தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்க தடை!
பொருட்காட்சி, திருமண மண்டபங்கள், பெரிய கடைகள், கடை வீதிகள், சர்க்கஸ் நடக்கும் இடங்களில் மேகத்தைக் கொஞ்சமாகப் பிய்த்து அதற்கு ‘ரோஸ்’நிறத்தை ஏற்றிய ஒரு மிட்டாயைப் பார்த்திருக்கிறீர்களா? அதைக் குச்சியில் அழகாகச் சுற்றியோ பாக்கெட்டில் அடைத்தோ தருவார்கள். வாயில் போட்டால் கரைந்து போகும் அந்தத் திகட்டாத இனிப்புதான் பஞ்சு மிட்டாய்! இந்த பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் புற்றுநோயை உருவாக்கும் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை, தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்க அரசு தடை விதித்துள்ளது.
அந்தக் காலம் முதல் குழந்தைகள் மட்டுமே விரும்பிச் சாப்பிட்ட அந்தப் பஞ்சு மிட்டாய், இன்று உலகம் முழுக்க எல்லா வயதினராலும் விரும்பி சுவைக்கப்படுகிறது. அண்டா போன்ற பாத்திரத்தில் ஒரு குச்சியை எடுத்து சுழற்றி, சிறிய சத்தம் எழ காற்றில் பறக்கும் இறகென, குச்சியை நிறைத்து பூ போல நீட்டுவார் பஞ்சுமிட்டாய் வியாபாரி. ரோஸ் கலர் பூசிய சிறிய மேகத்தை ஏந்தியிருப்பது போல, பஞ்சுமிட்டாயைக் கைகளில் பிடித்தபடி குட்டி ஆச்சர்யமாக அதை பார்த்து நிற்போம். நாவில் பட்டதும் சர்க்கரை சுவை பரவத்தெடங்கி கரைந்துருகும் அந்த ரோஸ் கலர் மேகம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பஞ்சு மிட்டாய் விருப்பமான ஒன்றாக இருக்கும். திருவிழா, பொருட்காட்சி ,பூங்கா என பல இடங்களிலும் நம் கண்களில் ஒருமுறையாவது தட்டுப்பட்டுவிடும். நம்மில் பலருக்கும் குழந்தை பருவத்தில் பஞ்சு மிட்டாயோடு ஒரு கதை இருக்கும். குழந்தைகள் பஞ்சு மிட்டாயின் தனி பிரியர்கள் என்றே சொல்லலாம் பஞ்சு மிட்டாயின் இனிப்புக்கு, அது முழுக்கச் முழுக்க சர்க்கரையால் செய்யப்படுவதே காரணம். சர்க்கரை வெண்மை நிறம் என்பதால் அதனுடன் வேண்டிய நிறமூட்டியைச் சேர்த்துக்கொள்கிறார்கள். இந்த நிறமூட்டிகள் மூலம் புற்று நோய் உள்ளிட்ட வியாதிகள் வர வாய்ப்பு என்பதை இப்போது கண்டறிந்து பஞ்சு மிட்டாய்-க்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக சென்னை மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அவைகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மெரினாவில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் செல்லை உருவாக்கும் வேதிபொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில், இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு பாதுகாப்புத்துறையின் பரிந்துரையின்பேரில் பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் தடை செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.இந்த நிலையில், தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தமிழக அரசு தடை வித்துள்ளது. உணவு பாதுகாப்பு துறையின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், தடையை மீறி பஞ்சு மிட்டாயை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அடிசினல் ரிப்போர்ட்:
பஞ்சு மிட்டாய் முதன் முதலில் 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் உருவாக்கம் கைசெய்முறையாக இருந்தமையால் பஞ்சு மிட்டாய் விலை அதினமான பொருளாகவே இருந்திருக்கிறது. பஞ்சு மிட்டாய் பணக்கார்களுக்கு உகந்ததாகவே இருந்திருக்கிறது. ஆக பஞ்சு மிட்டாய் அனைவரையும் சென்றடைய ஓர் இயந்திரம் கண்டாக வேண்டும் என மருத்துவர் ஒருவருக்குத் தொடங்கியிருக்கிறது.1897- ல் பல் மருத்துவர் வில்லியம் மோரிசன் மற்றும் மிட்டாய் வியாபாரி ஜான் சிவார்டன் இணைந்து சுழழும் பஞ்சு மிட்டாய் இயந்திரத்தை உருவாக்கினர். பின் 1904 -ல் அவை உலகுக்கு அறிமுகமாகிறது. உலகின் மிக எதிர்பார்த்த கண்டுபிடிப்பாக மாறி , சில வருடங்களிலே உலகெங்கும் பஞ்சு மிட்டாய் மோகம் துளிர் விட்டது.பஞ்சு மிட்டாய் வெள்ளை நிறத்தில் இருந்து பல வண்ண உடைகள் அணியும். பல வண்ணங்கள் பஞ்சு மிட்டாய்க்கு உயிர் கொடுத்தாலும் கண்ணை பறிக்கும் ரோஸ் நிறத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது என்பதை விட அந்த கலர் மூலமே நஞ்சு பரப்பப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.