போஸ் வெங்கட் இயக்கிய 'சார்' பட அப்டேட்ஸ்!
நாம் வாழும் சமூகத்தில் கொடூர சாதிவெறி தலைவிரித்தாடுவதையும் அதன் விளைவாக நடக்கும் ஆணவக்கொலையையும் கதைக்களமாகக் கொண்ட `கன்னிமாடம்' படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான நடிகர் போஸ்வெங்கட் படத்துக்குப் பிறகு நடிகர் விமல் நடிப்பில் உருவாக்கியிருக்கும் படம் சார்.இப்படத்தில், விமலுடன்,சாயாதேவி, ஸ்ரீராம் கார்த்திக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.கல்வியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் இனியன். போர்த்தொழில் படப்புகழ் ஶ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.இப்படத்துக்கு, இசையமைப்பு சித்து குமார். கலை இயக்கம் பாரதி கவனித்துள்ளார்.
எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் (SSS Pictures) சார்பில் சிராஜ்.எஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் வழங்குகிறது. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.விஜய்யின் திகோட் படத்துக்குப் பிறகு அந்நிறுவனம் வெளியிடும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு கல்வியின் அத்தியாவசியத்தைப் புரிய வைக்கும் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலேயே சார் திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.இப்படம் அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.வருகிற அக்டோபர் பத்தாம் தேதி ரஜினிகாந்த்தின் வேட்டையன் படம் வெளியாகவிருக்கிறது.அதனால் அடுத்த வாரம் தங்களது படத்தை வெளியிட சட்டென முன்வரமாட்டார்கள். ஆனால்,சார் படக்குழுவினர் படத்தின் மீதான நம்பிக்கை காரணமாக அக்டோபர் 18 இல் வெளியிட முன்வந்திருக்கிறார்கள்.
இந்தப்படம் மூன்று காலகட்டங்களில் ஆசிரியராக இருப்பவர்களைப் பற்றி பேசுகிறது. முடிந்த அளவு மிகச்சிறப்பாக அதைச் செய்திருக்கிறார்கள். இந்தப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம். எனக்கு ஏற்புடைய படத்தில் என் பெயர் இருப்பது எனக்குத் தான் பெருமை என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருந்தார்.அவர் மட்டுமின்றி படம் பார்த்த பலரும் படத்தைப் பாராட்டிப் பேசி வருவதால் படக்குழு உற்சாகமடைந்து வெளியீட்டு வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது.