For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

’பாட்டல் ராதா’ -விமர்சனம்!

05:36 PM Jan 23, 2025 IST | admin
’பாட்டல் ராதா’  விமர்சனம்
Advertisement

ற்றேறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பார்ட்டி என்றாலே 5-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஒன்றாக குழுமி நலம் விசாரித்து இனிப்பு, காரம், காபி வகைகளையும், உணவு பதார்த்த வகைகளையும் உட்கொள்வதாகவே இருந்து வந்தது. அதில் வெகுசிலரே மதுபானங்களை அருந்துவர். ஆனால், தற்போது பார்ட்டி என்றாலே மதுவிருந்து என்றாகிவிட்டது. 100 பேர் மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்றால், அதில் 75 பேர் ஆண்கள், எஞ்சிய 25 பேர் பெண்கள் என்பது அதிர்ச்சிகரமான தகவல்.அதிலும் இப்போதெல்லாம் கல்யாணம் என்றாலும் குடி, கருமாதி என்றாலும் குடி, வேலை கிடைத்தாலும் குடி, வேலை போனாலும் குடி... இப்படிக் குடித்துக் குடித்து, தமிழ்க் குடியே பெருங்குடிகாரக் கூட்டமாகி இருக்கிறது இன்று. ஊருக்கு ஒதுக்குப்புறமாக யாருக்கும் தெரியாமல் குடித்த காலம் மலையேறிவிட்டது. ஊருக்கு உள்ளேயே கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் நடுநாயகமாக மதுக் கடைகள் வீற்றிருக்கின்றன. இதனால், டீன் ஏஜ் வயதினர் மட்டும் அல்ல, 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்கூட குடிக்கின்றனர். மது அருந்துவது ஒழுக்கக்கேடான செயல் என்ற நிலைபோய், குடிக்கவில்லை எனில் கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.இச்சூழலில் ‘குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்…’ என்று மதுப்பாட்டிலில் அச்சடித்த வாசகத்தின் பொருள் புரியாத ஒருவனின் குடி எல்லை மீறிப் போய் குடிப்பழக்கம் குடி நோயாகவே மாறிவிட்டால் என்ன செய்ய வேண்டும் – எப்படித் திருந்தி வாழ முயல வேண்டும் என்பதை பாசிட்டிவாகவும், ப்ரெண்ட்லியாகவும் சொல்லி அசத்தி இருக்கிறார்கள் பாட்டல் ராதா டீம்.

Advertisement

மேஸ்திரி -அதுவும் டைல்ஸ் பதிப்பதில் விற்பன்னரான நாயகன் குரு. சோமசுந்தரம்,‘டைல்ஸ் ராதாமணி ‘ யாகப்பட்டவர் ஏகப்பட்ட கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். அப்பேர்பட்டவரின் கனவு உலகம் ஒரு நாள் மெய்ப்படும் என்ற எதிர்பார்ப்பில் அவருடன் கைகோர்க்கிறார் நாயகி சஞ்சனா நடராஜன். இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு பிள்ளைகள். இந்த அழகான குடும்பம், நாயகனின் மதுப்பழக்கத்தினால் எப்படியாப்பட்ட அழிவை நோக்கி தள்ளுகிறது என்பதையும், அதில் இருந்து தனது கணவரை காப்பாற்ற போராடும் மனைவியின் முயற்சி, அந்த முயற்சியினால் ஏற்படும் விபரீதம், அதில் இருந்து நாயகன் மீண்டாரா? இல்லையா? என்பதையும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதை அறியாமல் பிரியமானவர்களின் அறிவுரைகளை நிராகரிப்பவர்களை எச்சரிக்கும் விதமாக சொல்வதே ‘பாட்டல் ராதா’ படக் கதை.

Advertisement

கமிட் செய்த ஒவ்வொரு பாத்திரங்களுக்கு முழுமையான நியாயம் செய்துவிடும் ‘ பட்டறை ‘ தீட்டப்பட்ட ஆக்டர் குரு சோமசுந்தரத்துக்கு இந்த பாட்டல் ராதா வேடம் பாட்டலுக்கேற்ற மதுவாய் பொன் நிறத்தில் ஜ்வலிக்கிறது. ஒரு குடி நோயாளி தன் வாழ்வில் என்னவெல்லாம் அவமானங்கள் பட நேருமோ அத்தனையையும் அற்புதமாக தன் நடிப்பின் மூலமாக வெளிக்காட்டி இருக்கிறார் குரு. சோமு. “நான் குடிக்கக் கூடாதுன்னுதான் நினைக்கிறேன் ஆனா திடீர்னு என்னமோ ஆயிடுது..!” என்று சஞ்சனாவிடம் அவர் மருகும் போது நமக்கே பாவமாக இருக்கிறது.

ஹீரோவின் மனைவியாக நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன், குடியால் பாதிக்கப்படும் குடும்பத் தலைவிகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். அதிலும் “நான் வாழ வைக்கிறேன் வான்னு ஒவ்வொருத்தனும் கையைப் பிடிச்சு இழுக்கிறான்… சேலைக்குள் கை விடுறான்… அம்மணமாக நிற்கிறான்… என்றெல்லாம் சொல்லும்போது கெதக் என்கிறது.மேலும்

வில்லத்தனம் மற்றும் ஜாலியான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஜான் விஜய், மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார். அதிலும், கிளைமாக்ஸ் நெருங்கும் போது தனது வாழ்க்கைப் பற்றி சொல்லி கண் கலங்கும் காட்சியில், ஒட்டு மொத்த பார்வையாளர்களையும் கண்ணீர் சிந்த வைத்துவிடுகிறார். குழந்தைகளாக வரும் சிறுவன், சிறுமியும் கவனிக்க வைத்து விடுகிறார்கள்.

மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன். இந்தப் படத்தின் உணர்வு கலையாமல் பாடல்களிலும் பின்னணி இசையிலும் மயக்கி இருக்கிறார் ஷான்.

கேமராமேன் ரூபேஷ் ஷாஜியின் ஒளிப்பதிவு ஒரு வாழ்வைக் கண்முன் காட்டி இருக்கிறது.

குடிப்பழக்கம், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், திருந்துவது குறித்து படத்தில் காட்டப்பட்டாலும் கதை புதிது இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்க முடிகிறது.கொஞ்சம் டாக்குமெண்ட் ரித் தனம் தெரிந்தாலும் மிக முக்கியமான படம் தான் இறுதி 20 நிமிடங்கள் அருமை. முதல் பாதி கொஞ்சம் தடுமாறுகிறது, குடிகாரர்கள் உலகில் எவ்வளவோ இருக்கிறது, எத்தனையோ சுவாரஸ்யங்கள் இருக்கிறது அதில் புகுந்து விளையாடியிருக்கலாம்.போனை நோண்ட வைத்து விடுகிறார்கள். ஆனால் இரண்டாம் பாதி ஓகே.

மொத்ததில் - பாட்டல் ராதா - நல்ல தீம் மூவி

மார்க் 3/5

Tags :
Advertisement