கோவை அன்னபூர்ணாவில் கொள்ளை விலையா?
கோவை அன்னபூர்ணா உணவகத்தில் அதீத விலை வைத்து விற்கிறார்கள் என்று பல பதிவுகளைப் பார்க்கிறேன். சிலர் அங்கே உணவருந்திய ரசீதைப் பகிர்ந்து அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? அதீத விலை வைத்து பொருட்களை விற்பவர்களுக்கு தங்கள் தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து அரசிடம் புகார் வைக்க அருகதை இல்லை என்று சொல்ல வருகிறார்களா? இந்த 'அதீத விலை' எனும் சொற்றொடரே தவறான ஒரு பார்வை. சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு பொருளின் விலையை நிர்ணயம் செய்வது சந்தைதான். நாம் கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் ஒரு பொருளுக்குப் போட்டி நிறுவனங்கள், மாற்றுப் பொருட்கள், அல்லது மாற்று சேவைகள் சந்தையில் கிடைக்கின்றனவா என்பது மட்டும்தான்.
ஒரு உதாரணத்துக்கு ஆப்பிள் ஃபோன் மட்டுமே இங்கே கிடைக்கிறது என்ற நிலை இருந்தால் அது தவறு. நம் அனைவராலும் ஒரு லட்சத்துக்கு ஃபோன் வாங்க முடியாது. ஆனால் 8000 ரூபாயக்குக் கூட ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் கிடைக்கிறது. அது கூட கட்டாது என்றால் பட்டன் ஃபோன் 800 ரூபாய்க்குக் கூட வாங்கலாம். ஒரு நல்ல சந்தை அப்படித்தான் இயங்க வேண்டும். போலவே, கோவையில் இயங்கும் ஒரே உணவகம் அன்னபூர்ணா மட்டுமே என்றால் அந்தப் புகாரில் நியாயம் இருக்கிறது. ஆனால் ஆயிரக்கணக்கான உணவகங்கள் பல்வேறு விலை ரேஞ்சில் கிடைக்கின்றன.
10 ரூபாய்க்கும் காப்பி குடிக்கலாம். 500 ரூபாய்க்கும் குடிக்கலாம். அன்னபூர்ணாவை விட விலை அதிகமாகவும் அங்கே உணவகங்கள் கண்டிப்பாக இருக்கும். நட்சத்திர ஓட்டல்களில் பற்பல மடங்கு அதிகமாகவே இருக்கும். எனில் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்களுக்கு அரசிடம் கேள்வி கேட்கும் தகுதி இல்லாமல் போய் விடுகிறதா? நாளைக்கு தாஜ் ஓட்டலுக்கு ஏதாவது வரி சார்ந்த சிக்கல் என்றால் ரத்தன் டாடா வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டுமா?
சந்தைப் பொருளாதார சூழலில் இயங்கும் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் திறமைக்கும், சந்தைத் தேவைக்கும் ஏற்றபடிதான் விலையை நிர்ணயம் செய்து கொள்வார்கள். சொல்லப் போனால் அது தனி மனிதர்களுக்கும் கூடப் பொருந்தும். விஜய்க்கு ஒரு படத்துக்கு 200 கோடி கிடைப்பதையும், நடிகர் மணிகண்டனுக்கு அதில் ஒரு சதவிகிதம் கூடக் கிடைக்காமல் இருப்பதையும் சந்தைதான் முடிவு செய்கிறது.
உண்மையில் எது அநியாயம் தெரியுமா? தனியாரை அல்லது வேறு போட்டியையே அனுமதிக்காமல் அரசாங்கம் தானாகவே ஒரு நிறுவனத்தை நடத்தி அதில் தங்கள் இஷ்டத்துக்கு விலை நிர்ணயம் செய்து இயங்குவது. ரயில்வே, மாநகர போக்குவரத்து, மின்சாரம், டாஸ்மாக் போன்றவை உதாரணங்கள். இவை எல்லாவற்றிலும் விலையை அரசே நிர்ணயம் செய்கிறது. தங்கள் இஷ்டத்துக்கு ஏற்றுகிறது. கூடவே சேவைத் தரம் உயர்த்துவது குறித்த எந்தத் தேவையும் இருப்பதில்லை. விற்பனையாகும் பொருட்களின் தரம் குறித்த பொறுப்பும் கூடத் தேவையிருப்பதில்லை. இதுதான் நிஜமான அநியாயம்.
எனவே, அன்னபூர்ணாவின் விலை நிர்ணயம் குறித்து அங்கலாய்த்துக் கொள்பவர்களுக்கு ஒரு சேதி: தாங்கள் தயாரிக்கும் ஃபோனுக்கு ஒரு லட்சம் விலை ஆப்பிள் வைப்பது போல, தங்கள் நிறுவனத்தில் தாங்கள் தயாரிக்கும் காப்பி, டிபனுக்கு தங்கள் இஷ்டத்துக்கு விலை நிர்ணயிக்கும் முழு உரிமை அன்னபூர்ணாவுக்கு இருக்கிறது. உங்களுக்குக் கட்டுப்படி ஆகாவிட்டால் உங்கள் பட்ஜெட்டுக்கு உகந்த உணவகங்கள் போய் காப்பி அருந்தலாம். கூடவே, அடுத்ததாக அன்னபூரணாவில், அதற்கு அடுத்ததாக நட்சத்திர ஓட்டல்களில் காப்பி அருந்தும் லெவலுக்கு உங்கள் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தும் முனைப்புகளில் இறங்கலாம்.