மக்களிடம் பிச்சை எடுத்தாவது வானிலை ஆய்வு மையத்தை நவீனப்படுதலாமே!
பொதுவாக, பருவமழை காலங்களில் புயல், மழை தொடர்பான ஒரு அறிவிப்பு சென்டராகவே சென்னை வானிலை மையம் செயல்படுகிறது. ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், க்ரீன் அலர்ட், யெல்லோ அலர்ட் என அறிவிக்கின்றனர். அதெல்லாம் சரிதான்… இன்று காலங்கள் எப்படி எப்படியோ மாறி விட்டன. இந்த பகுதியில் இத்தனை மிமீ / செமீ மழை பெய்யும். புயல் இவ்வளவு நேரம் தாக்குப்பிடித்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பற்றி எல்லாம் மிக துல்லியமாக குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு வானிலை ஆய்வு மையங்கள் செயல்படாதது ஏன்? மிதமான மழை, பரவலான மழை, கனமழை, மிக கனமழை என பொத்தாம்பொதுவாக குறிப்பிடுகிறார்கள்.
சைதாப்பேட்டையில் எவ்வளவு மழை பெய்யும், ஒட்டியுள்ள கிண்டியில் எவ்வளவு பெய்யும் என்று கணிக்கும் அளவுக்கு வானிலை ஆய்வில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த நவீன முன்னேற்றத்தை நாம் பெற்றிருக்கிறோமா என்றுதான் தெரியவில்லை. காரணம், நமது வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் red alert எச்சரிக்கைக்கு குறைந்தபட்சம் 20 செ.மீ மழையிலிருந்து அதிகபட்ச்ம் எத்தனை செ.மீ மழையாகவும் இருக்கலாமாம். இந்த red alert -ல் வசமாக மாட்டிக் கொண்டது நாம்தான்.
சென்னை பெருங்குடியில் ஏறத்தாழ 60 செ.மீ பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினத்தில் 95 செ.மீ மழை பெய்தது. இந்த அதிஅசுர கொடூர மழையை, வானிலை ஆய்வு மையத்தாலேயே கணிக்க முடியாதபோது, சாதாரண மக்களாலும் மாநில அரசாலும் எப்படி கணிக்க முடியுமென்று தெரியவில்லை. சராசரியாக நகர் பகுதிகளில் 2 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தாலே, சாலைகளில் மழை நீர் தேங்கினாலே கனமழை என கூறும்போது, மாவட்டமே வெள்ளத்தில் மிதக்க வைக்கும் மழையை கனமழை என குறிப்பிட்டு தங்கள் வேலையை முடித்துக் கொள்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18ம் தேதி கனமழை பெய்தது. இந்த அறிவிப்பையே 17ம் தேதிதான் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது மிகவும் கவலைக்குரிய விஷயம்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியில் ஒரே நாளில் பெய்த மழை எவ்வளவு தெரியுமா? ஒரு நாளில் 94 செமீ. 36 மணி நேரத்தில் 116 செமீ மழை. அதாவது, தமிழகத்தில் ஆண்டு முழுவதும் பெய்யும் சராசரி மழையை விட இது மிக அதிகம். நெல்லை மாவட்டத்திலும் கடந்த 200 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது.
நமது வானிலை ஆய்வு மையங்களில் அதிநவீனக் கருவிகள் இல்லையென்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட பழைய கருவிகளை வைத்துக் கொண்டு இந்த வானிலை ஆய்வு மையம் காலத்தை கடத்தி வருகிறது. இதனால், போதிய வானிலை மற்றும் காலநிலை குறித்த தகவல்கள் மாநில அரசுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் பெரும்குறையாக இருக்கிறது. நவீன தொழில்நுட்பமும் இங்கு இல்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான். சென்னை, மச்சிலிப்பட்டினம், விசாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் சூறாவளி கண்டறிதல் ரேடார்கள் அமைந்துள்ளன. சென்னை, காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ள ரேடார்கள் சரியாக இயங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிகள் தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகின்றனர். இருப்பினும் இந்தபிரச்னை குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது. இதனாலேயே சென்னையை வெள்ளக்காடாக்கிய மிக்ஜாம் புயலின் தாக்கம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் சரியாக கணிக்க தவறியதாக கூறப்படுகிறது
இது உண்மையென்றால் இதைவிட அசிங்கம் வேறெதுவும் இல்லை. நிதி நெருக்கடி காரணமென்றால், பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்தாவது அக்கருவிகளை வாங்குவதில் தவறில்லை. ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்பதுபோல அதிஅத்திவயாவசியமான வானிலை ஆய்வுக்காக நன்கொடை வசூலிப்பதிலும் தவறில்லை. கூச்சப்படவும் தேவையில்லை. பெரும் முதலாளிகளின் கோடிக்கணக்கான ரூபாய்க் கடன்களைத் தள்ளுபடி செய்யும்போது வராத கூச்சம் இதற்கு மட்டும் வருவானேன்?
நிலவளம் ரெங்கராஜன்