போர்ன்விடாவில் சர்க்கரை அளவு குறைந்தது!-சோசியல் மீடியா மூலம் செய்தி பரவிய நிலையில் நடவடிக்கை!
சோசியல் மீடியாவால் எந்த அளவிற்கு ஆபத்து உள்ளதோ, அதில் சில நன்மைகளும் உள்ளது. அப்படி ஒரு விஷயம்தான் சமீபத்தில் நடத்துள்ளது. குழந்தைகள் அதிக விரும்பி சாப்பிடும் போர்ன்விடாவில் அதிக அள்வு சர்க்கரை இருப்பதாக சமூக ஊடகத்தில் வெளியான வீடியோவை அடுத்து, போர்ன்விடா உடனடியாக அதற்கு விளக்கமளிக்குமாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights ) கேட்டுக் கொண்ட செய்தி பரவி சர்ச்சையானதை அடுத்து, போர்ன்விடாவில் சர்க்கரை அளவை அந்த நிறுவனம் தானாக முன்வந்து குறைத்துள்ளது.
இந்தியாவில் குறிப்பிட்ட சதவீத மக்கள் தங்கள் குழ்ந்தைகளுக்கு பாலில் போர்ன்விடாவை கலந்து கொடுத்து வருகின்றனர். அதில் அதிக ஊட்டச் சத்து இருக்கும் என நம்பியே மக்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து பானங்களை அளிக்கிறார்கள், இந்நிலையில் நம் நாட்டில் இளம் சமூக ஊடக பிரபலங்களில் ஒருவர் ரேவந்த் ஹிமந்த்சிங்கா. ஏப்ரல் மாதம் மத்தியில் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு வீடியோதான் பெரும் சர்ச்சையானது. நாடெங்கும் மிகப் பிரபல ஆரோக்கிய பானங்களில் ஒன்றான போர்ன்விடாவுக்கு எதிராக அந்த வீடியோ அமைந்திருந்தது. போர்ன்விடா ஆரோக்கிய பானத்தின் கவரில் குறிப்பிடப்பட்டிருந்த புள்ளி விவரங்களை வைத்தே, போர்ன்விடாவுக்கு எதிராக அந்த வீடியோவில் ரேவந்த் முழங்கியிருந்தார்.ஆரோக்கிய பானத்தில் ஆரோக்கியத்தை விட குழந்தைகளுக்கு நீரிழிவை உருவாக்கும் காரணிகளே அதிகரித்திருப்பதாக தொடங்கும் அந்த வீடியோ, போர்ன்விடா தனித்துவ நிறத்துக்கு காரணமான நிறமி, புற்றுநோய்க்கு வித்திடக்கூடியது என்று முடிந்திருக்கும்.
குறிப்பாக போர்ன்விடாவில் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரையின் அளவு குறித்தும் ரேவந்த் கவலை தெரிவித்திருந்தார். இந்த அதிகப்படி சர்க்கரை அளவு குழந்தைகள் மத்தியில் மிகைபருமன் மற்றும் அது தொடர்பான இதர பிரச்சினைகளுக்கு காரணமாவதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.போர்ன்விடா என்ற ஒற்றை நிறுவனத்துக்கு எதிராக மட்டுமன்றி, ஆரோக்கிய பானங்கள் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு ரகங்களின் பெயரில் இந்தியர்களை ஆட்டுவிக்கும் நிறுவனங்கள் மற்றும் அவர்களின் தயாரிப்புகளுக்கு எதிராகவும் ரேவந்த் ஹிமந்த்சிங்கா தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதற்கு போர்ன்விடா நிறுவனம் கடுமையாக எதிர்வினையாற்றியது. ’70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் மக்களின் அபிமானத்தை பெற்றிருக்கும் போர்ன்விடாவின் நற்பெயருக்கு ரேவந்த் ஊறுவிளைவித்து விட்டார்; அவரது வாதங்கள் அனைத்தும் அறிவியல் முறைக்கு அப்பாற்பட்டது; எங்களது தயாரிப்பு அனைத்தும் முழுமையான பரிசோதனை மற்றும் உணவு அறிவியலாளார்களின் வழிகாட்டுதலின் கீழாகவே தயாரிக்கப்படுகின்றன’ என்றெல்லாம் வாதங்களை அடுக்கியது.
அதே சமயம் இந்த வீடியோ தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) பார்வைக்கு சென்றுள்ளது, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் ஒரு ஆரோக்கிய பானமாக Bournvita தன்னை விளம்பரப்படுத்துகிறது, ஆனால் அதில் அதிக சதவீத சர்க்கரை மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய பிற பொருட்கள் உள்ளன என்று NCPCR கூறியது.
அதனையடுத்து இந்தியாவின் மொண்டலெஸ் இன்டர்நேஷனல் தலைவர் தீபக் ஐயருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள என்சிபிசிஆர், தலைவர் பிரியங்க் கனூங்கோ, சுகாதார பான உற்பத்தியாளரிடம் விரிவான அறிக்கை அல்லது விளக்கத்தை ஏழு நாட்களுக்குள் கமிஷனிடம் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.மேலும் சிபிசிஆர் சட்டம், 2005 இன் பிரிவு 13 இன் கீழ் ஆணையம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி, தவறான விளம்பரங்கள், பேக்கேஜிங் மற்றும் லேபிள்கள் அனைத்தையும் தயவுசெய்து மதிப்பாய்வு செய்து திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறது. இந்தக் கடித அறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து சில நாட்களுக்கு cp.ncpcr@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் , தபால் மூலமாகவும் அனுப்பலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை அடுத்து போர்ன்விடா தங்களது நற்பெயரை நாசம் செய்திருப்பதாக ரேவந்துக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கையையும் முன்னெடுத்தது. இதை எதிர்பார்க்காததால் , மேற்படி வீடியோவை தனது அனைத்து சமூக ஊடக தளங்களில் இருந்தும் நீக்கிய ரேவந்த் “போர்ன்விடாவை விமர்சித்ததற்காக இந்தியாவின் மிகப்பெரும் சட்ட நிறுவனம் எனக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனை எதிர்கொள்ளும் திராணி எனக்கில்லை” என்ற விளக்கத்தோடு, போர்ன்விடாவிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து போர்ன்விடா விமர்சன வீடியோவை ரேவந்த் அகற்றியபோதும், அதன் பிரதிகள் இணையத்தை சூறாவளியாக சுழன்றடித்தன.
அதன் விளைவாக தற்போது போர்ன்விடா நிறுவனம் இறங்கி வந்துள்ளது. சர்ச்சை எழுந்த 8 மாதங்கள் கழித்து, போர்ன்விடாவில் உள்ள சர்க்கரையின் அளவை சுமார்14 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலும், போர்ன்விடா பேக்கிங்கின் மேற்புறத்தில் வெளியான, புள்ளி விவரங்களில் இருந்தே பெறப்பட்டுள்ளன. 8 மாதங்கள் கடந்து தனது கோரிக்கை பலித்திருப்பதாக தற்போது ரேவந்த் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.