For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஏலியன் சாமியை கலாய்க்கலாமா?

05:02 PM Aug 03, 2024 IST | admin
ஏலியன் சாமியை கலாய்க்கலாமா
Advertisement

சேலத்தில் ஏலியனுக்கு ஒரு கோயில் கட்டி இருக்கிறார்கள் என்ற செய்தி இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. எதிர்பார்த்தபடியே கேலி, கலாய்த்தல்கள் நடக்கின்றன. எனக்கு அந்த கேலிகள் புரியவில்லை. முருகன், பிள்ளையார், சிவன், இயேசு, மேரி, அல்லாஹ் போன்றோருக்கெல்லாம் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் யாரும் கலாய்ப்பதில்லை. இவர்களில் சில கடவுளர்களை கலாய்த்தால் அது வன்முறையில் கூடப் போய் முடிகிறது. மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டும், யாரும் புண்படுத்தக் கூடாது, என்று நமக்கு கிளாஸ் எடுக்கிறார்கள். ஆனால் ஏலியனை மட்டும் கேலி செய்யலாமா? ஏலியன்தான் இறைவன் எனும் நம்பிக்கை கொண்டவர்கள் மனதைப் புண்படுத்தலாமா?

Advertisement

சொல்லப் போனால், இந்தப் பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருக்கக் கூடும் என்பதற்கு குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறு இருக்கிறது. (Substantial probability.) பிரபஞ்சத்தில் தொழில் நுட்பத்தில் முன்னேறிய வேற்று கிரகவாசிகள் இருக்கும் சாத்தியக்கூறை வரையறுக்க Drake Equation என்று ஒரு சமன்பாடு இருக்கிறது. நமது Milky Way அண்டத்திலேயே முப்பதுக்கும் மேற்பட்ட தொழில் நுட்பத்தில் முன்னேறிய கிரகங்கள் இருக்கலாம் என்று இந்த சமன்பாடு குறிக்கிறது. யோசித்துப் பாருங்கள்: அல்லாஹ், சிவன், பிள்ளையார், மேரிமாதா போன்றோர் நிஜமாகவே இருக்கலாம் என்பதற்கான அறிவியல் சாத்தியக்கூறு என்ன? ஜீரோ. அவர்கள் மானுடக் கற்பனையில் உருவான கதா பாத்திரங்கள் மட்டுமே என்பதற்கான சாத்தியக்கூறு? 100%!

Advertisement

இதில் இன்னொரு விஷயம். இந்த பூமி, சூரியக் குடும்பம், அண்டங்கள், ஏன் இந்த ஒட்டு மொத்தப் பிரபஞ்சமுமே ஒரு உருவகப்படுத்தல்தான், அதாவது ஒரு simulation ஆக இருக்கலாம் என்று ஒரு அறிவியல் அனுமானம் இருக்கிறது. இதற்கு Simulation Hypothesis என்று பெயர். நிக் போஸ்ட்ரம் போன்ற மதிப்பு மிக்க ஆக்ஸ்போர்ட் அறிஞர்கள் கூட இதனை ஆதரிக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சமே ஏதோ ஒரு வேற்றுப் பிரபஞ்ச ஏலியன் உருவாக்கிய கணினி உருவகம்தான் (Computer Simulation) என்று இந்தத் தியரி வாதிடுகிறது.

இந்த அனுமானத்தின்படி பார்த்தால் இதர தெய்வங்களைக் கும்பிடுவதை விட ஏலியனைக் கும்பிடுவது கொஞ்சம் லாஜிக்கலாகவே இருக்கிறது. ஏனெனில் அவர்கள்தான் நம்மை உருவாக்கி இயக்குபவர்கள்! நமது பிரபஞ்ச simulationஐ இயக்கும் ஏலியன் இதைப் பார்த்து 'பரவாயில்லப்பா, நமக்கு கோயில் எல்லாம் கட்டி கும்புடுறாய்ங்க. இவங்களுக்கு கொஞ்சம் நல்லது செய்வோம்!' என்று simulation programmeஐ நமக்குத் தோதாக மாற்றி எழுதி ஏதாவது செய்யக் கூடும்!

அதற்காக எல்லாரும் சேலத்து ஏலியனுக்கு காவடி எடுங்கள் என்று நான் பரிந்துரைக்கவில்லை. அதனை கலாய்க்கும் அணுகுமுறையை மட்டுமே கேள்வி கேட்கிறேன். ஏனெனில் சிவன், முருகன், ராமர், இயேசு, மேரிமாதா, அல்லாஹ் அல்லது வேறு எந்தக் கடவுளையும் கும்பிடுபவர்கள் யாருக்குமே ஏலியன் சாமியை கலாய்க்கும் தகுதி கிடையாது என்கிறேன். அவ்வளவுதான். In a kind of an elastic logic, worshipping an Alien actually sounds more logical. நீங்கள் ஏற்கனவே யாரோ உருவாக்கி விட்டுப் போன ஒரு அம்புலிமாமா பாத்திரத்தின் முன் மண்டியிடுகிறீர்கள். அவர்கள் வேறு ஒரு அம்புலிமாமா பாத்திரத்தைப் புதிதாக உருவாக்கி இருக்கிறார்கள். அம்புடுதேன்!

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

Tags :
Advertisement