பிரிட்டன்;புது பிரதமராகும் கெய்ர் ஸ்டார்மர் யார்?-முழு பின்னணி!.
தி கிரேட் பிரிட்டன் என்றழைக்கப்படும் நாட்டில் நேற்று (ஜூலை 4) பொதுத்தேர்தல் நடைபெற்றது. சுமார் 650 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் முக்கிய கட்சிகளான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்கும், கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தொடர்ந்து 14 ஆண்டுகளாக ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், இந்த முறை யார் வெற்றி பெறுவார்? என்ற கேள்வி பலர் மத்தியிலும் நிலவி வந்தது இந்த சூழலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பெரும்பான்மையை பிடித்து 14 ஆண்டுகளுக்கு பிறகு கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. 650 தொகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த முறை ரிஷி சுனக் வரலாறு காணாத அளவு தோல்வியை சந்தித்துள்ளார். தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தொழிலாளர் கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. அதே போல் தற்போது தொழிலாளர் கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.மொத்தமுள்ள 650 இடங்களில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு தேவை 326 தேவை. ஆனால் தற்போது வரை தொழிலாளர் கட்சி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளதால் பிரிட்டனின் புதிய பிரதமராக அக்கட்சியை சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். பெரும்பான்மை பெற்றாலும், எந்தெந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி என்ற முழு விவரம் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியமைக்கவுள்ள தொழிலாளர் கட்சிக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் ஸ்ட்ராட்ஃபோர்டு தொகுதியில் போட்டியிட்ட தமிழ் பெண் உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஆட்சியை கைப்பற்றிய வெற்றி மகிழ்ச்சியில் கெய்ர் ஸ்டார்மர் உரையாற்றுகையில் "நாம் அதை செய்தோம்... மாற்றம் இப்போது தொடங்குகிறது" என குறிப்பிட்டார்.இதேபோல், பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், “கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சிக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், ரிஷி சுனக், ஆட்சியை இழப்பது உறுதியானதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
கெய்ர் ஸ்டார்மர் யார்?
ஸ்டார்மருக்கு தற்போது 61 வயது. வழக்கறிஞரான ஸ்டார்மர் அடிக்கடி தன்னை, “உழைப்பாளி வர்க்கப் பின்னணி" கொண்டவர் என்று கூறிக் கொள்வதுடன். அவர் வளர்ந்து வந்த ஆக்ஸ்டட், சர்ரே என்ற சிறு நகரத்தில் உள்ள “pebble-dash semi” எனப்படும் சாதாரண வீடுகளை அடிக்கடி குறிப்பிடுவார். அவரது அப்பா தொழிற்சாலைகளுக்கு தேவையான உபகரணங்களை தயாரித்து பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். அவரது அம்மா நர்சாக பணிபுரிந்தார். அம்மாது ‘ஸ்டில்ஸ்’ என்ற உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியே உடலை தாக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவரால் பேசவும் நடக்காமலும் போய்விட்டது.
கெய்ர் ஸ்டார்மர் படித்து வந்த ரெய்கேட் கிராமர் பள்ளி, அவர் அங்கு சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் தனியார் நிர்வாகத்துக்கு மாறிவிட்டது. அவருக்கு 16 வயது ஆகும் வரை உள்ளூர் நிர்வாகம்தான் அவரது கல்விக் கட்டணத்தை செலுத்தியது. பள்ளிப்படிப்பு முடித்து பல்கலைக் கழத்துக்கு செல்லும் தனது குடும்பத்தின் முதல் நபரானார் ஸ்டார்மர். லீட்ஸ் பல்கலைகழகத்தில் சட்டம் படித்தார், பின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் மேற்படிப்பு முடித்தார்.
1987-இல் அவர் பாரிஸ்டர் பட்டம் பெற்றார் (வழக்கறிஞர்). மனித உரிமைகள் சட்டத்தில் நிபுணராகி கரீபியன், ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத் தண்டனை கைதிகளுக்காக வாதாடினார். 1990களின் இரண்டாவது பாதியில், 'மெக் லைபல்' செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக கட்டணமின்றி வாதாடினார். 'மெக் லைபல்' செயற்பாட்டாளர்கள் மெக்டோனல்ட்ஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் .2008-ல் பிரிட்டன் மற்றும் வேல்ஸ்-ல் அரசு வழக்கறிஞர்களுக்கான இயக்குநர் என்ற பொறுப்பை பெற்றார்.
ஏப்ரல் 2020 இல், தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக கெய்ர் ஸ்டார்மர் தேர்ந்தெடுக்கப்பட்டார். , 2015ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யானார். தொழிலாளர் கட்சியின் தலைவருக்கான தேர்தலின்போது, முதல் சுற்றிலேயே கெய்ர் ஸ்டார்மர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.கட்சியின் தலைவரான பிறகு, "இந்த மாபெரும் கட்சியை புதிய நம்பிக்கையுடன் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி அழைத்துச் செல்வதே தனது நோக்கம்" என்று கூறினார்.
கெய்ஸ் ஸ்டார்மரின் வாக்குறுதிகள்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக முந்தைய பழமைவாத கட்சி எடுத்த முடிவை கெய்ர் ஸ்டார்மர் மிகக் கடுமையாக எதிர்த்தார். அதேநேரம் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரும் போது மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேராது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
பிரிட்டன் பொருளாதார திண்டாட்டம் தொடங்கிப் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில், ஸ்டார்மர் ஸ்திரத்தன்மையையும் மாற்றத்தையும் கொண்டுவருவதாக உறுதி அளித்துள்ளார்.
6,500 புதிய ஆசிரியர்களை பணியமர்த்துதல், குழந்தைப் பராமரிப்பை விரிவுபடுத்துதல் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் இலவச காலை உணவு வழங்குவது உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
மேலும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, பள்ளி மாணவர்களின் மனநலனை மேம்படுத்துவது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் LGBT சமூகத்திற்கான வாக்குறுதிகளும் அடங்கும்.