பயமறியா பிரம்மை- விமர்சனம்!!
இந்த அரிய டைட்டிலான பயமறியா பிரம்மை படத்தின் டைரக்டர் சொன்ன சேதியை முதலில் தெரிந்துக் கொள்வது நல்லது: ``இது என்னுடைய முதல் படம். இந்தக் கதையைத்தான் படமாக்க வேண்டும்.இப்படித்தான் படமாக்க வேண்டும் என்ற எந்த சிந்தனையுடனும் செயல்படவில்லை.குழுவாக இணைந்து எங்களால் என்ன செய்ய முடியும் என்பதனை சிந்தித்து.. எங்களுடைய தகுதியும், திறமையும் என்ன என்பதனையும் யோசித்து.. ஒரு கதைக்குள் எங்களால் என்னென்ன செய்ய முடியும் என நினைத்து தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம் ``என்றார்.. ஆனால் அப்படியான அனுபவமோ, அக்கறையோ இல்லாதக் காரணத்தால் வித்தியாசமான முறையில் கதை சொல்கிறேன் என்ற பெயரில், கொலையை கலையாக சித்தரித்து அதிர வைத்து, அதையும் ரசிகர்கனுக்கு புரியாத வகையில் வழங்கி வெறுப்பேற்றி தியேட்டரை விட்டு வெளியேற்றுகிறார்கள்..ஆம்.. ஹாலிவுட்டில் ஸ்ரீதாக க்ரைம் படங்கள் சில வரும் அதில் இரண்டு பேர் பேசிக்கொண்டே இருப்பார்கள், இடையிடையே ஆக்சன் காட்சிகள், மர்டர் காட்சிகள் வரும், பலர் புரியாமலும், சிலர் புரிந்தும் அந்த படத்தை ரசிப்பார்கள். அப்படி ஒரு பாணியில் வந்திருக்கும் படம் தான் பயமறியா பிரம்மை.
படத்தின் கதை என்னவென்றால் 25 வருடத்தில் 96 கொலைகளை செய்த ஜெகதீஷ் சிறையில் அடைக்கப்படுகிறார் . அவரது வாழ்க்கையை எழுத்தாளர் கபிலன் புத்தகமாக எழுதுகிறார். அந்த புத்தகத்தை படிப்பவர்கள் ஜெகதீசாக மாறி கொலை செய்கிறார்கள். அந்தக் கொலைகளுக்கான காரணம் என்ன? ஜெகதீசாக மாறும் வாசகர்கள் யார்?, எழுத்தாளர் கபிலன் யார்? என்பதற்கு புதிரான விடை தருவதுவதுதான் பயமறியா பிரம்மை.
படத்தின் மெயின் ரோல் ஜெகதீஷ் என்றாலும், ஜே.டி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகிய ஆறு பேர் ஜெகதீஷ் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்கள். இந்த ஆறு பேரும் ஜெகதீஷ் என்ற கேரக்டரின் வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்களை திரையில் தங்களால் முடிந்த அளவு எக்ஸ்போஸ் செய்திருக்கிறார்கள்.
மாறன் என்ற நேமில் நடித்திருக்கும் ஜான் விஜய் மற்றும் ஏ.கே, எழுத்தாளர் கபிலனாக நடித்திருக்கும் வினோத் சாகர், ஜெகதீஷின் மனைவியாக நடித்திருக்கும் திவ்யா கணேஷ் என படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை என்னவென்று தெரியாமல், டைரகடர் சொன்னதை கேட்டு அப்படியே நடித்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
மொத்தத்தில் - கோலிவுட்டில் போக்கு தெரியாமல் உருவாகி இருக்கும் அரைக்குறைக் குழந்தை
மார்க் 2/5