பகவான் ஸ்ரீ ரஜினிஷ் @ ஓஷோ - நினைவஞ்சலி!
1990-ஆம் ஆண்டு இதே ஜனவரி மாதம் 19-ம் தேதியன்று மாலை 5 மணியளவில் இயற்கையோடு இணைந்து காலமானவர் ஓஷோ.உலகெங்கும் அதிர்ச்சியலைகளை உருவாக்கிய அவரது மரணமும் மர்மமாக விமர்சிக்கப்பட்டது. தத்துவ உலகின் நவீன சிற்பி என்று புகழப்படும் ஓஷோ மறைந்த தினம் இன்று தான். 'மரணத்தில் இருந்து என்னை தப்புவிக்க செய்யாதீர்கள்; நான் அதை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்' என்று கூறியவாறே உயிரை விட்ட ஓஷோ, தன்னம்பிக்கை கொண்ட மனிதர்களுக்கு ஒரு தலை சிறந்த ஆசான். அதே சமயம் ஓஷோவின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை ஆராயும் 'Who Killed Osho' என்ற புத்தகத்தை எழுதியவர் அபய் வைத்யா. அவர் சொன்ன சேதியிது,
"1990 ஜனவரி 19ஆம் தேதியன்று டாக்டர் கோகுல் கோகாணி ஓஷோ ஆசிரமத்திலிருந்து அழைக்கப்பட்டார். உங்கள் லெட்டர்ஹெட்டையும், அவசரகால முதலுதவிப் பெட்டியையும் கொண்டு வாருங்கள் என்று அவரிடம் கூறப்பட்டது."
டாக்டர் கோகுல் கோகாணி தனது வாக்குமூலத்தில் இவ்வாறு எழுதினார்: "இரவு இரண்டு மணிக்கு அங்கு சென்றேன், ஓஷோ தனது உடலை தியாகம் செய்கிறார், அவரை காப்பாற்றுங்கள் என்று என்னிடம் அவரது சீடர்கள் கூறினார்கள், ஆனால் அவரிடம் செல்ல அனுமதிக்கப்படவில்லை".
"பல மணி நேரம் நான் அங்கேயே இருந்தேன், அதன்பிறகு அவர் இறந்துவிட்டார் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது, அவரது மரணம் தொடர்பான இறப்பு சான்றிதழ் வழங்குமாறு என்னிடம் கோரினார்கள்."
ஓஷோ எப்போது இறந்தார் என்ற கேள்வியையும் மருத்துவர் கோகுல் எழுப்பி இருந்தாறார். மாரடைப்பினால் ஓஷோ மரணித்ததாக இறப்பு சான்றிதழில் எழுதுமாறு சீடர்கள் அழுத்தம் கொடுத்ததாக அவர் கூறினார். எந்தவொரு துறவியின் மரணத்தையும் விழாவைப்போல் கொண்டாடும் வழக்கத்தை கொண்டது ஓஷோவின் ஆசிரமம். ஆனால், ஓஷோ இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அவரது இறுதிச் சடங்குகள் செய்து முடிக்கப்பட்டதும், அவருடைய இறப்பின் கொண்டாட்டமும் சுருக்கமாக இருந்ததும் அனைவரின் புருவங்களையும் உயர்த்தச் செய்தது.
இத்தனைக்கும் ஓஷோவின் தாயாரும் அந்த ஆசிரமத்திலேயே தங்கியிருந்தார். ஓஷோவின் மரணம் பற்றிய தகவல் அவரது தாய்க்கு மிகவும் தாமதமாகவே தெரியப்படுத்தப்பட்டதாக ஓஷோவின் செயலாளராக இருந்த நீலம் பிறகு வழங்கிய ஒரு நேர்காணலில் தெரிவித்தார். ஓஷோவை கொன்றுவிட்டார்கள் என்று நீண்ட காலமாக அவரது தாயார் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார் என்றார் நீலம்.
அது சரி.. ஓஷோ யாரென கூகுளில் தேடிப் பார்க்க முயல்கிறீர்களா? அதில் இந்திய மதவாதத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். நம்பாதீர்கள்.
பின் யார்தான் ஓஷோ? ஓஷோ பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை, பூமிக்கு வருகை தந்தார்' என்றே அவரது நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த தத்துவ ஞானிகளில் ஒருவர் என்று புகழப்படும் ஓஷோ தனது பொன்மொழிகளாலும், தத்துவக் கதைகளாலும் புகழப்படுபவர். ' நீ நீதான், உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை' என்று மனிதர்களிடையே நம்பிக்கைகளை விதைத்தவர் ஓஷோ.
ஓஷோ. உலகமெங்கும் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று.'
உலகின் அதிகமான பென்ஸ் கார்கள் வைத்திருந்த ஒரே மனிதனும், கடைசி மனிதனும் ஒஷோவே.
பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ் அவர்கள் ஓஷோ என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். வில்லியம் ஜேம்ஸ் குறிப்பிட்ட ஓஷியானிக் என்ற சொல்லில்யிருந்து தம்முடைய பெயர் உருவானதாக குறிப்பிட்டுள்ளார்.ஓஷியானிக் என்றால் கடலில்கரைந்து போவது என்று பொருள். ஓஷியானிக் என்ற சொல் அனுபவத்தை மட்டுமே குறிக்கிறது. ஆனால் அனுபவிப்பவரைக் குறிப்பிட வில்லை அதனால் தான் ஓஷோ என்ற சொல்லை உருவாக்கினேன் என்று சொன்னார் ஓஷோ. ஆனால் இந்த பொருளுக்கு வேறு ஒரு பொருளும் உண்டு. அது வானம் பூச்சொரிந்து ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன்.
1960-களில் இந்தியாவின் சிந்தனை மரபில் ஒரு முக்கியமான எழுச்சி நேர்ந்தது. அதற்குக் காரணமாக இருந்தவர் இந்த ஓஷோ ரஜ்னீஷ். ஓஷோவின் இயற்பெயர் சந்திரமோகன் ஜெயின். 1931ம் ஆண்டு பிறந்தவர். தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1960களில் இந்தியா முழுக்கப் பயணித்து பல இடங்களில் உரைகள் ஆற்றினார். ஆன்மிகம் மட்டும் பேசாமல், அரசியல் மற்றும் சமூகம் ஆகியவற்றுடன் இணைத்துப் பேசினார். ரஜ்னீஷ்ஷின் சிந்தனைகள் பல, சர்ச்சைக்கு உரியவைகளாக இருந்தபோதும் மறுப்பதற்கான வாய்ப்பற்றதாக இருந்தன. ஏனெனில் அவர் பேசிய பெரும்பாலானவை அவருக்கு முன் உலக தத்துவத்தில் சிறந்து விளங்கிய மார்க்ஸ், நீட்சே, பிளாட்டோ முதலியவர்களின் கருத்துகள். அக்கருத்துகளை இந்தியச் சூழலுக்கு பொருத்தி ரஜ்னீஷ் பேசியதே மிகப் பெரிய தரிசனமாக இருந்தது.
சமூகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தியச் சமூகத்தில் பெரும் உடைப்புகளை நிகழ்த்தினார் ரஜ்னீஷ். பல காலமாக இந்தியச் சமூகத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அனைவருக்கும் தெரிந்த உண்மைகளை பொதுவெளியில் போட்டு உடைத்தார். உதாரணமாக கடவுள், மோட்சம் என மதங்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது ரஜ்னீஷ் இப்படி சொன்னார்:
'மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறதா இல்லையா என்பதல்ல கேள்வி. மரணத்துக்கு முன் உண்மையில் நாம் வாழ்கிறோமா என்பதே கேள்வி’ - இதன் மூலம் மதங்கள் சொல்லி வந்து கொண்டிருந்த சால்ஜாப்புகள் உடைபட்டன. அதே நேரத்தில் ரஜ்னீஷ் மதங்களிலிருந்து மேற்கோள் எடுக்கவும் தயங்கியதில்லை:
‘உன்னைத் தவிர யாராலும் உன்னை அழிக்க முடியாது. உன்னைத் தவிர யாராலும் உன்னை காப்பாற்றவும் முடியாது. நீதான் இயேசு. நீதான் யூதாஸ்.’ - இப்படி முக்கியமாக மனம் கையாளுவதை பற்றி அதிகம் பேசினார். அகங்காரமே நம்மை இயக்குகிறது என்கிற சிக்மண்ட் ஃப்ராய்டின் பார்வையிலிருந்து கருத்துகளை முன் வைத்தார்:
‘அகங்காரம் உங்களுடைய எதிரி. உங்களுடைய நண்பன் இல்லை. அகங்காரம்தான் உங்களை காயப்படுத்தும். அகங்காரம்தான் உங்களை கோபப்படுத்துகிறது. பொறாமைப்பட செய்கிறது. போட்டியிட செய்கிறது. வன்முறையாக்குகிறது. அகங்காரம்தான் பிறருடன் உங்களை தொடர்ந்து பொருத்தி பார்க்கச் செய்து துயருறச் செய்கிறது.’
என்று சொல்லி உறவுகள் கையாளுவதையும் மிக எளிமையாக விளக்கினார். உறவுக்கிலேசம் ஏற்ப்டுகையில் உடனே நான் ஓடி படிப்பது ஓஷோவைத்தான். நீங்கள் மனதுக்குள் அடுக்கி வைத்திருக்கும் சொப்புகளை படாரன் கலைத்துப் போட்டு உண்மையை வெளிப்படுத்தி விடுவார்.
‘எதையும் கட்டாயப்படுத்தாதீர்கள். விட்டுச் செல்லும் தன்மையை பிறருக்கு கொடுங்கள். கடவுள் ஒரு நாளில் லட்சக்கணக்கான பூக்களை கட்டாயப்படுத்தாமல்தான் மலரச் செய்கிறார்.'தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் ஏற்க முடியாததாக இருக்காது.’ எனச் சொல்லி காதல் மற்றும் உறவுகளில் நாம் கொள்ளும் உடைமை மனநிலையையும் போட்டு உடைத்தார்:
‘உங்களுக்கு ஒரு மலர் பிடித்தால் அதை பறிக்காதீர்கள். நீங்கள் பறித்தால் அது இறந்துவிடும். பிறகு அதை நீங்கள் ரசிக்க முடியாது. எனவே ஒரு மலர் பிடித்தால், அதை அதுவாகவே இருக்க விடுங்கள். அன்பு என்பது பாராட்டுதல். உடைமை கொள்ளுதல் கிடையாது.’ - எனக் குறிப்பிட்டு சிறைக்குள் அதுவரை அவதிப்பட்டிருந்த மக்களுக்கும் மனங்களுக்கும் சிறகுகள் முளைக்க வைத்தார். ஒரு பெரும் சுதந்திர உணர்வு பற்றிக் கொண்டதென்னவோ நிஜம்.
இவற்றையும் தாண்டி முக்கியமான அரசியல் நிலைப்பாடு ரஜ்னீஷ்ஷுக்கு இருந்தது.
'உங்களின் குற்றவுணர்ச்சிகளை அப்புறப்படுத்தவே நான் வந்திருக்கிறேன். உங்களை நீங்கள் திரும்ப நம்ப வேண்டுமென்பதற்கே நான் வந்திருக்கிறேன். உங்களின் இருத்தலை நீங்கள் நம்பத் தொடங்கிவிட்டால், எந்த அரசியல்வாதியும் புரோகிதனும் உங்களைச் சுரண்டி அடக்க முடியாது. மனிதனை அச்சம் கொண்டே சுரண்டுகிறார்கள்.’-என மதத்தையும் அரசியலையும் ஒரே தட்டில் வைப்பார்.
தன் நிலைப்பாட்டை பற்றி விளக்குகையில் இப்படி குறிப்பிட்டார்:
”நான் ஒரு கலகவாதி. முற்றிலும் வேறு வகையை சேர்ந்த கலகவாதி. நான் எந்த அரசாங்கத்துக்கும் எதிரி கிடையாது. அரசாங்கம் என்கிற தேவைக்கு எதிரானவன். நான் நீதிமன்றங்களுக்கு எதிரானவன் கிடையாது. நீதிமன்றம் தேவைப்படும் காரணத்துக்கு எதிரானவன். என்றேனும் ஒருநாள் மனிதன் மதரீதியான அரசியல்ரீதியான கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் வாழ்வான்”
என்றார்.
கிட்டத்தட்ட anarchist எனச் சொல்லலாம். ஆனால் அவரின் கல்வி காலத்தில் கம்யூனிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டதாக அவரே குறிப்பிடுகிறார்.
நேரடியாக அரசியல் கருத்துகள் வெளியிட அவர் தயங்கியதில்லை. மகாத்மா காந்தி மற்றும் நேருவை பற்றி கடும் விமர்சனங்கள் வைத்திருக்கிறார்.
இந்தியாவில் சோசலிசம் சாத்தியமில்லை எனக் கூறி, முதலாளித்துவம் வளர்ந்து அனைவரும் நாசம் செய்த பிறகுதான் சோசலிசத்துக்கு மக்கள் தயாராவார்கள் எனக் காரணம் சொன்னார்.
எல்லா மதங்களையும் நிராகரித்தார். தியானம், சுதந்திர மனம், அன்பு முதலியவற்றையே அவர் போதித்தார். பாலுறவை பற்றியும் வெளிப்படையாக பேசினார். அதனால் அவருக்கு ‘செக்ஸ் குரு’ எனக் கூடப் பெயர் சூட்டப்பட்டது.
தனிமனிதவாதத்தையும் அரசியலற்றதன்மையையும் அவர் வளர்த்தெடுத்தார் எனக் குற்றச்சாட்டு உண்டு. ஆனால் அவர்தான் கம்யூனிசத்தின் 'கம்யூன்' வாழ்க்கையையும் இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்.
இன்றைய சாமியார்கள் போல் லிங்க கோபுரத்தையும் நந்தி சிலைகளையும் வழிபட்டு இந்து மதத்துக்கு கூட்டிச் செல்லும் வழியை அவர் செய்யவில்லை. இந்து மதத்திலிருந்து வெளியேற்றும் வேலையைச் செய்யவில்லை. அவர் இங்கிருப்பவர்களை ஜென் தத்துவத்தை நோக்கி அழைத்தார். பற்றற்று பவுதிக வாழ்க்கையில் வாழ்வது எப்படி எனக் கற்றுக் கொடுத்தார்.
சமூகமும் மனமும் சரியான வழியில் ஓர்மைப்படும் வழிகளை அவர் கையளித்தார். ஓஷோவின் ஆன்மிகப் பயணம் தொடங்கிய விதமே பற்றறுத்தலின் தொடக்கம் என அவரே விவரித்திருந்தார். சிறு வயதில் அவரின் தாத்தா மரணமுறுவதை அருகே இருந்து அணு அணுவாக பார்த்து தாத்தாவிம் வதையினூடாக பயணித்து இருத்தலின் அர்த்தத்தைத் தேடத் துவங்கியதாக விளக்குவார். அந்தத் தேடல் இன்றைய சாமியார்களைப் போல் காவியில் முடியாமல் சமூகப் பொருளாதார வேறுபாடுகளினூடாக உள்ளொளிக்கு புத்தனைப் போல் இட்டுச் சென்றது.
அந்தக் காலத்திலேயே ஏராளமானோரின் எடக்கு மடக்கான கேள்விக்கும், புதிர்களுக்கும், வாழ்க்கையின் இன்ப துன்பங்களுக்கும் எளிமையான விளக்கம் கொடுத்தார். இன்று அவரது நினைவு நாள்.இப்போது வாழ்வில் நீங்கள் எந்த நிலையிலும் இருக்கலாம், சந்தோஷமாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு பிரச்னையில் இருந்தாலும் சரி.... உங்களுக்கான ஒரு ஆரம்பமோ, தீர்வோ, முடிவோ, நம்பிக்கையோ ஓஷோவின் இந்த தத்துவ வார்த்தைகளில் அடங்கி இருக்கலாம். படியுங்கள். அவர் நினைவைப் போற்றி வாழ்வை கொண்டாடுங்கள்.
*.இது அப்படி ஒரு சிறிய வாழ்வு.ஆபத்துகளை தேர்ந்தெடுங்கள்,சூதாடுபவனாக இருங்கள்.நீங்கள் எதை இழக்க முடியும்?நாம் வெறுங்கையுடன் வந்தோம்,நாம் வெறுங்கையுடன் போகிறோம்.கொஞ்ச நேரம் விளையாட்டாய் இருக்க, ஒர் அழகான பாடலை பாட,அவ்வளவுதான் முடிந்துவிடும் காலம்.ஆகவே ஒவ்வொரு கணமும் மிகவும் மதிப்பு மிக்கது.
* .உலகத்தை துறந்து விடுங்கள் என்று எல்லா மதங்களும் கற்பிக்கின்றன.உலகத்தை மாற்றுங்கள் என்று நான் கற்பிக்கிறேன்.
*.உங்களது பிரச்சனை இந்த உலகமல்ல, உங்களது பிரச்சனை உங்களின் விழிப்புணர்வுயின்மையே. உங்களின் விழிப்புணர்வுயின்மையை துறந்து விடுங்கள்,உலகத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்
*.உங்களது வாழ்விலுள்ள சகல நஞ்சுகளுக்கும் தியானமே நச்சுமுறிவு.அதுவே உங்களது ஆதார இயல்பை வளமாக்கும் சத்துமாகும்.
*.மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த பூசாரிகள் கண்டுபிடித்த மிக பழமையான ஒரு தந்திரமே குற்றவுணர்வு. அவர்கள் குற்றவுணர்வை உங்களிடம் ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் மடத்தனமான நீங்கள் நிறைவேற்ற முடியாத கருத்துகளை உங்களுக்கு கொடுக்கிறார்கள்.அதனால் அதன்பின் குற்றவுணர்வு எழுகிறது.ஒரு முறை குற்றவுணர்வு எழுந்ததும், நீங்கள் பொறியில் சிக்கியவர்கள் ஆகிவிடுகிறீர்கள். குற்றவுணர்வே-மதம் என்று கூறி கொள்ளும் நிறுவனங்களின் வியாபார ரகசியமாகும்.
*.மகிழ்ச்சியடையுங்கள்,பாடுங்கள்,ஆடுங்கள். உங்களது ஆணவங்கள் உருகி மறைந்து போகுமளவு முழுமையாக ஆடுங்கள்.ஆடுபவன் அங்கு இல்லாமல் போய்விடுமளவு முழுமையாக ஆடுங்கள். வெறும் ஆடல் மட்டுமே எஞ்சியிருக்கட்டும்.அப்போது நீங்கள் எங்கிருந்தாலும் என்னை காண்பீர்கள்.
*.எல்லா சரியானவையும் ஒருவித ஆழமான ஆணவ பயணங்களே.உங்களை பற்றி மிகவும் சரியானவராகவும்,கொள்கை கோட்பாடு கொண்டவராகவும் நினைத்து கொள்வது என்பது உங்களின் ஆணவத்தை முடிந்த மட்டும் அலங்கரித்து கொள்வதல்லாமல் வேறொன்றுமில்லை.வாழ்க்கை மிக சரியாக அமைந்தது அல்ல என்பதை அடக்கமானவன் ஏற்று கொள்கிறான்.
*.நான் பாலுணர்வுக்கு எதிரானவன் அல்ல. ஏனெனில் பாலுணர்வுக்கு எதிரானவர்கள் எப்போதும் பாலுணர்விலேயே இருப்பார்கள். நான் பாலுணர்வுக்கு ஆதரவானவன்,ஏனெனில் அதில் நீங்கள் ஆழமாக சென்றால் விரைவிலேயே நீங்கள் அதை விட்டு வெளியே வந்து விடுவீர்கள். எவ்வளவு அதிக பிரக்ஜையோடு போகிறீர்களோ,அவ்வளவு விரைவில் நீங்கள் அதிலிருந்து வெளியே வந்து விடுவீர்கள்.ஒருவன் பாலுணர்விலிருந்து முழுமையாக வெளியே வந்து விடும் நாள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகும்.
*.கலவி இன்பத்தில் காலம் மறைகிறது, ஆணவம் மறைகிறது, மனம் மறைகிறது. ஒரு கண நேரம் முழு உலகமும் நின்று போகிறது. இதுவேதான் ஆன்மவுணர்வு இன்பத்தில் மிகப்பெரிய அளவில் நிகழ்கிறது. கலவி கணப்பொழுதானது. ஆன்மவுணர்வு நிரந்தரமானது. ஆனாலும் கலவி ஆன்மவுணர்வின் ஒரு பொறியை உங்களுக்கு கொடுக்கிறது.
*.கடவுள் ஒரு நபர் அல்ல. நீங்கள் கடவுளை வழிபட முடியாது. நீங்கள் தெய்வ நிலையில் வாழலாம், ஆனால் நீங்கள் தெய்வத்தை வழிபட முடியாது. வழிபடுவதற்கு ஒருவரும் அங்கில்லை. உங்கள் எல்லா வழிபாடுகளும் வெறும் மடத்தனம். உங்கள் எல்லா கடவுளின் உருவங்களும் உங்களுடைய படைப்பே. அந்த வகையில் தெய்வம் கிடையாது. ஆனால் கண்டிப்பாக தெய்வீகம் உண்டு-பூக்களில், பறவைகளில், விண்மீன்களில், மக்களின் கண்களில், இதயத்தில், ஒரு பாடல் எழும்போது, கவிதை உங்களை சூழ்ந்து கொள்ளும் போது..... இவையெல்லாம் கடவுளே.
*.எல்லா ஒழுக்கங்களும் ஒழுக்கம் அல்ல. ஒரு நாட்டில் ஒழுக்கமாக இருக்கும் ஒன்று மற்றொரு நாட்டில் ஒழுக்கமற்றதாக இருக்கிறது. ஒரு மதத்தில் ஒழுக்கமாக இருக்கும் ஒன்று மற்றொரு மதத்தில் ஒழுக்கமல்ல. இன்று ஒழுக்கமாக இருக்கும் ஒன்று நேற்று ஒழுக்கமில்லை. ஒழுக்கங்கள் மாறும். ஒழுக்கங்கள் வெறும் மேம்போக்கானவை. ஆனால் பிரக்ஜை நிரந்தரமானது. அது ஒரு போதும் மாறாது. அது பரிபூரணம்-சத்தியம்.
*.தந்த்ரா, கிழக்கத்திய மிகப்பெரிய தத்துவம். அது பாலுணர்வை புனிதம் என்று அழைக்கிறது. மிகமிக முக்கியமான வாழ்வு சக்தி என்று அழைக்கிறது. ஏனெனில் எல்லா உயர் மாற்றங்களும் அந்த சக்தியின் மூலமே நிகழ போகிறது. அதை பழிக்காதீர்கள்.
*.அன்பு ஒரு மாறும் உறவு. அது நிலையானதன்று. ஆகவேதான் திருமணம் ஏற்பட்டது. திருமணம் காதலின் மரணம். ஆமாம் நீங்கள் ஒரு அழகான சமாதியை, பளிங்கு சமாதியை, ஒரு அழகான நினைவாலயத்தை எழுப்புகிறீர்கள். ஆனால் நீங்கள் என்ன சொல்லி அழைத்தாலும் அது புதைக்குழிதான்.
*.தியானமில்லாத வாழ்வு வெறும் தீனி தின்று கொண்டு இருத்தலே. நீங்கள் வெவ்வேறுவிதமான தீனிப்பிண்டங்களாயிருக்கலாம், யாராவது முட்டைகோஸ், யாராவது காளிபிளவர்.....ஒரு காளிபிளவர் என்பது காலேஜ் படித்த முட்டைகோஸ்தான், பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.
*.உண்மையான நபர்களுக்கு மட்டுமே உண்மையான நிகழ்வுகள் நிகழ முடியும். குருட்ஜிப் எப்போதும் சொல்வார்: உண்மையை தேடாதே-உண்மையாக மாறு. ஏனெனில் உண்மை உண்மையான நபர்களுக்கு மட்டுமே நிகழ்கிறது. உண்மையாய் இல்லாத நபர்களுக்கு உண்மையல்லாதவையே நிகழும்.
*.ரோஜாக்கள் மிக அழகாக பூக்கின்றன.ஏனெனில் அவை, தாமரைகளாக மாற முயலுவதில்லை. தாமரைகள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் மற்ற மலர்களை பற்றிய கதைகளை அவை கேட்பதில்லை. இயற்கையில் எல்லாமே மிக அழகாக ஒருங்கிணைந்து செல்கின்றன. ஏனெனில் எதுவும் எதுவோடும் போட்டி போடுவதில்லை. எதுவும் மற்றொன்றாக மாற முயல்வதில்லை. எல்லாமே அதனதன் வழியே செல்கின்றன.
*சற்றே இதை கவனியுங்கள். நீங்கள் நீங்களாக இருங்கள். மேலும் நீங்கள் என்ன செய்தாலும் வேறுவிதமாக ஆக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லா முயற்சிகளும் பயனற்றவையே. நீங்கள் நீங்களாக இருக்க மட்டுமே முடியும்.
*.நேசம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. உண்மையான உறவும் ஒரு கண்ணாடியே. அதில் இரண்டு காதலர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அதன் மூலம் கடவுளை அடையாளம் தெரிந்து கொள்கின்றனர். இது கடவுளை சென்றடையும் ஒரு பாதையே.
*.நேசத்தில் ஒன்றும் ஒன்றும் சேர்ந்து ஒன்றுதான், இரண்டல்ல, ஆழமான அன்பில் இருமைத்தன்மை மறைகிறது. கணக்கு கடந்து செல்லப்படுகிறது, அது அர்த்தமற்று போகிறது. ஆழமான அன்பில் இரண்டு நபர்கள் இரண்டு நபர்களாக இருப்பதில்லை. அவர்கள் ஒன்றாகிவிடுகின்றனர். அவர்கள் உணர்வில், செயலில், ஒரே ஒருவராக, ஒரே உயிராக, ஒரே பேரானந்தமாக செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.
*.தியானத்திற்கு சட்டங்களில்லை. அது ஒரு ஜன்னலோ, கதவோ அல்ல. தியானம் என்பது ஒருமுகப்படுத்துவது அல்ல. அது வெளி கவனிப்பு அல்ல. தியானம் என்பது விழிப்புணர்வு.
*.நீங்கள் பயந்தால், அடுத்தவருக்கு உங்களை பயமுறுத்த நீங்களே சக்தியளிப்பவர் ஆகிறீர்கள் என்பது வாழ்வின் அடிப்படையான ஒரு விதி. பயத்தை பற்றிய உங்கள் எண்ணமே போதும், அடுத்தவருக்கு உங்கள்மேல் துணிச்சலை தோற்றுவித்து விடும்.
*.ஒவ்வொரு கணத்தையும் இதுவே கடைசி கணம் என்பதை போல வாழுங்கள். யாருக்கும் தெரியாது- இதுவே கடைசியாகவும் இருக்கலாம்.
*புரிதல் இல்லாத நிலையே யோசனை. உங்களுக்கு புரியாததால்தான் நீங்கள் யோசிக்கிறீர்கள். புரிதல் எழும்போது யோசனை மறைந்துவிடும்.