திருச்செந்தூரில் தங்கும் அறைகளுக்கு முன்பதிவு தொடக்கம்!
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் தலத்தில் தான், முருகப் பெருமான் சூரனை வதம் செய்து தேவர்களை காத்ததுடன், தன்னை நோக்கி தவம் செய்த குரு பகவானுக்கும் காட்சி அளித்தார் என்பதால் கந்த சஷ்டி விழாவிற்குரிய தலமாக திருச்செந்தூர் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும் நடைபெற்றாலும், திருச்செந்தூர் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காணவே லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் கூடுவது வழக்கம். . வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் தலத்திற்கு வந்து தங்கி, விரதம் இருப்பது வழக்கம். இந்த ஆண்டும் திருச்செந்தூர் சென்று விரதம் இருக்கலாம் என்னும் பக்தர்களுக்காக தான் இந்த முக்கிய தகவல். அதாவது பக்தர்களின் தேவையைக் கவனத்தில் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அருகில் இருந்த பக்தர்கள் தங்குவதற்கான தேவஸ்தான விடுதிகள் கடந்த சில ஆண்டுகளாக புதியதாக கட்டப்பட்டு வந்தது அனைவரும் அறிந்தது தான். புதிதாக கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிடம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இன்று புக்கிங் தொடங்கியது.
இங்த தங்கும் விடுதி இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகளில் ஒரே நேரத்தில் சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 50 வீதம் அலமாரிகள், கழிவறைகளுடன் கூடிய இரண்டு படுக்கை கொண்ட 100 அறைகள் உள்ளது. குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள், 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் உள்ளன ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் உள்ளன . சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டண விபரம்
இரண்டு பேர் தங்கக்கூடிய அறைக்கு 500 ரூபாயும், ஏசி அறைக்கு 750 ரூபாயும் வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் மொத்தமாக தங்கக்கூடிய டார்மெட்டரிக்கு 1000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் (Family Cottages) திருக்கோயில் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஒரு குடிலுக்கு நாளொன்றுக்கு வாடகையாக ரூ.2,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
தங்கும் விடுதி முன்பதிவு தொடக்கம்:
விடுதியில் தங்க விரும்பும் நபர்கள் நேரடியாக கோவில் தங்குமிட வசதி அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர் பக்தர்கள் https://tiruchendurmurugan.hrce.tn.gov.in என்ற திருச்செந்தூர் கோயிலின் அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்த நிலையில் இந்த அறைகளுக்கான முன்பதிவு இன்று (29 10 2024) முதல் தொடங்கியது.