For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

Blue Star - விமர்சனம்!

08:14 AM Jan 26, 2024 IST | admin
blue star   விமர்சனம்
Advertisement

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிகட்டு போட்டிகளில் எந்தவித ஜாதி மதத்தையும் புகுத்த வேண்டாம் என அண்மையில் ஐகோர்ட் மதுரை கிளை கருத்து தெரிவித்து இருந்தது நினைவிருக்கிறதா? இத்தனைக்கும் மொழி, இனம், கலாச்சாரம் மற்றும் எல்லைகளுக்கு அப்பால் மக்களை இணைக்கும் ஊடகமே பல்வேல் விளையாட்டுகள். அதிலும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ஜாதி, மத, வர்க்க வேற்றுமை கடந்து அனைத்து தரப்பு மக்களும் ரசித்துப் பார்க்கும் விளையாட்டாக இருக்கிறது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எனினும், இந்த கிரிக்கெட்டிலும் சாதி தொடர்பான விவாதங்கள் அவ்வப்போது எழுகின்றன. அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்துக்கொண்டு மேற்கிந்திய அணியின் சார்பாக விளையாட ஆசைப்படும் கிரிக்கெட் வீரர், இந்திய அணியின் தேர்வுக் குழு மீதான விமர்சனம், 90கள் வரை கோலோச்சிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் குறித்த அலசலுடன் இன்றளவும் பல்வேறு கிராமப் பகுதிகளில் நடக்கும் சாதி பாகுபாடு அரசியலை அப்பட்டமாக ஆனால் உறுத்தாத அளவில் எக்ஸ்போஸ் செய்வதே ப்ளூ ஸ்டார். அதிலும் பொதுவான ஒரு பிரச்சனையை பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்கொள்ள வலியுறுத்திய விதமே வாவ் சொல்ல வைக்கிறது.

Advertisement

அதாவது அரக்கோணம் அருகிலுள்ள பெரும்பச்சை கிராமத்தில் பட்டியலின மக்களின் குடியிருப்பு சார்பாக ரஞ்சித் (அசோக் செல்வன்) தலைமையில் ஆக்டிவாக இயங்கி வருகிறது 'ப்ளூ ஸ்டார்' அணி., அதே கிராமத்தின் ஏனைய மக்களின் சார்பாக ராஜேஷ் (ஷாந்தனு பாக்யராஜ்) தலைமையிலான 'ஊர் அணி' 'ஆல்ஃபா பாய்ஸ்' . இவர்களில் யார் க்ந்த்து? என்று நிரூபிக்க மைதானத்திலும் பொது இடங்களிலும் அடிக்கடி முட்டிக்கொள்கிறார்கள். இப்படி கிரிக்கெட்டே வாழ்க்கையாகக் கருதும் இவ்விரு அணிக்கும் பொதுவாக ஒரு பிரச்னை வருகிறது. அந்தப் பிரச்னை அவர்களின் வாழ்க்கையிலும் சமூகம் குறித்த பார்வையிலும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இறுதியில் இரு அணிகளும் அப்பிரச்னையை தீர்க்க வேண்டுமெனில் இரு அணியினரும் ஈகோவை விட்டொழிந்து இணைய வேண்டும் என்பதை அறிமுக இயக்குநர் எஸ்.ஜெயக்குமார் அழுத்தமாக சொல்லி இருப்பதே 'ப்ளூ ஸ்டார்'.

Advertisement

அசோக் செல்வன், காலேஜ் ஸ்டூடண்டாக, கடுகடு முகத்தோடும், விளையாட்டில் ஆக்ரோஷமாகவும், காதலில் உருகும் பனியாகவும் நடித்து ஸ்கோர் செய்து விடுகிறார். மற்றொரு ஹீரோவாக நடித்திருக்கும் சாந்தனு, அசோக் செல்வனுக்கு இணையான வேடத்தில் தனது கேரக்டரின் வெயிட்டை சரியாக உணர்ந்து அதற்கு தேவையான நடிப்பை வழங்கி கவர்கிறார். பல இடங்களில் தனது மனமாற்றத்தை கண்கள் மூலமாகவே வெளிப்படுத்தி தனிக் கவன்ம் பெறுகிறார். அசோக் செல்வனின் தம்பியாக நடித்திருக்கும் பிருத்விராஜ், துடுக்கான இளைஞராக காமெடியும், காதலும் கலந்த நடிப்பில் சிரிக்கவெல்லாம் வைப்பதில் ஜெயித்து விடுகிறார். நாயகியாக வரும் கீர்த்தி பாண்டியன் அடாவடியாக, கிரிக்கெட் ஆர்வலராக அசோக் செல்வனுடன் தோன்றி கொஞ்ச குழப்பங்களுக்கு வழி காட்டிவிட்டு போகிறார்.. அசோக் செல்வனின் அம்மாவாக வரும் லிஸி ஆண்டனி அவ்வப்போது இயேசு கிறிஸ்துவின் வசனங்களை கூறி தியேட்டரில் சிரிப்பலையை கூட்டியிருக்கிறார்.

அசோக் செல்வனின் அப்பாவாக வரும் இளங்கோ குமரவேல் பொறுப்பான அப்பாவாக இருந்து கவர்கிறார். கிரிக்கெட் பிளேயர்ஸ்களாக நடித்திருக்கும் நடிகர்களும் உண்மையாகவே கிரிக்கெட் விளையாடி அந்த உண்மைத்தன்மையை படம் முழுவதும் கடத்தி நம்மை ரசிக்க வைத்துள்ளனர். சாந்தனுவின் மாமாவாக நடித்திருக்கும் நடிகர் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார். லீக் கிரிக்கெட்டில் வரும் நடிகர்களும் சிறப்பாக பங்களித்துள்ளனர். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பக்ஸ் பகவதி பெருமாள் மனதில் பதிந்து விடுகிறார்.மேலும் புல்லட் பாபுவாக நடித்திருக்கும் ஒரு கேரக்டரிடம் “இந்தியா டீமுக்கு ஏன் ஆடல” என்று கேட்க, “ஏன்னா அது இந்தியா டீம். எப்டியும் அங்க போனா கூட சேர்க்க மாட்டான். ஆயிரம் பாலிடீக்ஸ் இருக்கும். நான் வெஸ்ட் இன்டீஸுக்கு ஆடப்போறேன்” என்று படு கேஷூவலாக சொல்லி விட்டு போகும் சீனுக்கு தியேட்டரே அப்ளாஸால் அதிர்கிறது.

கேமராமேன் தமிழ் ஏ.அழகன், புழுதி பறக்கும் கிராமத்து விளையாட்டு மைதானத்தையும், புல்வெளி கொண்ட தொழில்முறை விளையாட்டு மைதானத்தையும் தனது ஒளிப்பதிவு மூலம் வித்தியாசப்படுத்தி காட்டி அசத்தியிருக்கிறார். அரக்கோணம் பகுதியின் வெயில் மற்றும் அப்பகுதி மக்களின் வண்ணங்களை மிக சிறப்பாக காட்சிப்படுத்தி படம் பார்ப்பவர்களை அப்பகுதியோடு பயணிக்க வைக்கிறார்.

கோவிந்த் வசந்தாவின் டைட்டிலில் ஆரம்பிக்கும் பறை இசை தொடங்கி, உமாதேவி மற்றும் அறிவு ஆகியோரின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். அதிலும் அந்த காதல் மெலோடி எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ரகம். பின்னணி இசை பாடல்களை விட ஒரு படி மேல் என்று சொல்லும் அளவுக்கு மிக சிறப்பாக இருக்கிறது.

90-களில் நடக்கும் கதை என்பதால் கலை இயக்கத்தைக் கவனமாக செய்து பிரமிக்க வைத்திருக்கும் கலை இயக்குநர் ஜெயரகு.எல், அக்காலக் கட்டத்தில் இருந்த அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல விசயங்களை மிக நுணுக்கமாக செய்து அசத்தி இருக்கிறார்.

“யாருக்கிட்ட தோத்தோம்னு பாக்கக் கூடாது; ஏன் தோத்தும்னு பாக்கணும்”, “வெறுப்பு அழிவுக்கு வழிவகுக்கும், நிதானம் நிறைய சொல்லி தரும்”, “வானத்துக்கு கீழ எல்லோரும் ஒண்ணுக்கொண்ணு சமம்” போன்ற வசனங்கள் ஈர்க்கின்றன.

ஆரம்ப பேராவில் சொன்னது போல் விளையாட்டுப் போட்டிகளில் நடக்கும் அரசியலையும், வெறுப்பையும், சாதிய முரணையும் கேஷூவலாக , கொஞ்சம் கூட ‘பிரச்சார’ தொனியில்லாமலும் சொல்லி பேசினாலும், இரு வேறு தரப்பினருக்குமான பொது பிரச்சனை ஒன்று வரும் போது ஒன்று சேர்ந்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற சமூக அரசியல் பேசி ஜெயித்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார்,

மொத்தத்தில் இந்த ப்ளூ ஸ்டார் ஈர்க்கிறது!

மார்க் 3.25/5

Tags :
Advertisement