தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பாரத ரத்னா 2024 விருது: பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூருக்கு அறிவிப்பு

09:01 AM Jan 24, 2024 IST | admin
Advertisement

ம் நாட்டின் குடிமக்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுதான் பாரத ரத்னா. எந்த துறையாக இருந்தாலும் அதில் ஆற்றிய உயரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்படுகிறது.அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. பாரத ரத்னா விருது ஜனவரி 2, 1954 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மூலம் தொடங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலாச்சாரி, குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் ஆகியோருக்கு முதன்முதலாக கடந்த 1954ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.அதன் பின்னர், தத்தமது துறையில் மெச்சக்கூடிய பங்களிப்பை வழங்கிய பல்வேறு நபர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

1954இல், உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. 1955ல், இறந்தவர்களுக்கும் பாரத ரத்னா வழங்கலாம் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது.சட்டமேதை என அழைக்கப்படும் அம்பேத்கர், தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் போன்றோருக்கு அவர்களின் இறப்புக்குப் பிறகு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாரத ரத்னா விருது பெறுவோர் குறித்த அதிகாரபூர்வ தகவல் இந்திய அரசிதழில் வெளியிடுவதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.இந்த கௌரவம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தின்போது வழங்கப்படுகிறது.

Advertisement

2019-ல் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த சமூக ஆர்வலர் நானாஜி தேஷ்முக், மறைந்த இசைக் கலைஞர் பூபன் ஹசாரியா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளாக யாருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்படவில்லை.இந்நிலையில், 2024 குடியரசு தினத்தையொட்டி பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூருக்கு, அவரது மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை நேற்று இரவு வெளியிட்டது.

பீஹாரின் சமஸ்திபூர் மாவட்டம் பிதோஜ்கியா கிராமத்தில்  1924 ஜனவரி 24-ம் தேதி பிறந்தார் கர்ப்பூரி தாக்கூர். மாணவ பருவத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று 26 மாதங்கள் சிறையில் இருந்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1952-ல் முதல்முறையாக பீஹாரின் தேஜ்பூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 1970-1971 மற்றும் 1977-1979 என 2 முறை பீஹார் முதல்வராக பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் பீஹாரில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய அவர் மக்கள் தலைவர் என்று அழைக்கப்பட்டார். 1988 பிப்ரவரி 17-ம் தேதி காலமானார். அவரது 100-வது பிறந்தநாள் தற்போது கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் ஓபிசி மக்களுக்காக பல்வேறு தியாகங்களை செய்த கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். இந்த சூழலில், அவருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. அந்த வகையில் 1988-இல் மறைந்த கர்பூரி தாக்குருக்கு 35 ஆண்டுகளுக்கு பிறகு பாரத ரத்னா விருது கிடைத்துள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற பேச்சு பரவலாக தற்போது அடிபட்டு வருகிறது. இதன் காரணமாகவே, ஓபிசி மக்களின் ஆதரவை பெறுவதற்காக, நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கர்பூரி தாக்கூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடிசினல் ரிப்போர்ட்:

பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்படுவது என்பது பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்படுவதில் இருந்து மாறுபடுகிறது. இதில், பாரத ரத்னா விருதை இன்னாருக்கு வழங்கலாம் என்ற பரிந்துரையை குடியரசு தலைவருக்கு பிரதமர் செய்வார்.

சாதி, தொழில், பதவி அல்லது பாலினம் ஆகிய பாகுபாடின்றி எந்த ஒரு நபரும் இந்த விருதுக்கு தகுதியானவராக கருதப்படுவார். குறிப்பிட்ட ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 3 நபர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம். அதேவேளையில், ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதுவரை 48 நபர்களுக்கு மட்டுமே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக 2019ஆம் ஆண்டு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.

இந்த பாரத ரத்னா விருது பெறுவோருக்கு அதற்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்படும். பணம் ஏதும் வழங்கப்படாது.

விருதை பெற்றவர்களுக்கு அரசு துறைகள் சார்பாக சில வசதிகள் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பாரத ரத்னா பெற்றவர்களுக்கு ரயில்வே துறை சார்பில் இலவச பயணத்துக்கான வசதி வழங்கப்படுகிறது.

அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

முன்னுரிமை வரிசையில் இவர்களை அரசாங்கம் வைக்கும். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், குடியரசு முன்னாள் தலைவர், துணைப் பிரதமர், தலைமை நீதிபதி, லோக்சபா சபாநாயகர், மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்படும்.

இதேபோல், மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு சில சிறப்பு வசதிகளை வழங்கும்.

விதி 18 (1)-இன் படி விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது.

அவசியம் கருதினால் “பாரத ரத்னா விருதைப் பெற்றவர் அல்லது குடியரசுத் தலைவர் மூலம் பாரத ரத்னா விருது வழங்கப்பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tags :
2024 AwardBharat RatnaBiharchief ministerFormerGarbhuri Thakur
Advertisement
Next Article