For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பாரதீய ஜனதாவுக்கு மிகப்பெரிய பின்னடைவுதான்!

08:21 AM Apr 29, 2024 IST | admin
பாரதீய ஜனதாவுக்கு மிகப்பெரிய பின்னடைவுதான்
Advertisement

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு நாடாளுமன்றத் தேர்தல் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் ஏதுமில்லாமல் மிக அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது.2014 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஊழல் வழக்குகள் பேசுபொருளாக இருந்தது. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தத் தேர்தலில் பெரும்பங்கு வகித்தன என்று சொல்லலாம். உலகமயமாக்கலுக்குப் பிறகான இந்தியாவில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் மிகப்பெரிய அளவில் வருமானமீட்டும் இடத்துக்கு வந்தன. மரபுசார் தொழில் துறைகளையும், விவசாயத்தையும் கடந்து நகரங்களுக்குக் குடிபெயருங்கள் என்று இந்தியாவின் பிரதமராக இருந்த திரு.மன்மோகன்சிங் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இது சரியா? தவறா? என்ற விவாதத்தைத் தாண்டி உலக முதலாளிகளின் முதலீடுகளும், அவர்களது நிறுவனங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளும் இந்தியப் பெருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் காரணிகளாக உருமாற்றமடைந்திருந்தன. இந்திய ஆட்சியாளர்களை பழைய இந்தியாவிலிருந்து புதிய நகர்மயமாக்கப்பட்ட இந்தியாவுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுமளவுக்கு தாக்கம் விளைவித்திருந்தன என்பதுதான் உண்மை. உலகின் பணக்கார முதலாளித்துவ நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு சேவை செய்வதில் இந்திய இளைஞர்கள் கடந்த 30 ஆண்டுகளில் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். அவர்களின் பொருளீட்டும் திறன் பெருகியது, அவர்களின் வாழ்க்கைமுறை மாறியது. இந்த மாற்றம் இந்தியப் பொருளாதாரத்தை முழுமையான சந்தை மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தை நோக்கி நகர்த்தியது.

Advertisement

ஆனால், நினைவில் கொள்ளுங்கள், இந்த மாற்றத்தில் பங்குபெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை என்பது மிகக்குறைந்த விழுக்காடுதான். தோராயமாக 20 % இளைஞர்கள் இந்த நவீன இந்தியாவுக்குள் வந்து சேர்ந்தார்கள். எஞ்சிய 80 % இளைஞர்கள் வழக்கம் போலவே இந்தியாவின் மரபுசார்ந்த வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த 80 % இளைஞர்களில் ஏறத்தாழ 30 % பேர் நவீன இளைஞர்கள் தீவிரமாகப் பங்கேற்றிருந்த நவீன வேலைவாய்ப்புகளின் துணை அமைப்புகளில் பயனடைந்தார்கள். எடுத்துக்காட்டாக BPO நிறுவனங்களையும், Call Centre வேலை வாய்ப்புகளையும் சொல்லலாம். ஏனெனில் இவை நேரடியான நவீனத் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள் அல்ல. ஏதாவது ஒரு இளங்கலைப்பட்டம் பெற்று ஓரளவு உரையாடல் மற்றும் கணினித் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மாதம் 20,000 முதல் 30,000 வரை சம்பளம் பெற்று சமூக அந்தஸ்தையும் பெற்றுத் தரக்கூடிய வேலை வாய்ப்பு. பிற 20 % இளைஞர்கள் வழக்கம் போல மருத்துவம், பொறியியல், அறிவியல் மற்றும் வணிகம் போன்ற துறைகளில் தங்களைப் பொருத்திக் கொண்டார்கள். இந்தியாவின் மரபுசார்ந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இதுதான்.

Advertisement

2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் அரசுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய அலை மக்கள் மனதில் இருந்தது. பிரதமர் மீது இல்லையென்றாலும் அவரது சகாக்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் மிகப்பெரிய தாக்கம் உருவாக்கி இருந்தது. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் சேர்ந்து வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கிளையான பாரதீய ஜனதா ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. ஊழலுக்கு எதிரானதாகவும், நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளர்ச்சி போன்ற முழக்கங்களை வைத்து குஜராத் மாடல் விளம்பரம் செய்யப்பட்டது. மோடி காட்சிப்படுத்தப்பட்டார்.

நாடு முழுவதும் ஊழல் குறித்த பரப்புரை தீவிரமாக இயங்கியது. பாரதீய ஜனதா மிகப்பெரிய வெற்றி பெற்றது. 5 ஆண்டு காலத்தில் பெரிதாக எந்த மாற்றத்தையும் பாரதீய ஜனதா அரசால் வழங்க முடியவில்லை. ஆனால், உணர்ச்சிப் பூர்வமான தேசபக்தி மற்றும் மதம் சார்ந்த விஷயங்களில் குறிப்பாக வட இந்தியா முழவதையும் பாரதீய ஜனதா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பாகிஸ்தானுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் உணர்ச்சிக் கொந்தளிப்பை அவ்வப்போது உருவாக்கி 2019 நாடாளுமன்றத் தேர்தலை தேசப் பாதுகாப்பு என்கிற ஒற்றைப் புள்ளியில் வைத்து நகர்த்தியது பாரதீய ஜனதா. புல்வாமா தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த தாக்குதல் என்று வடக்கு மற்றும் மத்திய இந்தியாவை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கவைத்து மீண்டும் பாரதீய ஜனதாவால் வெற்றி பெற முடிந்தது.

இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் கூடாரத்தில் பெரிய ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. ராகுல் அரசியல் முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை, அவரை "பப்பு" என்று பாரதீய ஜனதா விலக்கி வைக்க முயற்சி செய்தது. இடைப்பட்ட காலத்தில் ராகுல் இந்திய அரசியலை ஓரளவு விளங்கிக் கொண்டிருந்தார், நானும் ஒரு காஷ்மீரப் பிராமணன் தான் என்று தனது பூணூலை எடுத்துக்காட்டிய ராகுல், இன்று இந்தியாவில் நடப்பது 1000 ஆண்டுகளாக நிகழும் இரண்டு தத்துவங்களுக்கு இடையிலான போர் என்று பேசுமளவுக்கு வளர்ந்திருக்கிறார். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது நடந்து கொண்ட விதம் அவரை முதிர்ச்சியான அரசியல் தலைவராக நாட்டு மக்களை உணர வைத்தது. "பாரத் ஜோடோ" பாதயாத்திரையைத் துவக்கி அவர் நாடு முழுவதும் நடந்து சென்றபோது உண்மையில் மக்களுடன் ஒரு பிணைப்பை உருவாக்க அவரால் முடிந்தது.

அப்போது நாடு முழுவதும் காங்கிரஸ் ஏறத்தாழ அழியும் நிலையில் இருந்தது, ராகுல் கட்சியின் உட்கட்சித் தேர்தலை வெற்றிகரமாக நிகழ்த்தி மூத்த தலைவரும், தலித்துமான மல்லிகார்ஜூன கார்கேயை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் கேரள பிராமணரும், முன்னாள் ஐக்கிய நாடுகள் அவையின் ஆளுமையுமான சசி தாரூர். இந்தப் போட்டிக்களம் ஒரு புதிய நவீன மாற்றத்தை நோக்கி காங்கிரஸ் கட்சியை நகர்த்தியது.நான் இப்போதும் காங்கிரஸ் கட்சியை மிதவாத இந்துத்துவ ஆற்றல் என்றுதான் நம்புகிறேன். அதன் பெரும்பாலான மூத்த தலைவர்கள் அடிப்படை இந்துத்துவம் பேசுகிற, மதப்பெரும்பான்மை பேசுகிற தலைவர்கள் தான். ஆனால் ராகுல் இந்த விஷயத்தில் ஒரு முற்போக்கான நிலைப்பாட்டைக் கையிலெடுத்தார். அவருக்கு உண்மையில் இந்த தேசத்தில் என்ன நடக்கிறதென்று புரிந்தது. தத்துவார்த்த அடிப்படையில் அவர் சமூக நீதியின் வேர்களைக் கண்டடைந்து உளப்பூர்வமாக அதுகுறித்து சிந்திக்கிற தலைவராகத் தன்னைத் தகுதி உயர்த்திக் கொண்டார்.

அதற்கான சான்றாகவே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்தது. கார்கே, சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்களின் உள்ளீடுகள் இந்த அறிக்கையில் பெரும்பங்காற்றின. ஒரு காலத்தில் நாங்கள் இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக அழ்த்தொழிப்போம் என்று முழங்கிய அமீத் ஷாவை இன்று நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்போம் என்று பேசுமளவுக்கு மாற்றி இருக்கிறது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை. தேசம் முழுவதும் மற்ற வைப்பதற்கு இப்போது எந்த ஆயுதங்களும் பாரதீய ஜனதாவிடம் இல்லை. 5 ஆண்டுகள் போதுமானதில்லை, நாடும் ஆபத்தில் இருப்பதைப் போலிருக்கிறது என்று மனமிறங்கித்தான் மக்கள் 2019 தேர்தலிலும் மோடியைத் தேர்வு செய்தார்கள்.ஆனால், இந்த முறை இந்திய மக்கள் வழக்கமான இந்துத்துவ ஆற்றல்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் சிக்கிக் கொள்வதற்குத் தயாராக இல்லை.

நாடு முழுவதும் நடந்து முடிந்த இரண்டு கட்டத் தேர்தலில் மக்கள் அமைதியாக வாக்களித்திருக்கிறார்கள், ஏறத்தாழ 5 % பேர் தேர்தல் அரசியலில் நம்பிக்கையிழந்து வாக்களிக்க வரவில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வருமென்று நம்பிக் கடந்த தேர்தலில் வாக்களித்தவர்கள்.இந்த முறை நடந்து முடிந்திருக்கும் இரண்டு கட்ட வாக்குப் பதிவை வைத்துப் பார்த்தால் முற்று முழுதாக தங்கள் தொகுதி மற்றும் மாநிலம் சார்ந்த உள்ளடக்கங்களை முன்வைத்தே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இந்த சலனமற்ற உள்ளூர்த்தன்மை பாரதீய ஜனதாவுக்கு மிகப்பெரிய பின்னடைவைத் தேடித்தரும் என்பது தான் உண்மை. பிரதமரின் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சை அவர்கள் இம்முறை மூர்க்கமாக எதிர்க்கவில்லை, அவர்கள் தங்கள் சகோதரர்களான இந்துக்கள் கைகளிலேயே அந்தப் பொறுப்பை விட்டு விட்டார்கள்.

இஸ்லாமியர்களின் இந்த அமைதியும் கூட பிரதமருக்கு எதிரானதாக அவரது வெறுப்புப் பிரச்சாரத்தை மாற்றியது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை மிக கவனமாகக் கையாண்டு நல்லிணக்கம், சமூக நீதி என்ற அளவில் கொண்டு வந்தன. அதன் விளைவாகவே அமீத் ஷா, பாரதீய ஜனதா இட ஒதுக்கீட்டின் பாதுகாவலன் என்கிற தனக்குக் கொஞ்சமும் பிடிக்காத முழக்கத்தை முன்வைக்கக் காரணமாக இருந்தது. பாரதீய ஜனதா, வரும் நாட்களில் பெரிய அளவிலான கலவரத்தையும், உணர்ச்சி மயமான ஏதாவது ஒரு கருவியையும் பயன்படுத்தினாலும் கூட நாட்டு மக்கள் இந்த முறை பெரிதாக ஈர்க்கப்படுவார்களா என்பது சந்தேகம் தான். அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள், வாக்களித்து விட்டு தங்களுக்குள் மெல்லிய புன்னகையைத் தவழ விடுகிறார்கள். இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க, உண்மையான சகோதரத்துவத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அணிகலனையும் தூசி தட்டி எடுக்கிறார்கள்.

இந்திய மக்களை ஏமாற்றலாம், ஆனால் அவர்கள் மிக ஆழமான பண்பாட்டு வெளிச்சம் கொண்டவர்கள், வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு இந்த தேசத்தின் ஆன்மாவைத் தொடர்ந்து காப்பாற்றி இருக்கிறார்கள். அவர்களே இந்த தேசத்தின் அழுத்தமான, நிஜமான காவலர்கள். இம்முறை தங்கள் சகோதரர்களான இஸ்லாமியர்களுக்காக எழுந்து நிற்பார்கள், அவர்கள் மீது சுமத்தப்படுகிற அவதூறுகளை எல்லாம் தங்கள் ஆதி வெளிச்சத்தால் துடைத்தழிப்பார்கள். அவர்களை அணைத்துக் கொள்வார்கள்.

கை.அறிவழகன்

Tags :
Advertisement