பழங்குடிகள் உரிமைக்கான முதல் போராட்டத்தை முன்னெடுத்த பிர்சா முண்டா!
ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பழங்குடி இன மக்களுக்காக ஒருவர் போராடி வாழ்ந்தார் என்பது நமக்கு வியப்பாகவே இருக்கும். ஆம்... 25 வயது வரை மட்டுமே வாழ்ந்த பழங்குடி மக்களுக்கான போராளி அவர். அவர்தான் `பிர்சா முண்டா.' பழங்குடி மக்களால் `மண்ணின் தந்தை' என்று அழைக்கப்பட்டவர்தான் இந்த பிர்சா முண்டா.
ஆம்.. அநீதிக்கு எதிரான பழங்குடி மக்கள் உரிமைப் போராட்டத்தின் முதல் குரல் பிர்சா முண்டாவுடையதே. 'பிர்சா' என்றால் வியாழன், 'முண்டா' என்றால் ஆதிவாசி என்று பொருள். 1875-ம் வருசம் அன்றைய பீகார் மாநிலதில் தந்தை சுக்ணா முண்டா, தாயார் கர்மி ஹட்டு முண்டா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் பிர்சா முண்டா. அப்போதைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் படையால் இந்தியாவில் பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலை இருந்து வந்தது. அதைத் துணிச்சலோடு எதிர்த்துப் போராடினார் . அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் "காடுகளின் ஒவ்வொரு சதுர அடியும் பிரிட்டிஷ் அரசுக்கே சொந்தம்" எனும் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது..!
இதை எதிர்த்து பிர்சா முண்டா "நீர் நமது! நிலம் நமது! வனம் நமது" எனும் கோஷத்தை எழுப்பி பழங்குடி மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தினார். 1895-ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது பிர்சா முண்டாவின் வயது வெறும் 19-தான். அதுவே பழங்குடிகள் வரலாற்றின் முதல் போராட்டமாகும். பண்ணையார்கள் மற்றும் ஜமீன்தார்கள் உதவியுடன் பிரிட்டிஷ் அரசாங்கம் பழங்குடிகளின் நிலங்களைப் பறித்தபோது "ஒரு குரலைவிட, ஒட்டு மொத்த மக்களின் குரலே அதிகாரத்தை அசைக்கும்" என முழங்கி, பழங்குடி மக்களை ஒன்று சேர்த்து படை திரட்டிப் போராடினார்."உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்" எனும் கோட்பாட்டுக்கு அப்போதே செயல் வடிவம் தந்தார் பிர்சா முண்டா. இதனால் பழங்குடிகள் இவரை `தார்தி அபா' என்று அழைத்தனர்.
தார்தி அபா என்றால் `மண்ணின் தந்தை' என்று பொருள். 1899-ம் ஆண்டு பிரிட்டிஷ் படையை எதிர்த்து, கொரில்லா போர் முறையில் மறைந்திருந்து தாக்கும் தந்திரத்தைப் பயன்படுத்தி வில், அம்புகளை மட்டுமே கொண்டு எதிரிகளை வீழ்த்தினார் பிர்சா முண்டா. இந்தப் போராட்டத்துக்கு `உல்குலான்' என்று பெயர். பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போராடிய குற்றத்துக்காக பிர்சா முண்டா சிறைபடுத்தப்பட்டு 1900-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதியன்று காலரா நோயால் அவர் இறந்ததாக அறிவித்தனர். அப்போது அவருக்கு வயது வெறும் 25 மட்டும்தான்.
பிர்சா முண்டா இறந்து சரியாக எட்டு ஆண்டுகள் கழித்து சோட்டாநாக்பூர் சட்டம் (Chotanagpur Tenancy Act 1908) கொண்டுவரப்பட்டது. ஆதிவாசிகளின் நிலத்தை வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்தது.
அப்பேர்பட்ட பிர்சா முண்டா மறைந்து நூறாண்டுகள் கடந்த பின்பும் ஆதிவாசிகள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியே வருகிறார்கள் என்பது தனி சோகம்.