பாஜக பிரமுகர் நடிகர் சுரேஷ் கோபி பெண் நிருபர் மீது கை வைத்த விவகாரம்-போலீஸ் வழக்குப் பதிவு - வீடியோ!
பெண் நிருபர் ஒருவருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில், தோளில் கை வைத்து அத்து மீறி நடந்து கொண்ட விவகாரத்தில் நடிகரும்,பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மோலிவுட் திரையுலகில் இன்றைக்கும் முன்னணி நடிகராக ரசிகர்களிடத்தில் கொண்டாடப்படுபவர் சுரேஷ் கோபி. 1965 ஆம் ஆண்டு ஓடையின் நின்னு என்ற படத்தில் தனது 7வது வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு நிறமுள்ள ராவுகள் என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ள சுரேஷ் கோபி, தமிழில் சமஸ்தானம், ஐ ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார். இப்படியான நிலையில் அவர் பாஜக கட்சியில் உறுப்பினராகவும் உள்ளார். மேலும் ராஜ்யசபா எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சுரேஷ் கோபி கோழிக்கோட்டில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அவரிடம் பெண் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கும்போது, மகளே (மோலே) எனக் கூறி நிருபரின் தோள் மீது கை வைத்துள்ளார். இந்த நிகழ்வு பற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்தது. சுரேஷ் கோபியின் செயலால், அந்த பெண் நிருபர் பின்னால் நகர்ந்து சென்று 2- ஆவது கேள்வியை கேட்டுள்ளார். சுரேஷ் கோபி அப்போதும் அவருடைய தோள் மீது தன்னுடைய கையை வைத்திருக்கிறார். அவருடைய கையை பெண் நிருபர் தள்ளி விடும் காட்சிகள் கொண்ட வீடியோ வைரலானதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைஅ டுத்து சுரேஷ் கோபி சமூக ஊடகத்தில், “நட்பு ரீதியிலேயே அந்த பெண் நிருபரிடம் நடந்து கொண்டேன். அவர் அதனைத் தவறாக எண்ணினார் என்றால், அவருடைய உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.அவர் இதனை மோசம் என உணருவார் என்றால், அவரிடம் இதற்காக மன்னிப்பு கோருகிறேன். வருந்துகிறேன்”
எனப் பதிவிட்டிருந்தார்.
ஆனால் சம்பந்தப்பட்ட பெண் நிருபர் இது குறித்து. “சுரேஷ் கோபி கேட்டுள்ள மன்னிப்பில் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக விளக்கம் அளிப்பது போன்று உள்ளது. எனவே அவருக்கு எதிராக சட்ட ரீதியாக அணுக உள்ளேன்” என்று தெரிவித்தார்.
மேலும் கேரள பத்திரிகையாளர்கள் அமைப்பின் மாநில தலைவர் வினீதா மற்றும் பொதுச் செயலாளர் கிரண் பாபு ஆகியோர், தவற்றை ஒப்புக் கொண்டு சுரேஷ் கோபி மன்னிப்பு கேட்க வேண்டும் என அதுபற்றி வெளியிட்ட ஊடக செய்தியில் தெரிவித்து உள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் பற்றி கோழிக்கோடு நகர ஆணையாளரிடம் புகார் ஒன்றையும் அந்த பெண் நிருபர் அளித்திருந்தார். நடிகர் சுரேஷ் கோபி மீது பெண் செய்தியாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.