கேம்லின் சுபாஷ் தண்டேகர் காலமானார்!
இந்திய ஸ்டேஷனரி உற்பத்தித் துறையில் தனி இடத்தையும், தனி வாடிக்கையாளர் கூட்டத்தையும் ஆரம்பம் முதல் வைத்திருக்கும் கேம்லின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முழு முக்கிய காரணமானவர் சுபாஷ் தண்டேகர்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு பென்சில் என்றால் உடனே ஞாபகம் வருவது கேம்லின் பென்சில் தான் என்பதும் பல ஆண்டுகளாக தரமான பென்சில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் அவர்களின் பேனாவும், இதர ஐட்டங்களும் எல்லோருக்கும் தெரிந்ததே . இந்த நிலையில் கேம்லின் பென்சில் நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் என்பவர் காலமானார். அவருக்கு வயது 85.
Brand எனும் சொல்லாடல் வரும் முன்னே தரத்தை நிர்ணயம் செய்து விலையில் அதிக லாபம் எதிர்பார்க்காமல் அதனைப் பல தசாப்தங்களாகத் தக்க வைப்பதெல்லாம் மாபெரும் சாதனை.குறிப்பாக ஜியாமெட்ரி பாக்ஸ் அப்போதெல்லாம் எட்டாத கனி தான்.கேம்லின் விலையைக் காட்டிலும் குறைவான விலையில் நட்ராஜ் தான் எங்களுக்குக் கை கொடுத்தது. ஆனாலும், கேம்லின் மீது எப்போதும் கோபமோ வருத்தமோ ஏற்பட்டதில்லை.அதன் வண்ணங்கள் அவ்வளவு அழகு.
ஜியாமெட்ரி பாக்ஸ் இல்லாததால் வகுப்பறைக்கு வெளியே நிறுத்தப்பட்டவர்களைப் பற்றி நீங்கள் கணக்கெடுத்தால் இந்திய மக்கள் தொகையையே தாண்டும்.
காம்பஸ் ஓர் எளிய ஆயுதமாக மாணவர்கள் மத்தியில் இருந்த காலமுண்டு.
ஜியாமெட்ரி பாக்ஸைத் திருடுபவர்கள்
ஜியோமெட்ரி பாக்ஸ் தொலைந்து போனதால் அழுதவர்கள்
உங்கள் நினைவுக்கு வரலாம்
ஜியாமெட்ரி பாக்ஸை மையமாக வைத்து சு.வேணுகோபால் சிறுகதை ஒன்றுண்டு...
ஜியாமெட்ரி பாக்ஸின் மீதான விருப்பங்கள் பற்றி ஆய்வு செய்தீர்கள் எனில் எப்போதாவது எடுக்கப்படும் அஸ்திரம் அதன் பளபளப்பு குறையாமல் நீண்ட காலம் பயணிப்பது. எல்லாவற்றையும் காட்டிலும் முக்கியமானது -ஒரு தொடுகோடு வரைந்தால் உங்களுக்குப் பத்து மதிப்பெண்கள்.
அந்த பாக்ஸை உருவாக்கி 70-களில் தொடங்கி தற்போது வரை பள்ளி மாணவர்கள் பையில் தவிர்க்க முடியாத பொருளாக விளங்க வைத்த சுபாஷ் தண்டேகர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுபாஷ் தண்டேகர் மறைவுக்கு தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1931 ஆம் ஆண்டு தனது சகோதரருடன் இணைந்து சுபாஷ் தண்டேகர், கேம்லின் என்ற நிறுவனத்தை தொடங்கினார் என்பதும் ஆரம்பத்தில் பேனா மைகள் மட்டுமே தயாரித்து வந்த இந்த நிறுவனம் படிப்படியாக பல பொருள்களை தயாரிக்க தொடங்கியது . குறிப்பாக பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகியவற்றை தயாரிப்பதில் கேம்லின் நிறுவனம் புகழ் பெற்றதாக இருந்தது. 2011 ஆம் ஆண்டில் ஜப்பான் நிறுவனம் கேம்ளின் நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட சதவீத பங்குகளை ரூ.366 கோடிக்கு வாங்கியது என்பதும் அதன் பிறகு கோகுயோ கேம்லின் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது இருப்பினும் இந்த நிறுவனத்தின் தலைவராக சுபாஷ் தண்டேகர் தான் கடைசிவரை பதவியேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த சாதனையாளருக்கு ஆந்தை ரிப்போர்ட்டர் சார்பில் அஞ்சலி
அடிசினல் ரிப்போர்ட்
2000த்தின் தொடக்க காலகட்டத்தில் கோகுயோ கேம்லின் என்ற பெயரில் தற்போது செயல்படும் இந்த நிறுவனம் கேம்லின் பெர்மனெண்ட் மார்க்கர் பேனாவை அறிமுகப்படுத்தியது. இந்த தயாரிப்பை சந்தைப்படுத்த பல விளம்பரங்கள் வந்தன.இந்தத் தயாரிப்புக்கு நிரந்தரமான விளம்பரம் தேவைப்பட்டது . மக்கள் மனதில் என்றென்றைக்கும் தங்கும் விதமான விளம்பரத்தை செய்யும் பொறுப்பை இந்தியாவின் மிகப்பெரிய பிராண்டுகளை உருவாக்கும் நிறுவனமான லோவ் லிண்டாஸ்க்கு அளிக்கப்பட்டது.
இந்தியாவின் முல்லன்லோவ் லிண்டாஸ் குழுமத்தின் கிரியேட்டிவ் ஏஜென்சி தான் லோவ் லிண்டாஸ் . மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு பெங்களூரு , சென்னை , கொல்கத்தா , புது தில்லி , புனே போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது லோவ் லிண்டாஸ். 14 பிராண்டுகளை கையாள்கிறது இந்த விளம்பர நிறுவனம். இந்துஸ்தான் யூனிலீவர், ஆக்ஸிஸ் வங்கி, பிரிட்டானியா, பிளிப்கார்ட், கூகுள், ஃப்ரீசார்ஜ், எம்.ஆர்.எஃப், தனிஷ்க் உள்ளிட்ட பல இந்திய மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனம் தனது பிராண்டிங் மற்றும் ஆக்கப்பூர்வமான விளம்பரம் சேவைகளை வழங்குகிறது. அதிகம் யாரும் பயன்படுத்தாத , இதன் பயனை அறியாத மக்களுக்கு இந்த தயாரிப்பை குறித்து அதுவும் முக்கியமாக அதன் சிறப்பை தெரிவிக்கும் ஒரு தரமான விளம்பரம் தயாரிப்பது லோவ் லிண்டாஸ்க்கு ஒரு சவாலாகவே இருந்தது.
இந்த கேம்லின் பெர்மனெண்ட் மார்க்கர் பேனாவுக்கு யாரெல்லாம் முதன்மையான நுகர்வோர் என்று பார்த்தால் கார்ப்பரேட் துறையில் பணி புரிவோர், கூரியர் மற்றும் பேக்கேஜ் பணியாளர்கள் , போக்குவரத்து /சேவை துறையில் , கல்வித்துறையில் பணிபுரியும் மக்கள் தான் அடங்குவார்கள் . இவர்கள் தான் இந்த பேனாவுக்கான வாடிக்கையாளர்கள். எப்போதுமே லோவ் லிண்டாஸ் எந்த ஒரு விளம்பரத்தை வழக்கமான முறையில் கையாளமாட்டார்கள் . நிரந்தர அடையாளத்தை உருவாக்க கூடியது என்று பார்க்கப்போனால் பச்சைகுத்துவது , பாறைகளில் பொறித்திருக்கும் எழுத்துக்கள் அடையாளங்கள் இவை தான் ஞாபகத்திற்கு வரும் . பலத்த யோசனைக்கு பிறகு இவையெல்லாம் ஓரம் கட்டப்பட்டன.
இறுதியாக, .முழு இந்தியாவின் கலாச்சார சின்னமான குங்கும பொட்டு தேர்வானது . அதுவும் இந்திய மக்கள் மனதில் நிரந்தரமான தாக்கத்தை உருவாக்கும் என்று புரிந்து கொண்ட லோவ் லிண்டாஸ் விளம்பர தயாரிப்பில் மும்முரமாக இறங்கியது. திலகத்தை மையமாகக்கொண்ட அந்த விளம்பரம், முகநூலில் வெளியிடப்பட்டு வைரலானது.
’வீ ஆர் இந்தியன்’ (WE ARE INDIANS) என்ற முகநூல் பக்கம் இந்த விளம்பரத்தை 2016-ல் மறுபதிவு செய்தபோது வெறும் 3 நாட்களில் 5,05000 பார்வைகளையும் , கிட்டத்தட்ட 18,000 பகிர்வுகளையும் பெற்றது .
நீங்கள் இதுவரை பார்க்கவில்லையென்றால் உங்களுக்கு இந்த விளக்கம்: (விளம்பரத்தைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=nDa2K28G3eU)
இந்த விளம்பரத்தின் தொடக்கமே இப்படித்தான் … ராஜஸ்தானில் உள்ள ருதாலி பெண்களை பற்றிய சிறிய குறிப்பு ஆங்கிலத்தில் திரையில் காண்பிக்கப்படுகிறது.
வயது முதிர்ந்த ஆண்கள் சோகமான தோரணையில் அமர்ந்துள்ளனர் . குடிசைக்குள் ஒரு மனிதர் மரணப் படுக்கையில் மூச்சுவிட முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார் . டீரென்று காற்று வீசி விளக்கு அணைந்துவிடுகிறது. மனைவி திடுக்கிட்டு போகிறாள் . அதற்குள் கருப்பு நிற ஆடை அணிந்த ருதாலிபெண்கள் வீட்டிற்குள் நுழைந்து அழுகிறார்கள்.அவர்கள் எல்லோரும் அவளது வளையல்களையும் தாலிச் சரடையும் கழற்றி எறிகிறார்கள். பெண்ணின் மங்களகரமான குங்குமப் பொட்டை பல முறை அழிக்க முயல்கிறார்கள் . ஆனால் எவ்வளவோ முயன்றும் அதனை அழிக்க முடியவில்லை.
திடீரென்று அந்த அதிசயம் நிகழ்கிறது. அப்போது திடீரென்று உயிர் பெறுகிறார் படுக்கையில் கிடந்தவர். எல்லாரும் ஆச்சரியம் அடையும்போது ஒரு பிளாஷ்பேக் … அந்தக் கணவர் சிவப்பு கேம்லின் பெர்மனெண்ட் மார்க்கர் பேனாவால் பொட்டு வைக்கிறார். அது, எப்போதும் அழியாத பொட்டாக மாறுகிறது.
ஆம், அவளது கணவனுக்கு மரணமில்லை. நலமான கணவனை மனைவி அரவணைப்பதோடு விளம்பரம் முடிகிறது.
அப்போது ஒரு குரல் கேட்கிறது:- “கேம்லின் நிரந்தரம் … உண்மையில் நிரந்தரம் “
நிஜம்தானே?