தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

“வேட்டையன்-னுடன் மோதியது ஏன்?”; பிளாக் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்!

09:13 PM Oct 18, 2024 IST | admin
Advertisement

வித்தியாசமான கதையம்சம் கொண்ட அதே சமயம் ரசிகர்களுக்கு தரமான படங்களை மட்டுமே தருவது என்கிற குறிக்கோளுடன் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ். ‘மாயா’, ‘மாநகரம்’ துவங்கி கடந்த வருடம் வெளியான ‘இறுகப்பற்று’ படம் வரை அந்த பணியை செவ்வனே செய்து வரும் இந்த நிறுவனத்தின் சமீபத்திய படைப்பாக ‘பிளாக்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா, சிந்தூரி ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஜி.கே பாலசுப்பிரமணி இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் வெளியான இந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.ஒரு பக்கம் வேட்டையன் படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வித்தியாசமான கதை பற்றி வாய்மொழியாக பரவிய செய்திகளால் திரையிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறும் மேஜிக்கையும் பிளாக் படம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விதமாக பிளாக் படக்குழுவினர் இதன் சக்சஸ் மீட்டை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக நடத்தினார்கள்.

Advertisement

இந்த நிகழ்வில் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் பேசும்போது, “பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது படம் இது. ஆறுமே வெற்றிப்படங்கள். அதில் நான் மூன்று படங்களில் பணியாற்றி இருக்கிறேன் என்பதே மிகப்பெரிய பெருமை. படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினரிடம் இடையே நடைபெற்ற ஆரோக்கியமான விவாதம் தான் படத்தை இந்த அளவிற்கு ரசிகர்கள் புரிந்து கொள்ள காரணமாக அமைந்துவிட்டது. தயாரிப்பு நிறுவனம் இதற்கு முன்பு கொடுத்த படங்களை விட இதற்கு அதிக அளவு உழைப்பை கொட்டினார்கள். சாம் சி.எஸ்சுடன் இப்போதுதான் முதல் படத்தில் பணியாற்றுகிறேன். நாம் வழக்கமாக ஒரு ஷாட் எடுத்தால் கூட இவரது இசையில் அது வேறு மாதிரியாக மாறி விடுகிறது. இந்த படத்தில் புதிதாக ஒரு லென்ஸ் முயற்சி பண்ணி பார்க்கிறோம் என்பதால் அதை ஜீவா சாரிடம் முன்கூட்டியே சொல்லி ஒருவேளை சரியாக பதிவாக விட்டால் ஒன்ஸ்மோர் கேட்போம் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என நாங்கள் கூறியதை எந்தவித மறுப்பும் ஈகோவும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு அழகாக ஒத்துழைப்பு கொடுத்தார்” என்று கூறினார்.

Advertisement

படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் பேசும்போது, “தொடர்ந்து வெற்றி படங்களின் எண்ணிக்கை கூடும்போது, மக்கள் மனதில் அது சென்று சேர்ந்து ஹிட் ஆகும் போது அந்த சந்தோஷம் அதிகமாக இருக்கும். அந்த சந்தோஷத்தில் தான் நான் இருக்கிறேன். பல காட்சிகள் இந்த படத்தில் திரும்பத் திரும்ப வருவது போன்று இருப்பதால் கதை விவாதத்தின் போது ஒவ்வொரு காட்சியையும் எப்படி எடுக்க வேண்டும் என விவாதித்து ரொம்பவே உதவியாக இருந்ததுடன் படத்திற்கு பிளஸ் ஆகவும் அமைந்துவிட்டது. கதை ஆரம்பித்து 15 நிமிடத்திற்கு பின்னால் படம் முழுவதும் ஹீரோ மீது பயணிக்கும் என்பதால் ரசிகர்களை கதையில் தக்க வைப்பதற்கு ஜீவா போன்ற ஒரு நடிகரின் நடிப்பு மற்றும் புகழ் இந்த படத்திற்கு ரொம்பவே உதவியது” என்று கூறினார்.

நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, “ஒரு வெற்றியை ருசிப்பதற்கு தான் எவ்வளவு போராட்டம். ஸ்கிரிப்ட் வாசிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பது ஷார்ட் பிலிம் நடித்த காலத்திலிருந்தே எனக்குள் இருக்கிறது. படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பு அதை படிக்கவில்லை என்றால் ஏதோ தப்பு பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்கிற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அதிலும் இயக்குநர் என்னதான் விவரித்து கூறினாலும் கூட ‘பிளாக்’ போன்ற படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்காமல் நீங்கள் நடிப்பது என்பது நிச்சயமாக கை கொடுக்காது. அதனால் அனைத்து படங்களிலுமே இது போன்ற ஸ்கிரிப்ட் வாசிப்பது, ஒர்க் ஷாப் போன்றவற்றை கட்டாயம் பண்ண வேண்டும். அது எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பதற்கு இந்த பிளாக் படத்தின் வெற்றி ஒரு உதாரணமாக இருக்கும். தமிழ் சினிமாவில் இதுபோன்று ஒரு வெற்றி கிடைத்தால் மட்டுமே அதை பிடித்துக் கொண்டு அடுத்தடுத்து நிறைய ஜானர்களில் படங்கள் வர வாய்ப்பு இருக்கிறது. அந்த நம்பிக்கையும் அடுத்து வருபவர்களுக்கு நாம் கொடுக்க முடியும். அதனால் பிளாக்கிற்கு முன் பிளாக்கிற்கு பின் என தமிழ் சினிமாவை கண்டிப்பாக பிரிக்க முடியும்.'' என்றார்

இயக்குநர் ஜி.கே பாலசுப்பிரமணி பேசும்போது, ”இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகையாளர்களுக்கு தான் முதலில் நன்றி. இந்த படம் கொஞ்சம் குழப்பமான கதை என்றாலும் அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கிறது பார்த்து விடுவோம் என்கிற ஆர்வத்தை ரசிகர்களிடம் மிகச்சரியாக அவர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். இந்த படத்திற்காக ஒரிஜினலாக போடப்பட்ட செட்டையும் படத்தில் நீங்கள் பார்க்கும் செட்டையும் ஒப்பிட்டு பார்த்தால் தான் கலை இயக்குநர் சதீஷின் பணி எவ்வளவு அற்புதமானது என தெரியவரும். ஒரே சண்டைக் காட்சி என்றாலும் அதில் டபுள் ஆக்சனை மிகச்சரியாக புரிந்து கொண்டதுடன் மட்டுமல்ல டெக்னிக்கலாகவும் அழகாக செய்து கொடுத்திருந்தார் மெட்ரோ மகேஷ்.பொட்டென்சியல் நிறுவனத்தில் ஏற்கனவே வந்திருக்கும் படங்கள் அனைத்துமே ஹிட் என்பதால் அந்த பெருமையை நானும் தவற விட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது,“நாங்கள் ஒவ்வொரு படத்தையும் எடுப்பதற்கு கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொள்வோம். அது ஒவ்வொரு படத்தை பொறுத்து தானாகவே அமைந்து விடும். ‘பிளாக்’ கொஞ்சம் அதிகமாகவே நாட்கள் எடுத்துக் கொண்ட படம். 2018லேயே இந்த ஸ்கிரிப்ட் எங்களிடம் வந்தது. படத்தை எடுக்க வேண்டும் என்கிற சுவாரசியமும் ஏற்பட்டது. அதே சமயம் இதன் ஒரிஜினலான படத்தை அப்படியே எடுக்க விரும்பாமல் இங்கே நம்ம ஊரில் இந்த படத்தை பார்ப்பவர்கள் நம்பும்படியாக இயக்குநர் பாலா இதை அழகாக எழுதியிருந்தார். இந்த படத்தை தயாரிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால் இதிலுள்ள செலவுகள் எதுவுமே கண்ணுக்கு தெரியாது. படப்பிடிப்பிற்கு செல்வதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்வது, 40 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் இருந்தாலும் அவை கிராபிக்ஸ் தான் என தெரியாமல் பார்த்துக் கொள்வது என நிறைய விஷயங்கள் இருந்தன. நமக்கு இந்த கதை புரிந்து தான் இந்த படத்தை தயாரிக்கிறோம் ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு அதே போல புரியுமா என்கிற எண்ணம் இருந்தது. காரணம் இது போன்ற புதிய முயற்சிகளை எடுப்பதற்கு ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் தேவை. அதனால் அவர்கள் மீது இருந்த நம்பிக்கையில் தான் ரஜினி சாரின் படம் வரும்போதும் இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு கிடைத்தது. ஊடக நண்பர்கள் மூலமாக இது சரியாகவும் ரசிகர்களை சென்று சேர்ந்துள்ளது” என்று கூறினார்.

நடிகர் ஜீவா பேசும்போது, “ஹைதராபாத்தில் ஒரு படப்படிப்பில் இருந்தபோது தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சார் ஒரு கதையை என்னிடம் சொல்ல விரும்புகிறார் என தகவல் வந்தது. அந்த இயக்குநர் அங்கே நேரிலேயே வந்து கதை சொன்னார். அதில் எனக்கு சிறப்பு தோற்றம் தான். அந்த படம் தான் இறுகப்பற்று. அப்போது தயாரிப்பாளரிடம் கடந்த ஐந்து வருடங்களாக எல்லா படத்திலும் இதேபோல சிறப்பு தோற்றத்தில் தான் நடித்து வருகிறேன்.. வேறு சிறப்பான கதையை சொல்லுங்கள் என்று சொன்னேன். அதன் பிறகு பி.ஆர்.ஓ.ஜான்சன் மூலமாக தான் இந்த பிளாக் படத்தின் கதையை கேட்டேன். அவர்களது பேச்சிலிருந்து அவர்கள் வித்தியாசமான கதைகளை படமாக்க வேண்டும், மக்களுக்கு பிடிக்கும் விதமாக கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பதை உணர முடிந்தது.

இந்த படத்தில் ஒப்பந்தமான பிறகு ஒரு முறை விமானத்தில் நசிகர் கார்த்தி சாருடன் பயணித்தேன் இந்த தகவலை அவரிடம் சொன்னபோது பொட்டென்ஷியல் நிறுவனம் சாதாரணமாக ஒரு படத்தை வெளியிட்டு விட மாட்டார்கள் அனைத்து தரப்பிலும் நன்கு விவாதித்து, பார்த்து பார்த்து செதுக்கி தான் ரிலீஸ் செய்வார்கள் என்று சொன்னார். ஆனால் ரிலீஸ் சமயத்தில் மட்டுமல்ல படப்பிடிப்பிற்கு முன்பும் படப்பிடிப்பு சமயத்திலும் கூட செதுக்கும் வேலை நடந்து கொண்டு தான் இருக்கும். அவர்களைப் பொறுத்தவரை நடிகர்களின் புகழை விட ஸ்கிரிப்ட்டுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இதையே எங்களது சூப்பர்குட் நிறுவனத்தில் சொல்லியிருந்தால் என் தந்தை என்னடா ரீல்களை மாற்றி மாற்றி போட்ட மாதிரி இருக்கிறதே என்று கமெண்ட் பண்ணி இருப்பார். சில பேர் கதை சொல்லும்போது லவ் ஸ்டோரியாக இருக்கும் படமாக எடுக்கும் போது சைக்கோ லவ் ஸ்டோரியா மாறிவிடும். மேலும் எங்களைப் போன்ற நடிகர்களுக்கு பாடல் வேணும் சண்டைக்காட்சி வேணும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்தும் ஒரு அழுத்தம் இருக்கும். ராம், கற்றது தமிழ் போன்ற படங்கள் ஒரு நடிகராக என்னை மாற்றினாலும் திரையரங்குகளில் சென்று பார்க்கும் போது அதற்கான வரவேற்பு குறைவாகவே இருந்தது. அதனால்தான் கொஞ்சம் ரூட்டை மாற்றி ஈ, கோ போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் அது போன்ற படங்களை எடுக்க துவங்கி விட்டார்கள். அந்த வகையில் இந்த பிளாக் படத்தை மக்களை யோசிக்க வைக்கும் ஒரு படமாக எடுக்க வேண்டும் என்று தான் அவர்கள் நினைத்தார்கள். ஒரு சிக்கலான கதையை எவ்வளவு எளிதாக பண்ண முடியுமோ அதைத்தான் செய்திருக்கிறோம். அதற்கு இயக்குநர் பாலாவுக்கு நன்றி. அவரது குறும்படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதை பார்த்திருந்தால் ஒருவேளை இந்த படத்தை இன்னும் முன்கூட்டியே முடித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கோஸ்டல் பாரடைஸில் தான் இந்த படப்பிடிப்பை நடத்தினோம். இந்த படத்தில் நடித்த பிறகு ஒரு வருடமாக அந்த பக்கம் போகவில்லை. ஏனென்றால் தினசரி ஒரு லூப்பில் மாட்டிக்கொண்ட மாதிரி இருந்தது. அதன் பிறகு என் நண்பர்கள் அந்தப்பகுதிக்கு கூப்பிட்ட போது கூட நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால் அதே கோஸ்டல் பாரடைஸில் நமக்குள்ளாக ஒரு சக்சஸ் மீட் நடத்திக் கொள்ளலாம் என தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். இது போன்ற சக்சஸ் மீட்டை பார்த்து எனக்கு ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இப்படி சக்சஸ் மீட்டை கொண்டாடுவதற்காகவே இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ண வேண்டும். அதிலும் பொட்டென்ன்ஷியல் நிறுவனத்துடன் இணைந்து இன்னும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

Tags :
எஸ்.ஆர்.பிரபுபிளாக்
Advertisement
Next Article