போட் - விமர்சனம்
இந்த கோலிவுட்டில் ஒரு திரைப்படம் ஹிட் ஆனாலும் பிளாப் ஆனாலும் அதற்குக் காரணம் படத்தின் டைரக்டர் என்று கை காட்டி விடுவது வாடிக்கை. அதற்கு காரணமும் உண்டு .. சுமாரான கதையை கூட தனது கற்பனை திறனால் சூப்பர் படமாக மாற்றும் வல்லமை டைரக்டர்களுக்கு உண்டு. இத்தனைக்கும் நடிகர், நடிகைகளை போல் இல்லாமல் டைரக்டர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாவது அரிது. இது சிலருக்கு மட்டுமே அமையும். அதேபோல் சம்பளத்தை பொறுத்தவரை நடிகர், நடிகைகளை காட்டிலும் குறைவாக வாங்குபவர்களும் இவர்களே. ஆனாலும் புதிய சிந்தனைகளை புதிய வடிவில் கொடுக்கும் ஆர்வம் கொண்டவர்கள் இவர்களே.!அப்படியாப்பட்ட புதுமை சிந்தனைக் கொண்ட டைரக்டர் சிம்புதேவன் வழங்கியுள்ள போட் படம் ரசிக்கவே வைக்கிறது. அதாவது சர்வதேச அரசியலையும், உள்ளூர் அரசியலையும் சமமாக கலந்து பேண்டஸி மற்றும் காமெடி கலந்து தனது படங்களின் வழி பேசும் சிம்புதேவன், அதே ஸ்டைலில் பூர்வகுடிகளின் உரிமை மற்றும் அவர்களை அப்புறப்படுத்தி வணிகமாகி வரும் நகரங்களின் முன்னேற்ற அரசியலையும் நடுக்கடலில் அலையாடியபடி பேசியிருப்பது தான் ‘போட்’.
அதாவது இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் இக் கதை நடக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி செய்யும் நாடுகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தும் எதிரி படைகள், சென்னையிலும் குண்டு வீச திட்டமிடுகிறது. அதன்படி இந்த தகவல் மக்களிடையே பரவ, தப்பிப்பதற்காக பலர் சென்னையை விட்டு வெளியேறுகிறார்கள். மீனவர்கள் பலர் தங்களது படகுகள் மூலம் நடுக்கடலுக்கு சென்று தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதன்படி, காசிமேடு பகுதி மீனவரான யோகி பாபு தனது பாட்டியுடன் தனது துடுப்பு படகில் நடுக்கடலுக்கு செல்ல முயற்சிக்கிறார். அவருடன் வெவ்வேறு மொழி பேசும் இந்தியர்களும் படகில் பயணிக்கிறார்கள். நடுக்கடலுக்கு சென்றதும் படகு பழுதடைந்து விடுகிறது. அதனால், தொடர்ந்து பயணிக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கும் படகை கரைக்கு செலுத்த வேண்டும் என்றால், படகில் இருப்பவர்களில் மூன்று பேர் வெளியேற வேண்டும், என்று படகின் உரிமையாளர் யோகி பாபு சொல்கிறார். நடுக்கடலில் இருக்கும் படகில் இருந்து எப்படி வெளியேற முடியும், என்று அனைவரும் யோசிக்க, அவர்களை சுற்றி மற்றொரு ஆபத்து உருவாகிறது. ஆபத்துகளில் இருந்து தப்பித்து இவர்கள் அனைவரும் கரைக்கு சென்றடைந்தார்களா? அல்லது அந்த மூன்று பேரை வெளியேற்றிவிட்டு மற்றவர்கள் தப்பித்தார்களா? என்பது தான் போட்.
காசிமேடு மீனவராக நடித்திருக்கும் யோகி பாபு, தனது வழக்கமான உருவ கேலி நகைச்சுவை வசனங்களை உளரி வைக்காமல் , டைரக்டர் சிம்புதேவன் சொன்னதை மட்டுமே பேசி நடித்திருப்பது கதைக்கு பலமாகவும், ரசிகர்களுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது. படகில் பயணிக்கும் குல்லபுலி லீலா, கெளரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, சாரா, ஜெஸ்ஸி, அக்ஷத் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி வசனங்களை சரியாக உச்சரித்திருக்கிறார்கள். படகில் அமர்ந்தபடி நடித்திருந்தாலும் வசனங்களுக்கு ஏற்ப உடல்மொழியை வெளிப்படுத்தி கதபாத்திரங்களாக பயணிக்க முயற்சித்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழர்கள் யாரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது போல் சாம்ஸ் வடநாட்டு சுதந்திர தியாகியை குறிப்பிடும் போது நெற்றிப் பொட்டில் அடிப்பதுபோல் வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டு சொல்லும்போது அரங்கில் கைதட்டல் எழுகிறது.
கடல் நடுவே ஆகாயத்தில் பறவைகள் பறப்பது கடலுக்கு அடியில் இருக்கும் நீல வண்ணங் களின் அதிசயம் கடலின் நீல வண்ணம் என எப்படி எல்லாம் காட்சியை அழகுபடுத்த முடியுமோ அப்படி எல்லாம் அழகுபடுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், கூடவே கிராபிக்ஸும்.படம் முழுவதும் கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருந்தாலும், தனது இசை மூலம் கதை சொல்ல முயற்சித்திருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறார்.
தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பும், டி.சந்தானத்தின் கலை இயக்கமும் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது.
கடல் பயணம் தொடங்கியது முதல் காட்சிகளுக்கு ஏற்ப தலைப்புகளை போட்டு நையாண்டி செய்யும் சிம்புதேவன், கடல் மூலமாக ஃபேண்டஸி அம்சங்களை திரைக்கதையில் புகுத்தியிருந்தாலும் அதில் சிலது வலிந்து திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. இருந்தாலும், சிம்புதேவன் பேச முயற்சித்திருக்கும் அரசியலும் அதைச் சார்ந்த வசனங்களும் அடடே சொல்ல வைப்பதும் நிஜம்.
ஆனால் பயணிக்கும் கதா பாத்திரங்கள் இடையே நிகழும் உரையாடல்கள் கவனம் ஈர்க்கும் அளவுக்கு படகு பயணம் கவனம் ஏனோ ஈர்க்கவில்லை. நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் குறுகிய வட்டத்திற்குள் பயணிப்பதால், திரைக்கதை கொஞ்சூண்டு தொய்வடைந்து விடுகிறது.
அதே சமயம் இன்று பலரும் மறந்து விட்ட இந்திய சுதந்திரப் போரில் தமிழகத்தின் பங்கு, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி, தாழ்ந்தவன் - உயர்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வு, பூர்வக்குடிகளை விரட்டியடிக்கும் வந்தேரிகள், வியாபார நகரங்களில் வசிக்கும் பூர்வக்குடிகளின் முன்னேற்றத்தை தடுக்கும் குடிபெயர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல்களையும் அலசி இருக்கும் சிம்புதேவன், குறிப்பாக சென்னையின் பூர்வகுடிகளின் வறுமை நிலை மற்றும் அவர்கள் சென்னையை விட்டு படிபடியாக வெளியேற்றப்படுதலின் வலியை அழுத்தமாக பதிவு செய்திருப்பத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்
மார்க் 3/5