தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பிரிட்டன் எம்.பி. தேர்தலில் வென்ற இலங்கை தமிழ்ப்பெண் உமா குமரன்!

07:15 PM Jul 07, 2024 IST | admin
Advertisement

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் தற்போதைய பிரதமர் ரிஷி ஷுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும் . பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்த பிரிட்டன் தேர்தல் முடிவுகள் உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக களமிறங்கியதும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ள உமா குமரன் உலகத் தமிழர்களை பெருமைப்பட வைத்துள்ளார். இலங்கை வம்சாவளி தமிழரான இவர், உழைப்பாளர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் போட்டியிட்ட புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ தொகுதியில் மொத்தம் 54.18 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். அதில், 19,415 வாக்குகளை உமா குமரன் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement

உமா குமரன், எம்.பி, ஸ்டார்ட்ஃபோர்டு அண்ட் போ இலங்கை தமிழ்ப்பெண் உமா குமரன் உமா குமரனின் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள். கடந்த 1980-களில் உள்நாட்டு போரின் போது பிரிட்டன் நாட்டில் குடியேறிய புலம்பெயர் தமிழர்களாவர். கிழக்கு லண்டனில் பிறந்து, வளர்ந்த உமா, அங்குள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். தற்போது ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவில் வசித்து வருகிறார். அவரது குடும்பம் சுமார் 42 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டனில் வசித்து வருகிறது. இவரது குடும்பத்தினர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறி உள்ளதாகவும், உள்நாட்டு போரினால் தங்களின் வாழ்க்கை நிலை மாறியதாகவும் உமா கூறுகிறார். பூமிக் கோளின் பல்வேறு பகுதிகளில் தங்கள் மக்கள் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

படிப்பை முடித்த பிறகு அரசியல் மீது ஆர்வம் கொண்டு தன்னை பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் உமா. NHSல் அதிக அளவிலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியில் அமர்த்தி இருக்கிறார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஐ.நாவின் திட்டமிடல் குழுவில் செயல்பட்டிருக்கிறார். லண்டன் மக்களின் வாழ்க்கையை மாற்றும் திட்டங்களான புதிய வீடுகள், உணவுத் திட்டம் போன்றவற்றை மேயருக்கு வகுத்துக் கொடுக்கும் நபராகவும் உமா இருந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் லேபர் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். பாலஸ்தீன விவகாரம், காலநிலை மாற்றம், தமிழ் சமூகத்தின் முன்னேற்றம், தொகுதி மக்களுக்கு மலிவு விலையிலான வீடு, விரைவான மருத்துவ சேவை, உள்கட்டமைப்பு சார்ந்து நிதி செலவினம் போன்ற வாக்குறுதிகளை இந்த தேர்தலில் அவர் மக்களிடம் அளித்திருந்தார். சமூகம் தனக்கு கொடுத்ததை திருப்பி செலுத்தவே பொது வாழ்விற்கு வந்ததாகக் கூறும் உமா, தன்னுடைய அனுபவங்களை வைத்து கிழக்கு லண்டன் மக்களுக்கு அமைதியான வாழ்வையும் இன்னொரு நம்பிக்கையையும் ஏற்படுத்துவேன் என்று உறுதி அளித்திருந்தார்.

தான் வெற்றி பெற்றால் மக்கள் தங்களை அணுகும் விதத்தில் community-ன் மையப் பகுதியில் ஒரு அலுவலகம் இயங்கும் என்றும் ஸ்டார்ட்ஃபோர்டில் சிறந்த பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதே இலக்கு என்றும் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார். இந்நிலையில், மக்களின் அபிமானத்தை வென்ற உமா தற்போது வெற்றியும் பெற்றுள்ளார். தேர்தலில் தான் போட்டியிடுவது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளதாக கூறி இருந்த உமா, ‘புரட்சி என்பது என் ரத்தத்தில் கலந்தது...’ என்று தெரிவித்திருந்தார். அவரது தாத்தா யாழ்ப்பாணத்தின் முதல் தொழிற்சங்க உறுப்பினர்களில் ஒருவராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
BritishmpSri LankanTamil girlUma Kumaranwon the election!
Advertisement
Next Article