகளோடு பேச முடியும் என அடித்து விடுகிறார்கள். அது சாத்தியமா ? வரலாற்றில் மிக நீண்ட காலம் கல்வி மறுக்கப்பட்ட எளிய மக்களிடையே என்ன அடித்து விட்டாலும் அது எளிதாக அவர்களைப் போய்ச் சேர்ந்து விடுகிறது. அப்புறம் இந்தப் பொய் மிக அற்புதமாக ஒரு சந்தைப்பொருளாக மாறிப் போகிறது. எழுத்துகளைக் கூட்டிப் படிக்கும் உரிமை இப்போதுதான் வந்திருக்கிறது. அறிவியல் கல்வி இன்னும் வெகுதொலைவில் இருக்கிறது. இந்தத் துணிவில் ஜாதகம், ஜோதிடம் போன்ற புளுகு வணிகங்களுடன் ஆவிகளுடன் பேசுவதும் கூட சேர்ந்து தூள் கிளப்புகிறது.
கோடிக்கணக்கான உயிரணுக்களின் செயல்பாடு மரணத்தின்போது நின்று போகிறது. அதனால் உடலின் இயக்கம் நின்று போகிறது. இது அறிவியல். ஆனால் மரணம் ஏற்பட்டதும் அந்த உடலில் இருந்து உயிர் ஆவியாக வெளியேறி இன்னொரு உடலைத் தேடி அலைகிறது என்பது டுபாக்கூர்.. இவ்வாறு அலைந்து கொண்டிருக்கிற ஆவிகளுடன் பேச தனக்குத் தெரியும் என்று ரீல் சுற்றுவது உலக மகா டுபாக்கூர்!
ஆவிகள் பேசுமா?
பேச்சு உடலில் இருந்து வெளியேறும் விதம் குறித்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் ஓர் இலக்கணம் வழியே வரையறுத்திருக்கிறார். 'உந்தி முதலா முந்து வளி தோன்றி ' எனத் துவங்கும் அந்தப் பாடலில் மனித உடம்பில் இருக்கும் பாகங்களையெல்லாம் சர்வ சாதாரணமாக தொல்காப்பியர் கூறாய்வு செய்வதில் வல்லவர் போல காட்டுகிறார். எழுத்ததிகாரத்தின் முதல் பாடலில் நமது அடிவயிற்றில் தோன்றும் காற்று தலையிலும், தொண்டையிலும் நெஞ்சிலும் பரவி, பல்லிலும் நாவிலும் இதழிலும் மூக்கிலும் பட்டு மேல் அண்ணத்தின் வழியே வெளிப்படும் போது பேச்சு தோன்றுகிறது.
ஆவிகளோடு பேசும் கில்லாடிகளுக்கு ஒரு கேள்வி!
உங்களோடு உரையாடும் ஆவிகளுக்கு அடிவயிறு, தலை, நுரையீரல், தொண்டை, பல், நாக்கு, மூக்கு, உதடு, மேலண்ணம் இவையெல்லாம் இருக்கின்றனவா? மரணம் நிகழ்ந்த அடுத்த நொடியே DECOMPOSE துவங்கி உடல் அழுகத் துவங்கி நாற்றம் எடுக்கிறபோது இந்த உறுப்புகளும் கூட அழுகிச் சிதைந்து போகின்றன தானே! இது பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியாது என்கிறீர்களா?
நல்லது ! நாங்களும் அதையே தான் சொல்கிறோம். தெரியாத விடயங்களைச் சந்தைப்படுத்தாதீர்கள். இதனால் உங்களுக்குக் கொஞ்சம் சில்லறை கிடைக்கலாம். ஆனால் சமூகம் நாறிக்கொண்டே இருக்கும்.