மாா்பக புற்றுநோய்: இந்தியாவில் பெண்களை அதிகம் பாதிக்கிறது!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 28.2 சதவீதம் மார்பக புற்றுநோயாகும். பிரபல பாலிவுட் நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தாஹிரா காஷ்யப், மஹிமா சவுத்ரி போன்ற 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோயை எதிர்த்து போராடி, சிகிச்சை மூலம் கொடிய நோயை வென்றவர்கள் ஆவர். அதிலும் ஆனால் நீண்ட காலமாக முதியவர்கள் மட்டுமே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் 50 வயதுக்கு குறைவான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவது பெருமளவில் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாகவே பெண்களைப் பாதிக்கும் மிகமுக்கிய நோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். இந்நோயை முழுமையாகக் குணப்படுத்தும் சிகிச்சை பற்றிய ஆய்வுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, இது ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன. காரணங்களை அறிவதன்மூலம் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவதுடன் நோய் பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்பதுதான் இதன் அடிப்படை.
இந்தியாவில் புற்றுநோய் இல்லாத பாரதம் என்னும் பிரசாரத்தை நடத்தி வரும் யுனிக் ஹாஸ்பிடல் கேன்சர் சென்டரின் மெடிக்கல் ஆன்காலஜி துறை தலைவரான டாக்டர் ஆஷிஷ் குப்தா கூறுகையில், ‘‘புற்றுநோய் இனி முதியவர்களின் நோய் அல்ல.இது இளம் வயதினரிடையே, முக்கியமாக 50 வயதுக்கு கீழான பெண் களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. புற்றுநோய் இல்லாத பாரதம் அறக்கட்டளையின் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 40 வயதுக்குட்பட்ட இளம்பெண்களில் சுமார் 20 சதவீதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இளம் வயதினரில் 15 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பது பாதிக்கப்பட்ட நபர்களின் ஆயுளை கணிசமாக அதிகரிக்கும்.
இதற்காக, பரிசோதனை நடைமுறைகளை சிறப்பாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவது முக்கியமானது. குறிப்பாக பரிசோதனைகளின் செலவு குறைக்கப்படுவது போன்றவை இந்தியாவில் அதிகரித்து வரும் மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியம். புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன் மக்கள் பீதி அடைய வேண்டாம்’’ என்றார்.
டெல்லி மேக்ஸ் மருத்துவமனையின் மூத்த கதிரியக்க புற்றுநோயியல் நிபுணரும், லீனஸ் ஆன்காலஜி இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநருமான டாக்டர் வினீத் நக்ரா கூறுகையில், ‘‘தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வது, தாய்ப்பால் கொடுப்பதை குறைப்பது மற்றும் மோசமான உணவுத் தேர்வுகள் உள்ளிட்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள் காரணமாக நகர்ப்புற இளம் பெண்களிடம் மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருகிறது’’ என்றார்.
மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சில காரணங்களும், சூழல்களும் இதோ.
*ரத்த உறவுகளில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால், அவர்களின் சந்ததியினர் பாதிக்கப்படலாம். உறவுகளில் குறிப்பாக, அம்மா, உடன்பிறந்தவர், குழந்தை போன்றோருக்கு அவரவர்களின் மெனோபாஸூக்கு முந்தைய காலத்தில் மார்பகப் புற்று இருந்திருந்தால், உங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்பட 50 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது.
* ஏற்கெனவே ஒருமுறை புற்றுநோய் பாதித்திருந்தால், மீண்டும் வர வாய்ப்பு அதிகம். இவர்கள், தொடர் பரிசோதனைகளைத் தவிர்க்கக் கூடாது. மருத்துவரின் அறிவுரையுடன் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மார்பகத்தில் மேமோகிராம் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளவும்.
* சிறுவயதில் ஏதேனும் பாதிப்பு காரணமாகத் தீவிர கதிரியக்க சிகிச்சைகளுக்கு உட்பட்டிருந்தால், வருங்காலத்தில் புற்றுநோய்
ஏற்படலாம். இந்தப் பாதிப்பு `ஹாட்ஜ்கின்'ஸ் நோய்' (Hodgkin's disease) எனக் கூறப்படுகிறது. மற்றவர்களைக் காட்டிலும், கதிரியக்கத்துக்கு உட்பட்டவர்களுக்குப் புற்றுநோய் வர 10 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது. மார்புப் பகுதியில் அதிக கதிரியக்க சிகிச்சைக்குச் செய்தவர்களும், எட்டு முதல் பத்து வயதுக்குள் கதிரியக்க சிகிச்சைக்கு உட்பட்டவர்களும் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.
* 11 வயதுக்கு முன்பே பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு, `ஈஸ்ட்ரோஜென்' சுரப்பு அதிகமாக இருக்கும். அதனால், வருங்காலத்தில் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம். இந்தக் குழந்தைகளுக்கு மற்றவர்களை விடவும், இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது.
* `மெனோபாஸ்', சரியான வயதில் வராமல், இயல்பைவிடத் தள்ளிப்போனாலும், மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம். 55 வயதைக் கடந்து மெனோபாஸ் ஏற்படும் பெண்களுக்கு, புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம். மற்றவர்களை விடவும், இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது என்பதால், கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.
* 30 அல்லது 35 வயதுக்குப் பிறகு, முதல் குழந்தையைப் பெறும் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடும்.
* வாழ்நாள் முழுவதும், கர்ப்பம் அடையாத பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரக்கூடும்.
* இரவுப் பணியில் அதிகம் வேலைசெய்யும் பெண்களுக்கு, `மெலோடினின்' ஹார்மோன் சுரப்பு குறையத்துவங்கும். இது சில வருடங்களை வரை தொடர்ந்தால், மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம்.
* மாசு கலந்த காற்றை அதிகம் சுவாசிக்கும் பெண்களுக்கும், வாய்ப்பு அதிகம். குறிப்பாக, வாகன நெரிசல்களுக்கு மத்தியில் நீண்டகாலம் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரலாம்.
* புற்றுநோய்க்கான காரணிகளில் குறிப்பாக `ஆடட் எக்ஸ்போஸர்' (Added Exposure) என்பது பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
நிலவளம் ரெங்கராஜன்