தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பக்ரீத் தோன்றியது எப்படி தெரியுமோ?

06:50 AM Jun 17, 2024 IST | admin
Advertisement

ஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாகப் போற்றப்படுவதுதான் பக்ரீத் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்நாளில் புத்தாடை அணிந்து தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 22, ஆவணி 6ம் தேதி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Advertisement

அது சரி இந்த பக்ரீத் தோன்றியது எப்படி தெரியுமோ?

Advertisement

நபி இப்ராஹிம் தனது காலத்தில் நடந்த கொடுமையான ஆட்சியின்போது, அச்சமின்றி இறைக்கொள்கையை முழங்கியவர். உலகளாவிய பல நாடுகளுக்குப் பயணம் சென்று அன்பின் மார்க்கத்தை எடுத்துரைத்தார். ‘இறைவனே எல்லாம்... அவனுக்கு இணையாக எதுவும் இல்லை’ எனும் இறைப்பற்றோடு வாழ்ந்த அவருக்கு, இரண்டு மனைவிகள்... குழந்தைகள் இல்லை. இதனால், மனம் வருந்திய நபி இப்ராஹிம், புத்திரப் பாசம் கிடைக்காமல் ஏங்கினார். அப்போதுதான் மிகப் பெரும் அருட்கொடையாக இப்ராஹிமின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையார் மூலம் நபி இஸ்மாயில் பிறந்தார். இதன்பின் நபி இப்ராஹிம், வாழ்க்கைப் பயணம் இன்பமயமாக தொடர்ந்தது. அதேவேளையில், இறைவன் மீதுள்ள பற்றானது நாளுக்குநாள் பெருகியவண்ணம் இருந்தது.

ஒருநாள் நள்ளிரவு நேரம். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இப்ராஹிமுக்கு ஒரு கனவு வந்தது. தன்னுடைய மகனை, தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போன்ற கனவை நபி கண்டார். அதன்பின், கவலையில் ஆழ்ந்தார். தாம் கண்ட கனவை இப்ராஹிம் நபி, தம்முடைய அன்பு மகனிடம் கூறினார். இறைப்பற்றில் அளப்பரிய நம்பிக்கையைக் கொண்டிருந்த இப்ராஹிம் நபிக்கு பிறந்த பிள்ளை, தந்தையவர் கருத்துக்கு மாறாகச் செயல்பட வாய்ப்பே இல்லையே.

‘‘கனவில் வந்த இறைக் கட்டளையை உடனே நிறைவேற்றுக... எம் தந்தையே!’’ என்று தன்னுடைய தந்தையிடம் நபி இஸ்மாயில் பணிந்தார், பணித்தார்.

‘கொண்ட பாசத்தினால் தந்தையின் மனம் மாறிவிடக் கூடாதே?’ என்ற எண்ணம், மகனார் நபி இஸ்மாயில் நெஞ்சில் நெருடலைத் தந்தது. அதற்கென ஒரு வழியைக் கையாண்டார். தந்தையின் கண்களைத் துணிகளால் கட்டி, கையிலே கட்டாரியையும் அவரே கொண்டுவந்து கொடுத்தார்… இப்போது தந்தையவர் கைகளிலே வெட்டும் கோடாரி, கோடாரியின் கூர்முனையில் மைந்தர் நபி இஸ்மாயில் கழுத்து... அந்தச் சமயம்தான், எங்கிருந்தோ வந்த ஒரு குரல் அல்லது ஓர் அழுத்தம் அல்லாஹ்வின் எண்ணமாக எழுந்து நின்றது. ‘சிஃப்ரயீல்’ எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அல்லாஹ் அந்த ‘பலி’யைத் தடுத்தார்.

மேலும், அங்கே ஓர் ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு இபுராஹிமுக்குக் கட்டளையிட்டார். மைந்தன் நபி இஸ்மாயில் உயிரையே பலி கொடுக்க துணிந்த அந்தத் தந்தையின் தியாகத்தைப் புகழ்ந்து, அந்த நரபலியைத் தடுத்து, நிறுத்தியது இறைவன் அல்லாஹ்வின் அன்பு.அந்த நாளின், சம்பவத்தின் நினைவாக (பதிலாக) ஓர் ஆட்டினைப் பலியிட்டு, அதை அனைவருக்கும் பகிர்ந்தளித்து புசிக்குமாறு ‘இறை’ குரல் கூறியது. காலங்காலமாய்க் காத்துக் கிடந்து பெற்றதோ ஒரு பிள்ளை... அந்தப் பிள்ளையையும் இறைவனுக்குப் பலியிடத் துணிந்த தியாகத்தின் திருவுருவமாக, நபி இப்ராஹிமின் தியாகம் போற்றப்படுகிறது.

தந்தையின் தியாகத்தை உணர்ந்து, தந்தையே பாசத்தால் மறுதலித்துவிடுவாரோ என்ற எண்ணத்தில், அதற்கான மாற்றுவழியையும் கண்டெடுத்த அருமை மகனார் நபி இஸ்மாயில் தியாகமும் போற்றப்படுகிற நாளாக ஹஜ் பெருநாள் எனப்படும், ‘பக்ரீத்’ போற்றப்படுகிறது. பலியிடல், தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த பக்ரீத் நாளில் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பலியிட்ட விலங்கின் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து... ஒரு பங்கை, அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு... மூன்றாவது பங்கை, அவர்கள் பயன்படுத்துகின்றனர். முக்கிய விஷயமாகப் பலியிடப்படும் விலங்கு ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது பூர்த்தியானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது.இறை தூதர் எனப் போற்றப்படும் இப்ராஹிமின் அர்ப்பணிப்பும், புனிதத்துவமும் நிறைந்த வாழ்வை எண்ணி, அவர் தம் தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நினைவு நாள்தான் இந்த ‘பக்ரீத்’.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
animal slaughterBakridBakrid festival historycharityEid al-AdhaEid prayersFeast of Sacrificefestivalfestive mealsgift givingsocial gatheringsதியாகத் திருநாள்பக்ரீத்
Advertisement
Next Article