For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

‘போகாத ஊருக்கு வழி தேடும் பாஜக அரசு ’-மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழிஎன்.வி.என். சோமு பேச்சு!

06:01 PM Jul 02, 2024 IST | admin
‘போகாத ஊருக்கு வழி தேடும் பாஜக அரசு ’ மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழிஎன் வி என்  சோமு பேச்சு
Advertisement

“மெஜாரிட்டி பலத்தை வைத்து நீங்கள் விரும்பியபடியெல்லாம் மக்கள் விரோத சட்டங்களைக் கொண்டு வந்து, விவாதமின்றி நிறைவேற்றினீர்கள். அதனால்தான் இப்போது உங்களை மைனாரிட்டி அரசாக மக்கள் சுருக்கியிருக்கிறார்கள். இனிமேலும் உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளவில்லை என்றால், ஆட்சி அதிகாரத்தில் இருந்து முற்றிலுமாக தூக்கி எறியப்படுவீர்கள் என்பது உறுதி.” என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு பேசினார்.

Advertisement

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில்தி.மு.க. எம்.பி., டாக்டர் கனிமொழிஎன்.வி.என். சோமு பேசியதாவது:

இந்த நாடு தெரிந்துகொள்ள வேண்டிய சில உண்மைகளை இந்த அவையில் பேச எனக்கு வாய்ப்பளித்த எங்கள் தலைவர் மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு முதலில் என் நன்றிகள். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருப்பதாக ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். சுயமாக செயல்பட முடியாத அளவுக்கு,கூட்டணிக் கட்சிகள் உதவியுடன் அமைந்த மைனாரிட்டி அரசு இந்த மூன்றாவது அரசு என்பதை அவர் சொல்ல மறந்துவிட்டார். நானூறு இடங்கள் என்று கோஷமிட்டவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள்.அமெரிக்காவுக்கு ஒரு விக்கிலீக்ஸ் போல எத்தனையோ ரகசியங்கள் கசிந்ததை இந்த உலகம் பார்த்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகாலபி.ஜே.பி. அரசிலும் பல விஷயங்கள் கசிந்துள்ளன. நீட்வினாத்தாள், நெட் தேர்வு வினாத்தாள்போன்றவை கசிந்ததுடன், விமான நிலைய கூரைகள், ராமர் கோவில் கூரை, வந்தே பாரத் ரயில் கூரை என பலவும் இந்த ஆட்சியில் கசிந்து ஒழுகுகின்றன. இத்தனையும் பார்த்து இந்த நாட்டுமக்கள் ரத்தம் கசிகிறார்கள் என்பதுதான் உண்மை.

Advertisement

அதே போல மோடியின்ஆட்சியில், விமான நிலையங்கள், பாலங்கள், பண மதிப்பு, ஜனநாயகம், கூட்டாட்சி என பலவும் வீழ்ந்து வருகின்றன. இன்னும் எத்தனை வீழப் போகிறதோ யாருக்கும் தெரியவில்லை. அவசரநிலை காலத்தைப் பற்றி ஜனாதிபதி கவலை தெரிவித்திருக்கிறார். இவர்களுக்கு உண்மையிலேயேஅவ்வளவு கவலை இருக்குமானால், அந்தக் காலகட்டத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை இப்போது மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில்பெண்களுக்கான பிரதிநிதித்துவம் பற்றியும் ஜனாதிபதி பேசியிருக்கிறார். இந்த விஷயத்தில் இதே அரசு எவ்வளவு அவசரம் அவசரமாக பெண்கள் இடஒதுக்கிட்டு மசோதாவை கண்துடைப்புக்காகக் கொண்டுவந்தது என்பதை இந்த நாடு அறியும். அந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டுமானால், தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். அதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஆனால் இந்த அரசு அதைச் செய்யாமல் மவுனம் காக்கிறது. இதைத்தான் ‘போகாத ஊருக்கு வழி தேடுவது மாதிரி’என்பார்கள் தமிழில். இந்த அரசு செயல்படுத்த முனைகிற பல திட்டங்களும் இப்படித்தான் இருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் பதினைந்து எய்ம்ஸ்மருத்துவமனைகளைக்கட்டியதாகச் சொல்கிறார்கள். அதை பதினான்கு என்று திருத்துங்கள். அவற்றில் ஒன்றாக நீங்கள் சுட்டிக்காட்டும் எய்ம்ஸில் ஒரு சுவர்கூட இன்னும் கட்டப்படவில்லை. மக்களை ஏமாற்றாதீர்கள்.நீட்வினாத்தாள் கசிந்ததை சர்வசாதாரணமாக் எடுத்துக்கொண்டு, கடந்த காலங்களிலும் இப்படி நடந்திருக்கிறது என்கிறார் ஜனாதிபதி. அப்படி சாதாரணமாகச் சொல்லாதீர்கள். இது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல... அவர்களின் கல்விக்காக ஒவ்வொருவரின் ஒட்டுமொத்த குடும்பத்தினரின் உழைப்பும் இதில் அடங்கியிருக்கிறது. ஆனால் நீட் தேர்வு முறைகேடுகள் பற்றி இந்த அரசு உருப்படியாக வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை.

பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தில் இருந்ததை விட, இப்போது இந்த கோடீஸ்வரர்கள் ராஜ்ஜியத்தில் பொருளாதார சமமற்ற நிலை அதிகமாக இருக்கிறது. இந்த நாட்டில் 70 சதவிகிதம் மக்கள் தினசரி நூறு ரூபாய் கூட சம்பாதிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். ஆனால் 10 சதவீத பணக்காரர்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கில் செலவிடுவதையும் பார்க்க முடிகிறது. மீதமுள்ள 20 சதவீதத்தினர்எந்தப் பக்கமும் போக முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்தப் பொருளாதார சமநிலையற்ற தன்மை பெண்களையும் குழந்தைகளையும் அதிகம் பாதிக்கிறது. சமூக வாரியாக இந்த சமநிலையற்ற தன்மை படிந்துள்ளதால்தான், இதற்கு நிரந்தரத் தீர்வு காண சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்பது வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இந்த அரசு அதைச் செய்ய மனமில்லாமல் இருக்கிறது. இப்போதுள்ள கணக்கீடுகள் சில பத்தாண்டுகள் பழமையான, பயனற்ற கணக்கீடுகள் என்பதையும் இந்த அரசு உணர்ந்து கொள்ள மறுக்கிறது.

பண வீக்கத்தாலும், ஏழ்மை மற்றும் வேலை வாய்ப்பின்மையாலும் நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகளாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும்மாறிவருவது துக்க கரமானது. தமிழ்நாடு போன்ற பி.ஜே.பி. ஆளாத மாநிலங்கள் மீதுஒன்றிய அரசின் பார்வை படுவதே இல்லை. அம்மாநில மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே இந்த அரசு நடத்துகிறது. இது நம் அரசியல் சட்டத்தால் வலியுறுத்தப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது. வேலை வாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் நம்மை அச்சுறுத்துக் கொண்டுள்ளது... இதை சரி செய்யாவிட்டால் மாநிலங்களின் தன்னாட்சியுடைய நிதியாதாரம் பாதிக்கப்படும் என்பதையும் ஒன்றிய அரசு உணர மறுக்கிறது. மொத்தத்தில் சொல்ல வேண்டுமானால், இந்த நாட்டின் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பற்றி இந்த அரசு கவலைப்படவே இல்லை. தமிழ்நாடும் இப்படி வஞ்சிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சிந்துபாத்கதை போல நீண்டு கொண்டே போகிறது. இவ்வளவு தாமதம் ஆகிறது என்பதை ஒப்புக் கொள்ள இந்த அரசு மறுக்கிறது. அதேபோல சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வழிசெய்யும் இரண்டாவது கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது பிரதமரே சொன்னார். ஆனால் 2024 ஜூலை மாதம் வரை ஒரு ரூபாய் கூட இத்திட்டத்திற்காக ஒதுக்கவில்லை. எவ்வளவு பெரிய துரோகம் இது? இதுபோல தமிழகத்தின் அத்தியாவசியமான, உட்கட்டமைப்புத் திட்டங்கள் பலவற்றுக்கும் உரிய நிதியை ஒதுக்காமல் வேடிக்கை பார்க்கிறது ஒன்றிய அரசு. இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. எதற்காக இந்த ஓரவஞ்சனை? தமிழகத்தில் ஒரு இடம் கூட வெற்றி பெறாததால், தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் கோபமாக இருக்கிறார்களா?இது ஜனநாயகமா?

கடந்த பத்தாண்டுகளாக பட்ஜெட் உரைகள்வாசிக்கப்படுகின்றன. ஆனால் அதில் சொல்லப்பட்ட திட்டங்கள், அறிவிப்புகள் எல்லாமே நேர்மையற்றதாகவும்பொய்கள் நிறைந்ததாகவும் இருந்திருக்கின்றன. இப்படி பொய்யான வாக்குறுதிகள், பொய்ப்பிரச்சாரங்கள்செய்வதிலிருந்து இந்த அரசு வெளியே வரவேண்டிய நேரம் வந்துவிட்டது. இனிமேலாவது மக்களுக்கு நேர்மையானவர்களாக இருங்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றீர்கள்... பத்தாண்டுகளில் இருபது கோடி வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால், பத்து கோடி பேர் பார்த்த வேலையை இழந்திருக்கிறார்கள். இன்னும் பல லட்சம் பேர் வேலையை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

2022 ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தைஇரட்டிப்பாக்குவோம் என்று சொன்னீர்கள். அது நடக்கவில்லை. ஆனால், விவசாயிகள் தற்கொலை செய்யும் எண்ணிக்கைதான் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. அதேபோல பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாகச் சொன்னீர்கள். பெட்ரோல் விலை லிட்டர் நூறு ரூபாயைத் தாண்டி பல மாதங்கள் நீடிப்பதை இந்த அரசு வேடிக்கைதான் பார்க்கிறது. விலைவாசி உயர்வு பற்றியும் இந்த அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.மெஜாரிட்டி பலத்தை வைத்து நீங்கள் விரும்பியபடியெல்லாம் மக்கள் விரோத சட்டங்களைக் கொண்டு வந்து, விவாதமின்றி நிறைவேற்றினீர்கள். அதனால்தான் இப்போது உங்களை மைனாரிட்டிஅரசாக மக்கள் சுருக்கியிருக்கிறார்கள். இனிமேலும் உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளவில்லை என்றால், ஆட்சி அதிகாரத்தில் இருந்து முற்றிலுமாக தூக்கி எறியப்படுவீர்கள் என்பது உறுதி.

நிறைவாக இரண்டு கருத்துக்களைச் சொல்கிறேன்... கடந்த காலங்களில் என்ன நடந்திருந்தாலும் சரி... வாக்குறுதி என்பது வாக்குறுதிதான். ஏழை மற்றும் நடுத்தர மகக்ல் அந்த வாக்குறுதிகள் நிறைவேறும் என்று நம்பிக் காத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்ற மறுப்பது பாவச் செயல். இனியும் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஏழைகளைக்கொல்லாதீர்கள். ஏழைகளின் சாபத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள். பலம் மிக்க ஏவுகனைகளைவிட ஏழைகளின் கண்ணீரும் சாபமும் சக்தி வாய்ந்தது என்பதை மறக்காதீர்கள். இனிமேலாவது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு விசுவாசமாகவும், நம்பிக்கை உடையவர்களாகவும் இருங்கள். அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி நாட்டில் சமூக நீதியும், சமதர்மமும், மத ஒற்றுமையும், கூட்டாட்சி தத்துவமும்தழைத்தோங்க வழி செய்யுங்கள்.” -இவ்வாறு டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசினார்.

Tags :
Advertisement