பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலி கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!
பார்லிமெண்டில் டேனிஷ் அலி என்ற எம்பியை பாஜக உறுப்பினர் தீவிரவாதி என்பது உள்ளிட்ட கடும் வார்த்தைகளை பயன்படுத்தி, அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து தனி ஆளாக நியாயம் கேட்டு குரல் கொடுத்து வந்த டேனிஷ் அலி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அதன் எம்பி டேனிஷ் அலியை சஸ்பெண்ட் செய்தது அக்கட்சி தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
2019 லோக்சபா தேர்தலில், டேனிஷ் அலி தனது சொந்த ஊரான ஹபூரை விட்டு உ.பி.யில் உள்ள அம்ரோஹாவில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.இது அவரது முதல் தேர்தல் போட்டியாக இருந்தபோதிலும், அலி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியான அம்ரோஹாவில் இருந்து பெரிய அளவில் வெற்றி பெற்றார். தற்போதைய பாஜக எம்பி குன்வர் சிங் தன்வாரை 63,000 க்கும் அதிகமான வித்தியாசத்தில் தோற்கடித்தார். இருப்பினும், அம்மாநிலத்தில் பாஜக மகத்தான வெற்றி பெற்றது. இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்தவர் டேனிஷ் அலி. சமீபத்தில் பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி இவரை நாடாளுமன்றத்திலேயே தீவிரவாதி என கொச்சைப்படுத்தி இருந்தார்.. இதற்கு எதிராக எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் எழுப்பினர். அவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நியாயம் கேட்டு டேனிஷ் அலி புகாரளித்தார். ரமேஷ் பிதுரியும் தம் பங்குக்கு டேனிஷ் அலிக்கு எதிராக புகார் தந்தார். இந்த விவகாரத்தில் மக்களவை சிறப்புரிமைக் குழு விசாரணை மேற்கொண்டு வந்தது.
தனக்கு நியாயம் கேட்டு தனி நபராக நாடாளுமன்ற வளாகத்தில் டேனிஷ் அலி நெடிய போராட்டத்தினை மேற்கொண்டார். மக்களவையில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா வெளியேற்றப்பட்டபோது, தன்னைப் போன்றே பாதிக்கப்பட்டவர் என்று அவருக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தினார். ’பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்காதீர்கள்’ என்ற பதாகை அணிந்து நேற்றும் நாடாளுமன்றத்துக்கு வெளியே டேனிஷ் அலி தனிநபர் போராட்டம் நடத்தினார்.அதுமட்டுமில்லாமல், நேற்று பதவி பறிக்கப்பட்ட மகுவா மொய்த்ராவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்பி டேனிஷ் அலி பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில் இன்று டேனிஷ் அலியை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக பகுஜன் சகாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் டேனிஷ் அலி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக பிஎஸ்பி வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது. ’கட்சியின் எச்சரிக்கையை மீறி அதன் கொள்கைகள், சித்தாந்தம் மற்றும் ஒழுக்கத்திற்கு எதிராக தொடர்ந்து டேனிஷ் அலி நடந்துகொண்டார். கட்சிக்கு எதிரான அவரது தொடர் நடவடிக்கை காரணமாக தற்போது இடை நீக்கம் செய்யப்படுகிறார்’ என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் முடிவு தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ள டேனிஷ் அலி, ’இன்று காந்தியும் அம்பேத்கரும் அழுகிறார்கள்’ என்பதோடு தனது தரப்பு விளக்கத்தை முடித்துக்கொண்டார். கட்சியின் அனுமதியின்றி டேனிஷ் அலி மேற்கொண்ட பாஜக எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசியல் களத்தில் தனியாவர்த்தன நடவடிக்கைகள் ஆகியவையே அவரது இடைநீக்கத்தின் பின்னிருப்பதாக சொல்லப்படுகிறது.