தமிழுக்கும், திராவிடத்துக்குமான உறவை அம்பலப்படுத்திய கார்டுவெல்!
கால்டுவெல் இந்தியாவுக்கு நற்செய்தி சொல்ல வந்தவர்தாம்; இறைப் பணிக் கழகத்தின் தூதுவர்தாம்; சமயம் பரப்பும் நோக்கத்தைத் தலை மேல் சுமந்தவர்தாம். ஆனால், தேன் குடிக்கவந்த வண்டு மகரந்தச் சேர்க்கை செய்து, மலர்க்காட்டைக் கனிக்காடாய் மாற்றுவதுபோல், சமயத்தை ஏற்றிப்பிடிக்கப் போந்து திராவிடம் என்ற இனவியல் தத்துவத்தை இமயத்தில் ஏற்றிவைத்த கதைதான் கால்டுவெல் வாழ்க்கை.
1816-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில், ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ராபர்ட் கால்டுவெல். அவருடைய 23-வது வயதில், மதப் பரப்புரைக்காக அவர் ஒரு கப்பலில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். 1837-ஆம் ஆண்டில் புறப்பட்ட அந்தக் கப்பல், வழியில் ஒரு பிரான்ஸ் நாட்டுக் கப்பலோடு மோதியதால், பெரும் விபத்துக்கு உள்ளாகியது. எப்படியோ தப்பித்து வந்த அந்தக் கப்பலில் பயணித்த பயணிகள், 1838-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் தமிழ்நாட்டின் கரையைத் தொட்டனர். தமிழ்நாட்டில் கிறித்துவ மதத்தைப் பரப்புவதற்காக தமிழைக் கற்றுக் கொள்வது முதல் தேவையாக இருந்தது. தமிழைக் கற்கத் தொடங்கிய கால்டுவெல், தமிழ்மொழியால் ஈர்க்கப்பட்டார். மதப்பரப்புரை அவருக்கு இரண்டாம் பட்சமாக ஆயிற்று. தமிழ் ஆய்வே அவருடைய முதல் பணியாக அமைந்தது. தமிழ்மொழியைக் கற்கும்போது, அதனுடைய அழகு, அதனுடைய செழுமை, அதனுடைய தொன்மை மற்றும் அதனுடைய இலக்கிய வளம் ஆகியவற்றால் ஈர்க்கப்படுகிறார் கால்டுவெல். தொடர்ச்சியாகத் தமிழ் மொழியைக் கற்கும்போது தமிழ்மொழியின் வேர் எங்கிருக்கிறது என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார் கால்டுவெல்.
தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சியின்போதுதான் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு நடந்தே செல்கிறார். இடையே திருச்சி, சிதம்பரம், நாகப்பட்டினம், நீலகிரி எனப் பல ஊர்களுக்கு நடைப்பயணமாகச் சென்று திருநெல்வேலியைச் சென்று சேர்கிறார். அப்படிப் பயணம் செய்த பல இடங்களிலும் அந்த மக்களுடைய வட்டார வழக்கு, அந்த மக்களுடைய வாழ்க்கை, அவர்களது தொழில், அவர்களுடைய பொருளாதாரம், அவர்களுடைய சடங்குகள், நம்பிக்கைகள், மதவழிபாடுகள் ஆகியவற்றைப் பற்றி முழுமையாத் தெரிந்து கொள்கிறார். அதன் பிறகே திருநெல்வேலி அருகேயுள்ள இடையன்குடி என்கிற இடத்தைச் சென்று சேர்கிறார் கால்டுவெல். அந்தத் தேடலின்போது, 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' என்ற நூலை எழுதினார். அதில், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் பற்றிய பதிவுகள், ஆங்கிலேயர் வென்ற நிகழ்வுகள் போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, மொழியியல் நடையில் எவ்வாறு மற்றமொழிகளில் தமிழின் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அவர் கூறியுள்ளார். தமிழில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் எவ்வாறு கிரேக்க மொழியில் திரித்துக் கையாளப்பட்டுள்ளது என்பது பற்றியும் அந்த நூலில் தெரிவித்துள்ளார்.
தமிழில் மட்டுமல்லாமல், தமிழோடு தொடர்புடைய மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு உள்ளிட்ட பல மொழிகளையும் அவர் கற்கத் தொடங்கினார். அவருடைய 18 ஆண்டுகால உழைப்பு, 1856-ஆம் ஆண்டு ஒரு பெரும் ஆய்வு நூலாக வெளிவந்தது. அந்த நூல்தான் ‘தென்னிந்திய அல்லது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’என்பதாகும். அந்த நூல் இருபெரும் உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொன்னது. தமிழ், தெலுங்கு போன்றவை, தனி மொழிக் குடும்பங்கள் என்று கூறினார். எனினும் அந்த உண்மையை மிகப்பெரிய சான்றுகளுடன் வெளிக்கொண்டு வந்தவர் கால்டுவெல்தான்! இந்த நூல் தமிழ்நாட்டு சமூக, அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை உருவாக்கிற்று. “திராவிட மொழிக் குடும்பம்’ என்னும் சொல்லிலிருந்து ‘திராவிட மொழி, ‘திராவிட இனம்’, ‘திராவிட நாடு’ போன்ற சிந்தனைகள் இம்மண்ணில் வலுப்பெற்றன. திராவிட இயக்கத்துக்கான விதையை வித்திட்டவர் கால்டுவெல் என்றும் நாம் கூறலாம்.
இலத்தீன், கிரேக்கம், எரேபியம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற வெளிநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற தென்னக மொழிகளிலும் சிறந்த புலமைப் பெற்றிருந்தார். இதன்மூலம் “ஆரிய இன மொழிகள் வேறு, திராவிட மொழி இனங்கள் வேறு என்றும், தமிழுக்கும் வடமொழிக்கும் எவ்வித உறவும் இல்லை என்றும், வடமொழி இன்றியே தனித்து இயங்கக் கூடிய மொழி தமிழ் மொழி” என ஒப்பிலக்கண ஆய்வின் மூலம் உலகுக்கு உணர்த்திய பெருமைக்குரியவர். ஆம்..தென்னிந்திய மொழிக் குடும்பத்தில திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்தவரும் ராபர்ட் கால்டுவெல்தான். பின்னர் தாம் கண்டறிந்தவற்றைக் கட்டுரைகளாகவும் வெளியிட்டார். மக்களின் பழக்கவழக்கம், பண்பாடு, கலாசாரம், வாழ்கை முறை போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியியல் தரவுகளை தமது பயணத்திலேயே சேகரித்தார். அது மட்டுமன்றி, பல்வேறு மொழியியல் அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து அதில் இருந்து குறிப்புகள் எடுத்து ஒப்பிட்டுமுறை செய்து, ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். பின்னர் அவற்றை எல்லாம் தொகுத்து 1856-ல், 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். "தன்னிடையே இடம்பெற்றிருக்கும் சொற்களை அறவே ஒழித்துவிட்டுத் தனித்து உயிர் வாழ்வதோடு... அவற்றின் துணை, சிறிதும் இல்லாமல் வளம்பெற்று வளர்வதோடு முன்பிருந்த நிலையிலும் சிறந்த உயர் தனிச் செம்மொழியாக நிலைபெறும்'' என்றார் கால்டுவெல். அவர் சொல்லிய அந்தஸ்தோடு செம்மொழியாக நிலைபெற்றது தமிழ்.
‘திராவிடம்’ என்ற சொல் தொடக்கத்தில் மொழியை, இனத்தை, நிலத்தைக் குறித்தது என்றாலும், கால ஓட்டத்தில் அது சமூகநீதி என்னும் கருத்தியலுக்கான ஒற்றைச் சொல்லாக ஆகிவிட்டது. அதனால்தான் 1968- ஆம் ஆண்டு, இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்ற போது, பேரறிஞர் அண்ணா அவர்கள் கடற்கரையில் நிறுவிய 10 சிலைகளில் கால்டுவெல் சிலையும் ஒன்றாக இருந்தது.
கால்டுவெல் ஊர் திருத்தியும் சீர்திருத்தியும் பேர்திருத்தியும் ஆற்றிய பெருந்தொண்டுகள் பலவற்றை மறைத்துவிட்டது மறதியின் புழுதி.ஒன்பது பள்ளிகள் உண்டாக்கி, பிள்ளைகளுக்கு அவர் மதிய உணவு தந்த மாண்பு மறந்து போயிற்று. வேட்டி கட்டிய விலங்குகளாய்த் திரிந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் பெற்றுத்தந்த சமூக மரியாதை பேசப்படவில்லை பெரிதாய். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற பேரொளியின் முன்னே அவர் எழுதிய ‘தாமரைத்தடாகம்’, ‘ஞான ஸ்நானம்’, ‘நற்கருணை’, ‘திருநெல்வேலிச் சரித்திரம்’ போன்ற தீபங்கள் மங்கிப்போயின. குங்குமத்தின் குழந்தை போன்ற தேரியின் செம்மண்ணை வியன்னா ஆராய்ச்சிக் கழகத்திற்கு அனுப்பி, உலகில் எங்குமே அறியக் கிடைக்காத அரிய மண் அதுவென்று நெல்லைச் சீமைக்கு அவர் பெற்றுத்தந்த பெரிய பெருமை பெரிதும் அறியப்படவில்லை. படைப்போவியமாய் எழுதிப்பார்த்துப் புடைப்போவியமாய் அவர் எழுப்பிய கிறித்துவத் திருக்கோயில் போதிய கீர்த்தி பெறவில்லை. அந்த இடையன்குடி ஆலயத்திலேயே அவர் திருமேனி அடக்கம் செய்யப்பட்டிருப்பதை அறிவுலகம் தவிரப் பிற உலகம் அறியவில்லை. சமயப் பணி ஆற்ற வந்த கால்டுவெல் சமுதாயப் பணியும் ஆற்றி, திராவிடம் என்ற கருத்தியலை இமயத்தில் ஏற்றி வைத்து இங்கேயே - இந்த மண்ணிலேயே தன் பூத உடலைப் புதைத்துக்கொண்டார். இந்த நூற்றாண்டில் அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தைகளான திராவிடம் - இன உணர்வு - விடுதலை - சுயமரியாதை - தனித்தமிழ் இயக்கம் - தமிழ் - தமிழர் என்ற அனைத்து நெருப்புக்குமான மூலப்பொறி கால்டுவெல்லின் மூளையிலிருந்தே மூண்டது என்பதே நிஜமென்பதை உணர்ந்து அன்னாருக்கு அஞ்சலி செய்வோம்!