For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வங்க சிங்கம் சுபாஷ் சந்திர போஸ் நினைவு நாளின்று!

05:45 AM Aug 18, 2024 IST | admin
வங்க சிங்கம் சுபாஷ் சந்திர போஸ் நினைவு நாளின்று
Advertisement

‘’இளைஞர்களே உங்களது ரத்தத்தை கொடுங்கள். நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன்’’ என்று மேடையில் அனல் பேச்சை வீசிய வங்கத்துச் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது அஹிம்சை மூலம் ஆங்கிலேயருக்கு எதிராக களமிறங்கியவர் மகாத்மா காந்தி. அதற்கு நேரெதிராக இளைஞர்களை ஒன்று சேர்த்து, ஆயுதங்களை தாங்கிய புரட்சிப் படையை அமைத்து ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.ஆம்.. சுபாஷ் சந்திரபோஸ்... இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர். இந்தியாவுக்கு என முதல் ராணுவத்தைக் கட்டமைத்தவர். காந்தியை எதிர்த்த காங்கிரஸ் கலகக்காரர். மகாத்மா காந்தி மீது கொண்ட அன்பால் காந்தியை 'தேசப் பிதா' என்று முதன்முதலில் அழைத்தவரும் இவரே. தன் மரணத்தையே மர்மமாக்கியவர். 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார். இதே ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. இதுவரை 12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மமாக தான் இருக்கிறது.

Advertisement

ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் பிறந்த நேதாஜி, பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரி மற்றும் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியிலும் படித்தார். கல்லூரியில் படிப்பு என்ற புத்தகப் புழுவாக மட்டும் அல்லாமல் மாணவர்களுக்கான படைப் பயிற்சியில் கலந்து கொண்டு சிறந்த மாணவனாக தேறினார்..இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான ஐ.சி.எஸ் தேர்வில், இந்திய அளவிலேயே நான்காம் இடம்பெற்று தேர்ச்சியடைந்தார் சுபாஷ். மிகப்பெரிய பதவி.. சர்க்கார் உத்தியோகம்… ஆனால் அவையெல்லாம் ஆங்கிலேயர் முன் அவரை மண்டியிடச் செய்யவில்லை. தேர்ச்சி பெற்ற உடனேயே தனது ராஜினாமா கடிதத்தை மான்டேகு பிரபுவிடம் அளித்தார் சுபாஷ். மதிப்புமிக்க பதவியை உதரித்தள்ளிய அவரைப் பார்த்து, “உன் பெற்றோர் வருத்தப்படமாட்டார்களா” என்று அவர் கேட்டதற்கு, “என் தாய் தந்தையருக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதை விடப் பெரியது” என்று சொல்லி அவருக்கே அதிர்ச்சயளித்தார்.

Advertisement

நேதாஜியின் வேட்கையை கல்லூரியிலேயே கண்ட சி.ஆர். தாஸ், நேதாஜிக்கு தன்னுடைய தேசியக் கல்லூரியின் தலைவர் பொறுப்பை கொடுத்தார். அப்போது நேதாஜிக்கு வயது 25. தீப்பற்ற ஏங்கி நிற்கும் மாணவர்களுக்கு இடையே நெருப்பு பொறியாய் விழுந்தார் சுபாஷ் சந்திர போஸ். வார்த்தைகளில் உற்சாகம், ஒவ்வொரு பேச்சிலும் கக்கிய அனல் மாணவர்களை உத்வேகப்படுத்தியது. நேதாஜியின் பெயர் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது. கொல்கத்தாவில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை தொடங்கி வெற்றிகரமாக செய்து வந்த நேதாஜிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது.

தங்களுக்கு தலைவலியாக நேதாஜி உருவெடுத்ததை உணர்ந்த ஆங்கில அரசு அவரை பொய்க் காரணங்களை கூறி சிறையில் அடைத்தது. ஆனால் நல்ல தலைவனின் வெற்றிக்கு தலைவன் எதிரே நிற்கத் தேவையில்லை அவரின் பெயர் ஒன்றே போதும் என்பதற்கு ஏற்ப சிறையில் இருந்தபடியே சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் நேதாஜி. நேதாஜி என்ற பெயரை மக்கள் எவ்வளவு நம்பினார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.. இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இவரது பெயர் ஒலிக்கக் ஒரு நிகழ்வு தான் காரணம். வீட்டுச் சிறையில் பயங்கர கண்காணிப்பில் இருந்த நேதாஜி, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி தரை வழியாகவே பயணம் செய்து ஆப்கனையும், பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார். சுபாஷைக் காணவில்லை என பாரத நாடே அமளிதுளியான சூழலில், ஜெர்மனியிலிருந்து சுபாஷ் அவர்கள் முழக்கமிட்டார். அதைக் கேட்டு மொத்த உலகமும் இந்தப் போராளியைப் பார்த்து வியந்தது. தன் நாட்டின் சுதந்திரத்திற்காக, தனி ஒரு மனிதனால் இவ்வளவு தூரம் செல்ல முடியுமா என்று ஜப்பான்,இத்தாலி போன்ற நாடுகளே இவரை வியந்து போற்றின. உலகின் தலைசிறந்த எஸ்கேப்களில் சுபாஷின் பெயருக்கு ஸ்பெஷல் இடம் உண்டு.

ஜெர்மனியில் ஹிட்லரை சுபாஷ் அவர்கள் சந்தித்து, இந்திய சுதந்திரத்திற்கு உதவி கேட்டார். என்னதான் உதவி கேட்கச் சென்றிருந்தாலும், சுபாஷின் தேசப்பற்று அவரை கோபமடையச் செய்தது. இந்தியர்களை காட்டுமிராண்டிகள் என்று ஹிட்லர் தனது புத்தகத்தில் குறிப்பிட, அதை எதிர்த்துப் பேசிய போஸ், அவ்வாக்கியத்தை திரும்பப் பெறச்சொன்னார். “இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம்” என்று ஹிட்லர் கூற, “எனக்கு எவனும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்குக் கூறுங்கள்” என்று மொழிப்பெயர்ப்பாளரிடம் சொல்லிவிட்டு கோபமாக வெளியேறினார் சுபாஷ். உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரி ஹிட்லர் முன் முதல்முறையாக அப்படி ஒருவர் பேச, சுபாஷின் திராணியை நினைத்து வியந்தனர் ஹிட்லரின் உதவியாளர்கள்.

சுபாஷின் சீற்றம் தரையில் மட்டும் வெளிப்படவில்லை. அது கடல்,கரை,காற்று,மலை அனைத்தையும் கடந்து நின்றது. ஜப்பான் சென்று இந்திய சுதந்திரப் போருக்கு ஆயத்தமாக விரும்பிய சுபாஷ், ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல் வழியாக சுமார் மூன்று மாதம் பயணம் செய்து டோக்கியோவை அடைந்தார். எங்கும் விமானங்கள் குண்டுகள் வீசி வந்த இரண்டாம் உலகப் போர் சமயம் இப்படி மூன்று மாத காலம், உயிரைத் துட்சமாய் மதித்து அவர் செய்த இப்பயணம் உலக வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றது.

.நாட்டுக்கெனத் தனிக் கொடி அறிவித்தது, ஜன கணமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தது, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியது, ஜான்சி ராணிப் படை என பெயரிட்டு பெண்களுக்கெனத் தனிப் பிரிவு ஏற்படுத்தியது என நேதாஜியின் ஒவ்வொரு அடியும் ஆங்கிலேய அரசுக்கு மரண அடியாக விழுந்தது. மேலும் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை முதன் முதலில் உச்சரித்த தலைவரும் நேதாஜி தான்.

1945 ஆகஸ்ட் 18-ஆம் தேதி விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனால், அவரின் மரணம் குறித்துப் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் எழுந்தன. வீட்டுச்சிறையில் அடைத்து ஆங்கிலேயர்கள் காத்து நின்ற போதே காற்று போல தப்பித்து ஜெர்மனியில் தஞ்சம் அடைந்த மாவீரன் விமான விபத்தில் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என மக்கள் பேசினர்.

நேதாஜி இல்லாவிட்டாலும் அவர் பெயர் ஒலிக்காத மேடைகளே இல்லை. அவர் கூறிய வார்த்தைகள் இந்தியாவில் எங்கெங்கும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.இவர் தனது வாழ்வில் மக்களுக்கு கூறிய ஆகச்சிறந்த 15 பொன்மொழிகளில் சில

🇮🇳. வெறும் அரசியல் சுதந்திரத்தால் தேசம் திருப்தி அடையாது.

🇮🇳. வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம்.

🇮🇳. ஒரு நபர் ஒரு யோசனைக்காக இறக்கலாம், ஆனால் அந்த யோசனை, அவரது மரணத்திற்குப் பிறகு, ஆயிரம் உயிர்களில் அவதாரம் எடுக்கும்

🇮🇳. கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!

.🇮🇳 போராட்டம் இல்லாத வாழ்க்கை போர் (Bore) அடித்து விடும்.

🇮🇳. முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்.

🇮🇳. உண்மையான நண்பனாக இரு, அல்லது உண்மையான பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே.

🇮🇳. வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது.

🇮🇳 உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம்...!

.🇮🇳 இறைவன் நமக்கு செல்வத்தை கொடுக்கவில்லை என்று கவலைப்படாதே. நமக்கு உயிர் என்னும் பெரிய செல்வத்தை கொடுத்திருக்கிறான். அதனைக்கொண்டு எதையும் சாதிக்கலாம்.

🇮🇳 சாதிக்க இயலாததை கூட சாதிக்க இயலும், தன்னம்பிக்கை என்னும் மனோ சக்தியால்.

.🇮🇳 வரலாற்றில் எந்த உண்மையான மாற்றமும் விவாதங்களால் அடையப்படுவதில்லை.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement