தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பிராமண மரபணு என்ற ஹேஸ்டேக் வைரலும், கொஞ்சம் விளக்கமும்!

02:08 PM Oct 11, 2024 IST | admin
Advertisement

சில பல நாட்களுக்கு முன்னரே 'பிராமணர் என்று சொல்வதற்கு தயங்கும் சூழ்நிலை உள்ளது. அவ்வாறு கூறிக் கொள்வதில் பெருமை கொள்ளுங்கள்' என, பெங்களூரைச் சேர்ந்த, தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அனுராதா திவாரி கூறியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றதாக செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து இதைத் தொடர்ந்து, 'பிராமின் ஜீன்' எனப்படும் பிராமண மரபணு என்ற ஹேஸ்டேக், சமூக வலைதளத்தில் பிரபலமாகி வந்தது.

Advertisement

இச்சூழலில்

#BrahminGenes என்று தனது காரின் மேல் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்ட பெண்மணி ஒருவரின் ட்வீட் வைரல் ஆகி வருகிறது. அந்த ட்வீட்டில் 'Torchbearer of Hinduism' என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார். அதாவது 'இந்து மதத்தின் பெருமையை உயர்த்திப் பிடிப்பவர்' என்று அர்த்தம்.மரபணுவியலின்படி பிராமணர்களுக்கு என்று தனி ஜீன் - மரபணு - கிடையாது. இந்தியர், அரேபியர், அமெரிக்கர் என்றே கூட தனி மரபணு இல்லை. வெள்ளையர், கறுப்பர், சீனர் என்றும் கிடையாது. அவ்வளவு ஏன், மானுட மரபணுவே கூட ரொம்பவும் தனித்துவமானது இல்லை. நமது மரபணு, சிம்பன்சியின் மரபணுவுடன் 99% ஒத்துப் போகிறது. பொனோபோ குரங்குகளுடன் 98.7%, கொரில்லாக்களுடன் 98%, ஓரங்குட்டானுடன் 97% ஒற்றுமை என்று பட்டியல் போகிறது. பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலேயே கூட மரபணு ஒற்றுமை சுமார் 85% இருக்கிறது. பன்றிகளின் இதயம் அளவிலும் செயல்பாட்டிலும் ஏறக்குறைய மனித இதயத்தை ஒத்திருக்கிறது. அதனால்தான் இதய மாற்று அறுவை சிகிச்சையில் பன்றிகளின் இதயத்தை மனிதர்களுக்குப் பயன்படுத்தலாமா என்ற ஆய்வுகள் வெற்றிகரமாக நடந்திருக்கின்றன.

Advertisement

ஆனால் புவியியல், உணவுப் பழக்கங்கள், தட்பவெப்ப நிலை, குலப்பிரிவுக்குள் திருமணம் போன்றவை காரணமாக மரபணுவில் சில சிறிய மாற்றங்கள் உருவாகும். இவற்றை வைத்து மரபணுக்களை வகைப்படுத்துவார்கள். இதற்கு haplogroup என்று பெயர். பிராமணர்களுக்கு என்று சில haplogroup வகையறைகள் இருக்கின்றன. இதுவும் தனித்துவம் அல்ல. இவை மத்திய ஆசியா, மத்திய ஐரோப்பாவில் சில பகுதிகளில் இருக்கும் மக்களுடன் ஒத்துப் போகின்றன என்று கண்டறிந்து இருக்கிறார்கள். இந்தப் பிராந்தியங்களில் மொத்தம் 12 ஏரியாக்களில் உள்ள வெவ்வேறு மக்களுடன் இவை ஒத்துப் போகின்றன. பிராமணர் மட்டுமல்ல, உயர்த்திக் கொண்ட இதர சாதிகளின் haplogroupகளும் இவற்றுடன் இணைகின்றன. (இந்த மரபணு ஆராய்ச்சியை வைத்துதான் ஆரியக் குடியேற்றத்தை அறுதியாக நிரூபித்திருக்கின்றனர்.)எனவே, அதிலும் பிரச்சினைதான். தனித்துவம் என்று எதுவும் இல்லை. அறிவியல் பூர்வமாக குறிப்பிட வேண்டுமென்றால் பெருங்குரங்கு மரபணு என்று நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதுதான் துல்லியமாக இருக்கும். எனவே, சாரி மேடம். #GreatApeGenes! 💪

அடுத்ததாக, இந்து மதத்தையும் பிராமணியத்தையும் போற்றுபவர் ஒரு பெண்ணாக இருப்பதில் ஆச்சரியப்படுகிறேன். அவர் உயர்த்திப் பிடிக்கும் இந்து மதம் இன்று அமுலில் இருப்பதா? அல்லது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலவி, 19ம் நூற்றாண்டு வரை அமுலில் இருந்த இந்து மதமா என்று அவர் தெளிவுபடுத்த வேண்டும். காரணம் இந்த இரண்டுமே வெவ்வேறு மதங்கள். இன்றைக்கு பரவலாக அமுலில் இருக்கும் மதம் ராஜா ராம் மோகன்ராயில் துவங்கி இறுதியில் அம்பேத்கர், நேரு வரை பற்பல செக்யூலர் தலைவர்களின் கடும் முயற்சியில் பல்வேறு சீர்திருத்தங்களை உள்வாங்கி, பெருமளவு மென்மைப்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால், 19ம் நூற்றாண்டு மத்தி வரை வழக்கில் இருந்த மதம் உலகிலேயே மோசமான ஒன்று. தனது சமூகத்தில் பெரும் பகுதியை மைய நீரோட்டத்தில் இருந்து தள்ளி வைத்து, பெண்களை குரூரமாக ஒடுக்கி, சித்ரவதை செய்த ஒன்று. ஒரு பெண் இந்து மதத்தை உயர்த்திப் பிடிப்பது என்பது உண்மையில் ஒரு யூதர் ஒருவர் நாஜி சிந்தனையை உயர்த்திப் பிடிப்பதற்கு சமம். (எந்த ஒரு மதத்தையும் அந்த மதத்தைச் சேர்ந்த பெண்கள் போற்றுவது இதற்கு சமம்தான் என்பது தனி.)

பண்டைய பிராமண சமூகத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் தகுதியும் இருந்ததில்லை. கீதையில் அவர்களை வைசிய, சூத்திரர்களுடன் இணைத்து வைத்துதான் கிருஷ்ணர் பேசுகிறார்.

'அர்ஜுனா, யாராக இருந்தாலும் - அவர்கள் கீழ்மையில் (பாவ யோனி) பிறந்த பெண்கள், வைசியர்கள் சூத்திரர்களாக இருந்தாலும் - அவர்களுக்கு நான் உயர் நிலையை அளிப்பேன்.'
(பகவத் கீதை, 9-32)

கிருஷ்ணராவது பரவாயில்லை; மகாபாரதம் இன்னும் ஒரு படி மேலே போகிறது.

'பெண்களை விட அதிக பாவம் மிக்க உயிரினம் வேறு கிடையாது. பெண் என்பவள் சுடர் மிக்க நெருப்பாவாள். தைத்தியன் மயனால் உருவாக்கப்பட்ட மாயை அவள். கத்தியின் கூர்முனை அவள். அவள் நஞ்சவன். பாம்பவள். நெருப்பவள். வாழும் பொய். பெண்களை பிரம்மனாலேயே கட்டுப்படுத்த இயலாது.'
(மகாபாரதம், அனுசாசன பர்வம், 40)

'மனைவிக்கு தாகம் ஏற்பட்டால் கணவனின் கால்களைக் கழுவி அந்த நீரைத் தலையில் தெளித்து விட்டுப் பருக வேண்டும். எந்தப் பெண் கணவனை விட்டு விட்டு சுவையான உணவுகளை உண்கிறாளோ அவள் (மறு ஜென்மத்தில்) காட்டுப் பன்றியாகவோ அல்லது தன் மலத்தை தானே உண்ணும் வௌவாலாகவோ பிறப்பாள்.'(ஸ்கந்த புராணம், காசி காண்டம், பதிவ்ரதாக்யானம்)

இப்படியெல்லாம் பெண்களை வர்ணித்த ஒரு மதத்தை, உடன்கட்டை, கல்வியின்மை, மாதவிடாய் சார்ந்த அடக்குமுறைகள், விதவை சடங்குகள் என்று 3,000 ஆண்டுகளாக பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கிய ஒரு மதத்தைத்தான் உயர்த்திப் பிடிக்கிறாரா என்று அவர் விளக்க வேண்டும். அந்த மதம் தொடர்ந்திருந்தால் இந்தப் பெண்மணி கல்வி கற்றிருக்க முடியாது. பெண்களுக்கு சொத்துரிமை இல்லாததால் ஒரு நிறுவனத்தை நிறுவி நடத்தி இருக்க முடியாது. கார் வாங்கி இருக்க முடியாது. அந்தக் காரில் ஸ்டிக்கர் ஒட்டி இருந்திருக்க முடியாது.

இந்தக் கொடுமைகளை எல்லாம் ஒழித்து, பெண்களுக்கு முடிந்த அளவு சம உரிமை அளித்து, கல்வி, திருமண உரிமை, சொத்துரிமை, மணமுறிவு உரிமை என்றெல்லாம் கொடுத்து அவருக்குக் கார் வாங்கும் அருகதையை வழங்கியது செக்யூலரிசம். ஆனால் அவரோ நான் 'பாவ யோனியில்தான்' பிறந்தவள், எனக்கு இந்தக் கார், இந்த வேலைகளுக்கெல்லாம் அருகதை இல்லை என்று அவரே அறிவித்துக் கொள்கிறார். ஆழ்ந்த ஆறுதல்கள் மேடம்.

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

Tags :
BrahminBrahminGenesCasteismreservationtrendingwomanபிராமின்பெண்
Advertisement
Next Article