For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக!

08:10 AM Feb 09, 2025 IST | admin
டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக
Advertisement

லைநகர் டெல்லியில் மொத்தமுள்ள தொகுதிகள் 70. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை எனும் நிலையில், 48 இடங்களைக் கைப்பற்றி பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில், வெறும் 22 தொகுதிகளை மட்டும் வசமாக்கிய ஆம் ஆத்மி ஆட்சியை இழக்கிறது. காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.டெல்லியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி 6 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது அரசியல் பார்வையாளர்களை கவனிக்க வைத்துள்ளது.27 ஆண்டுகால காத்திருப்புக்குப்பின் தலைநகர் டெல்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது பா.ஜ.க. இதன்மூலம் ஆம் ஆத்மியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது.

Advertisement

முன்னதாக 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 31 இடங்களைக் கைப்பற்றிய போதும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது பா.ஜ.க. அப்போது காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவால் 49 நாட்களிலேயே பதவியை ராஜினாமா செய்தார்.அடுத்ததாக 2015-ல் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 2020-ஆம் ஆண்டு 8 இடங்களுடன் பா.ஜ.க. திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது.மத்தியில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சிக்கு வந்த போதும் தலைநகர் டெல்லியைக் கைப்பற்ற முடியாதது பா.ஜ.க.வுக்கு பெரும் கௌரவப் பிரச்னையாக மாறியது. நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லி மக்களின் ஆதரவை பெற முடிந்த பா.ஜ.க.வுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் மட்டும் குதிரைக் கொம்பாக இருந்தது.

Advertisement

அதே சமயம் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற தொடர் வெற்றி அரவிந்த் கெஜ்ரிவாலை தேசியத் தலைவராக மாற்றியது. அதற்கு சாட்சியாக டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி. இது பா.ஜ.க.வுக்கு எதிர்காலத்தில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அரசியல் வல்லுநர்களும் மூத்த பத்திரிகையாளர்களும் தெரிவித்து வந்தனர்.பன்னிரெண்டே ஆண்டுகளில் ஆம் ஆத்மி தேசிய கட்சியாக மாறியதையும் நாடாளுமன்றம் இருக்கும் டெல்லியில் தங்களது சுவாச நாசிக்கு கீழேயே உட்கார்ந்துகொண்டு கெஜ்ரிவால் ஆதிக்கம் செலுத்தியதையும் பா.ஜ.க. துளியும் ரசிக்கவில்லை. அதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டெல்லி தேர்தலில் தீவிர கவனம் செலுத்தியது அந்தக்கட்சி.

தலைநகரைச் சுற்றியுள்ள ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க. டெல்லியையும் கைப்பற்றி ஹிந்தி பேசும் மாநிலங்களில் வாக்காளர்களை தக்கவைக்கவும் வடஇந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவும் விரும்பியது.எல்லாவற்றுக்கும் மேலாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற முடியாமல் போனதால் ஏற்பட்ட சரிவை சரிக்கட்டுவதற்கும் அடுத்து வரவிருக்கும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கும் பா.ஜ.க.வுக்கு கைகொடுத்திருக்கிறது டெல்லி வெற்றி.

இந்த பாஜகவின் அபார வெற்றிக்கு மேலும் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. டெல்லி வாக்காளர்களில் பெரும்பாலானோர் வருமானவரி செலுத்துபவர்கள். அண்மையில் தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பை 12 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியது. அதன்மூலம் வருமானவரி செலுத்தும் வாக்காளர்களின் ஆதரவு பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளது.அதே போல் 2026-ஆம் ஆண்டில் இருந்து 8-ஆவது சம்பளக் கமிஷன் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே அமைந்தது. ஏனெனில் டெல்லி வாக்காளர்களில் 4 லட்சம் பேர் அரசுப் பணியாளர்கள்.

மகளிர் உரிமைத்தொகை, இலவச குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் பெண்களின் ஆதரவை பா.ஜ.க.வுக்கு பெற்றுத்தந்தது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இஸ்லாமிய மக்கள் வாக்களித்ததும், முக்கியத் தலைவர்களை கெஜ்ரிவால் மற்றும் அதிஷிக்கு எதிராக தேர்தலில் களமிறக்கியதும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியதாக்கும். அதே சமயம் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததற்கு மதுபான கொள்கை ஊழல் விவகாரம், முதல்வர் இல்லத்தை ரூ.33 கோடியில் ஆடம்பர மாளிகையாக மாற்றியது, டெல்லியில் முக்கிய பிரச்சினையாக காற்று மாசு உருவெடுத்தது உள்ளிட்ட காரணங்களை அரசியல் நோக்கர்கள் முன்வைக்கின்றனர்.

தேர்தல் தோல்வி குறித்து ஆம் ஆத்மி கட்சி நிறுவனரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ பதிவில், “மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். பாஜகவின் வெற்றிக்கு வாழ்த்துகள். டெல்லி மக்களின் எதிர்பார்ப்புகளை பாஜக நிறைவேற்றும் என்று நம்புகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். நாங்கள் அதிகாரத்துக்காக அரசியலில் இல்லை. மாறாக, மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு தலமாகவே நாங்கள் அதிகாரத்தைக் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement