For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தமிழகத்தில் பிறந்து வளர்ந்த தகவல் & ஒலிபரப்புத்துறை அமைச்சர் முருகனுக்கு பொதிகை என்ற தமிழ்ச்சொல் மீது ஏன் அவ்வளவு வெறுப்பு?

07:07 PM Nov 16, 2023 IST | admin
தமிழகத்தில் பிறந்து வளர்ந்த  தகவல்   ஒலிபரப்புத்துறை அமைச்சர் முருகனுக்கு பொதிகை என்ற தமிழ்ச்சொல் மீது ஏன் அவ்வளவு வெறுப்பு
Advertisement

ப்போது கைக்குள் அடங்கி இருக்கும் ரிமோட்டில் கணக்கில் அடங்காத எத்தனையோ ‘டெக்கி’யான டிவி-க்களும், சேனல்களுமாக விஷூவல் மீடியா விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆனால் 70-களின் இறுதியில் பிறந்தவர்கள் தொலைக்காட்சியை அபூர்வமாகப் பார்த்தார்கள். அன்றைய காலத்தில் ரேடியோ மட்டுமே பழகியி இருந்தவர்களுக்கு புதுவரவாக ஆச்சர்யமூட்டியது தொலைக்காட்சி. கிராமத்துக்கு ஒருவரின் வீட்டில் மட்டுமே டிவியைப் பார்க்கமுடியும். டிவியை மரப்பெட்டிக்குள் பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். அந்த நாள்களில் நமக்கு பரிச்சயமானது தூர்தர்ஷன் மட்டுமே. அது தூர்தர்ஷனாக இருந்த நேரத்தில் ஒவ்வொரு மொழிக்கும் ஏற்றது போல ஒரே சேனலில் நிகழ்ச்சியைப் பிரித்து வழங்கியிருக்கும் அரசு. அதில் அன்றைய இந்திய ஒருமைப்பாட்டையே கவனித்திருக்க முடியும். இன்று எத்தனையோ டெக்னாலஜி வளர்ச்சிகளோடு புதுப்புது சேனல்கள் உருவாகிவிட்டன. அதனாலேயே பொதிகையாக மாறியிருக்கும் டிடியை மறந்துவிட்டோம். சேனல் மாற்றும்போதுகூட ஸ்கிப் ஆகிவிடும். இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள், ஒருநிமிடம் உங்கள் கேபிளில் பொதிகை சேனல் எந்த எண்ணில் இருக்கிறது என்று சொல்லமுடியுமா? இதுதான் காலமாற்றம்! ஹூம்.. அது போகட்டும்..

Advertisement

1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தேதிதான் முதன் முதலாக மத்திய ஒளிபரப்பு ஆணையத்தின் கீழ் இயஙகும் பிரசார் பாரதியான தூர்தர்ஷன் கேந்திரம் தமிழகத்தில் தமிழ் மொழியில் டிடி5 என்ற தொலைக்காட்சியை தொடங்கியது முதன் முதலில் தரைவழி ஒளிபரப்பு மூலம் சேவையை தொடங்கிய நமது பொதிகை மாநிலத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒளிபரப்பு சேவையை வழங்கியது .பின்பு படிபடியாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சேவையை தொடங்கியது டிடி5.முதலில்டிடி1யில் ஒளிபரப்பாகும் ஹிந்தி நாடகங்களை( ஸ்ரீ கிருஷ்னா, ஜீனியர் ஜீ, சக்திமான், கேப்டன் யு, மாஹபாரதம்) போன்ற தொடர்களை மொழிபெயர்ப்பு செய்து தமிழில் வழங்கியது.மற்ற நேரங்களில் தமிழ் செய்திகளையும் விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகளை மாலை பொழுதில் வழங்கியது.1995 முதல் டிடி5 அனது மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தொலைக்காட்சி தொடர்கள், வயலும் வாழ்வும், கண்மணி பூங்கா, காண்போம் கற்போம், மங்கள இசை,சாப்பிட வாங்க, நாட்டியஞ்சலி, மிக மிக பிரபலமடைந்த நிகழ்ச்சியான வெள்ளி ஒளியும் ஒலியும், வாரத்தின் வெள்ளி இரவு 9.30க்கும் சனி இரவு 10.30க்கும் ஞாயிறு மாலை 4.30க்கும் தமிழ்திரைப்படங்கள் போன்ற நிகழ்ச்சிகளை வழங்கியது.

Advertisement

பொதுவாக நேயர்கள் தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சியைப் பற்றிக் கடிதம் எழுதுவது அன்றிலிருந்தே இருக்கிறது. ஆனால் நேயர்களின் அன்பையும், கோபத்தையும், வசையையும் அப்படியே நிகழ்ச்சியில் சொல்லி, அதற்கான காரணமும், மன்னிப்பையும் நிகழ்ச்சியாக்கி பெரிய ஹிட்டானது எதிரொலி நிகழ்ச்சிதான். குறிப்பாக டிடி5-க்கான தமிழ் சேனலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நேயர்களிடம் கேட்டபோது, நேயர்களில் ஒருவர் தபால் கார்டில் பரிந்துரைத்த பெயர்தான் ‘பொதிகை’..திருநெல்வேலி மாவட்டத்தில் பெயர் பெற்ற மற்றும் தமிழ் இதிகாசங்களில் வர்ணித்த அந்த சிறப்புவாய்ந்த பொதிகை மலையின் பெயரையே 2000ஆம் ஆண்டு ஜனவரி 15 நாளில் பொதிகை தொலைக்காட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

இச்சூழலில் இந்த பொதிகை தொலைக்காட்சியின் பெயரை DD Tamil என மாற்ற இருப்பதாக செய்தி பார்த்தேன். - யதகிரி என்பது தெலங்கானாவின் தெலுங்குத் தொலைக் காட்சியின் பெயர் - சப்தகிரி என்பது ஆந்திர மாநிலத்தில் உள்ள பெயர். - கிர்நார் என்பது குஜராத்தில் உள்ள பெயர்.இவை எல்லாமே மலைகளைக் குறிப்பவை என்பது பெயரைப் பார்க்கும்போதே புரியும். பொதிகை என்பதும் மலையைக் குறிக்கும். - சந்தனா என்பது கர்நாடகத்தில் உள்ள பெயர். சந்தனத்தைக் குறிக்கும். அந்தந்த மாநிலத்தின் ஒரு சிறப்பைக் குறிக்கும் பெயர்களைச் சூட்டியிருக்கிறோம். அந்த டிடி பொதிகை என்பதை டிடி தமிழ் என மாற்றுவதன் மூலம் இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்?

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் முருகன் கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் திருநாள் முதல் 'டிடி பொதிகை' தொலைக்காட்சி சேனலின் பெயர் 'டிடி தமிழ்' என்று பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. அரசியல் விவாதம் உள்ளிட்ட பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படத் தொடங்கியுள்ளது. டிடி நிருபர்கள் அடுத்ததாக களத்தில் இறங்கி செய்தி சேகரிக்க உள்ளனர். நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறீர்கள் என முதல்வரிடம் டிடி நிருபர்கள் கேள்வி கேட்பார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார். அரசுத் தொலைக்காட்சியை எங்கள் அரசியலுக்கு பயன்படுத்துவோம் என்ற அவரது கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதிலும் 2000 ஆம் ஆண்டு முதல் பொதிகை என்னும் தமிழ் பெயரில் இயங்கி வந்த தூர்தர்ஷன் தமிழ் சேனலின் பெயரை மாற்றுவதற்கும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் முருகனுக்கு பொதிகை என்ற தமிழ்ச்சொல் மீது ஏன் அவ்வளவு வெறுப்பு?

இந்த பதிவுக்கு எல்.முருகன் தான் பதில் சொல்ல வேண்டும்.

ராஜீவ் காந்தி

Tags :
Advertisement