பைரி - விமர்சனம்!
புறா பந்தயத்தைப் பின்னணியாக வைத்து புதியதாக ஒரு படம் பைரி என்ற பெயரில் வந்துள்ளது. அப்படியென்றால் இது தனுஷ் நடித்த மாரி படம் போல் இருக்குமோ என்ற சந்தேகம் வரலாம். மாரி’ படத்தில் இடம்பெற்று இருப்பது கரண புறா பந்தயம். அந்த புறா பல்டி அடிக்கும். அந்த புறா எத்தனை பல்டி அடித்தது என்பதை வைத்து, வெற்றியை அறிவிப்பார்கள். பைரி படம் பேசுவது சாதா புறா அல்லது வளர்ப்பு புறா பந்தயம் இதனை டிப்ளர் ரேஸ்னு சொல்வார்கள். இந்த பந்தயத்தில் புறா காலில் முத்திரை போட்டு பறக்க விடுவார்கள். பைரி என்றால் புறாக்களை வேட்டையாடும் ஒருவகை கழுகு இனமாம். அந்த பைரியிடம் சிக்காமல் எவ்வளவு மணி நேரம் புறா அதிகமாக பறக்கிறது என்பதை வைத்து, வெற்றியை அறிவிக்கிறார்கள். ஆக மாரி படத்திற்கும் இந்த படத்திற்கும் சமந்தமில்லை .இப்படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி, 'நாளைய இயக்குநர் சீஸன் 5' இல் பங்கேற்றவர். குறும்படமாக வந்த 'பைரி'தான் அதே பெயரில் இப்போது படமாகியுள்ளது
அதாவது நாகர்கோயில் பகுதியில் அறுகுவலை ஊரில் வாழும் ஹீரோ சையத் மஜித், படித்துவிட்டு வேலைக்கு போகாமல் புறா வளர்ப்பதில் ஈடுபாடு காட்டுவதோடு, புறா பந்தயமும் நடத்தி வருகிறார். அதே ஊரில் பெரிய ரவுடியாக வலம் வரும் வினு லாரன்ஸும் புறா பந்தயம் நடத்துகிறார். புறா பந்தயத்தில் வினு லாரன்ஸ் செய்யும் மோசடியை சையத் மஜித் கண்டுபிடித்து தட்டிக்கேட்கிறார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட, அதனால் நாயகன் எப்படிப்பட்ட சிக்கல்களை எதிர்கொள்கிறார், என்பதை நாகர்கோவில் மக்களின் வாழ்வியலோடு சொல்வது தான் ‘பைரி’ கதையாம்.
ஹீரோ ரோலில் வரும் கேரக்டர் புறா வளர்க்க கூடாது என்று தனது மகன் சபீரை தாய் விஜி சேகர் எவ்வளவோ முறை கண்டிப்பதும் ஒரு கட்டத்துக்கு பிறகு தனது தாய் சொல்லை மீறி புறா வளர்க்க தொடங்கும் சபீர் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பதுபோல் அம்மாவையே வாடி போடி என்று திட்டி தீர்க்கும் அளவுக்கு கோபமாவதும், சபீருக்கு தோழனாக வரும் ஜான் கிளாடியை தன் மகன் கெட்டுப் போவதற்கு நீதான் காரணம் என்று சபீர் தாயார் திட்டி தீர்ப்பதும் கன்னியாகுமரி வட்டார வழக்காம்.. சகிக்கவில்லை.. இப்போதைய இளைஞர்கள் ஒரு சினிமாவில் நாயகன் என்ன செய்தாலும் தன்னுடைய லைப்லையும் அதனை செய்யலாம் என்ற எண்ணத்திற்குள் செல்கின்றனர். படத்தை படமாக பார்க்காமல் அதில் இருக்கும் நெகடிவ்வை விரைவாக எடுத்துக்கொண்டு அதை கெத்து என்று நினைக்கிறார்கள் இப்படி இருக்கையில் பைரி படம் கன்னியாகுமரியில் நடக்கும் உண்மை சம்பவத்தை எடுத்துரைத்தாலும் ஹீரோ எல்லோரையும் அடித்துக்காயப்படுத்திக் கொள்வதுடன் தனது அம்மாவையே டி போட்டு பேசித் திரியும் காட்சிகளை கெத்து என்று நினைத்துக் கொல்லாமல் இது கதைக்காக வைத்திருக்கும் காட்சிகள் என்று ரசிகர்கள் நம்ப வேண்டுமே என்ற கவலை வந்து விடுகிறது.
நம் தம்பி செந்தில் சொன்னது போல் மூச்சு விடாமல் படம் முழுக்க பேசறாய்ங்க… பேசறாய்ங்க… பேசிக்கிட்டே இருக்காய்ங்க, (எல்லோருக்கும் இந்த படு வேகமாக பேசி அதை நாஞ்சில் வழக்கு மொழி என்று சொல்லி விட்டால் மட்டும் ரசிகருக்கு புரியுமா?) கடைசி வரை தொடரும் வில்லுப்பாட்டு பின்னணி இரண்டும் பெரிய வில்லங்கம். அப்புறம் எதற்கு திரைமொழி ? கடைசியில் புறாப் பந்தயப் பின்னணியில் நாஞ்சில் மொழியில், சாதாரண வெட்டுக்குத்து கதைதான் வருகிறது.
கேமராமேன் ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவில் நாகர்கோவில் அழகும், அம்மக்களின் வாழ்வியலும்ம் நேர்த்தியாகவே உள்ளது . அருண் ராஜின் இசையில் பாடல்கள் அந்த நொடியில் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை மோசமில்லை ரகம்தான்.
புறா காட்சிகளில் கிட்டத்தட்ட படத்தில் 950 சிஜி ஷாட்கள் மிகச் சரியாகவே இருக்கின்றன..புறா என்றதும் அதன் அழகான தோற்றம், காதல் தூது என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் நினைவுக்கு வரலாம். இப்போது அந்த லிஸ்ட்டில் பலருக்கும் புறாப் பந்தயமும் சேர்க்க ஆசைப்பட்டு எடுக்கப் பட்ட படத்தில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் இதுவும் கோலிவுட்டில் ரிலீஸான பட லிஸ்டில் ஒரு நம்பராகி இருக்க சான்ஸ் கிடைத்ததை கோட்டை விட்டு விட்டார்கள்!
மொத்தத்தில் பைரி - டேக் ஆஃப் ஆகவில்லை
மார்க் 2.25/5