சியாச்சின் பனி மலையில் பி எஸ் என் எல்-லின் மொபைல் டவர் :இந்திய ராணுவம் அமைப்பு!
உலகிலேயே மிக உயரமான போர்முனையாக அறியப்படுவது சியாச்சின் பனிமலை. இமாலயத்தில் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் 23 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் பனிச் சிகரம் அமைந்துள்ளது. அங்கு ரத்தத்தை உறைய வைக்கும் அளவுக்கு பனி இருக்கும். காலையில் மைனஸ் 25 டிகிரியும், இரவில் மைனஸ் 55 டிகிரியும் வெப்பநிலை நிலவும் என்றால், அங்கு குளிர் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள். இந்த அதிகபட்ச குளிரால் இங்கு தங்குவது என்பது மிகவும் கடினம் ஆகும். மேலும், நல்ல உணவும், குடிநீரும் கூட இங்கு கிடைக்காது. இங்கு பணியாற்றுவதற்கென ராணுவ வீரர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சியாச்சின் உச்சியில் ராணுவ வீரர்கள் 90 நாட்களுக்கு பணியாற்ற வேண்டியிருக்கும். அதன் பிறகு ஷிப்ட் முறையில் மற்ற ராணுவ வீரர்கள் இங்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்தியாவும், பாகிஸ்தானும் அவ்வப்போது சண்டை போடும் இந்த பகுதியில் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் என்ற இந்திய ராணுவப் பிரிவினர் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சியாச்சின் பனிமலையில் முதல் செல்போன் டவரை பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவியுள்ளது. இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் இந்த செய்தியை தனது ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளது. "சியாச்சின் வாரியர்ஸ் பிஎஸ்என்எல்லுடன் இணைந்து, 15,500 அடிக்கு மேல் பணியாற்றிய ராணுவ வீரர்கள் மொபைல் மூலம் தொடர்பு கொள்ள, செய்தியை பரிமாறி கொள்ள இந்த டவர் உதவும். அக்டோபர் 6-ம் தேதி முதல் பிஎஸ்என்எல் பிடிஎஸ் என்ற இந்த டவர் செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுசின் சவுஹான் பகிர்ந்த எக்ஸ் சமூக வலைதளக் குறிப்பில், "சியாச்சின் போர் வீரர்களுக்காக, பிஎஸ்என்எல் முதன்முறையாக சியாச்சின் பனிப்பாறையில் மொபைல் கோபுரத்தை நிறுவியுள்ளது. இப்போது நம் ஹீரோக்கள் தங்களுக்கு அருகில் உள்ளவர்களுடன் அவர்களின் வசதிக்கேற்ப பேசலாம். பி.எஸ்.என்.எல் மற்றும் சியாச்சின் வாரியர்ஸ்க்கு பாராட்டுக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்பட பலர் பாராட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.