தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி : கட்டுப்பாடுகளை அறிவித்தது மாநகர காவல்துறை.!

09:39 AM Jan 14, 2024 IST | admin
Advertisement

துரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் ஒன்றை செய்தனர். அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.அதனால் அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து ஒரு கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து சமாதான கூட்டம் நடத்தி அனைவரின் கருத்தை கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

Advertisement

இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட சமாதானக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டை நடத்துவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை என கூறியதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனு விசாரணைக்கு வந்த போது, “இந்த வருடமும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த எந்த தடையும் இல்லை எனவும் போட்டியின் போது தனி நபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ பிரச்சனை அல்லது இடையூறு செய்யக்கூடாது, அதை மீறி செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்ததை அடுத்து இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 8ம் தேதி ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்தக்கால் ஊன்றும் விழா வணிக வரித்துதுறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து போட்டிகளுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

Advertisement

மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த போட்டிகளை நடத்துகிறது. மாநகராட்சி சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் வினோத் தலைமையில், 150க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் மாடுபிடி வீரர்கள் காயமடைந்தால் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை துறை சார்பாக இணை இயக்குனர் நடராஜ்குமார் தலைமையில் ஒன்பது குழுவினர் காளைகளுக்கு பரிசோதனைகள் நடத்த உள்ளனர். பாதுகாப்பு பணிகளை மாநகர கமிஷனர் லோகநாதன் தலைமையில், 4 துணை ஆணையர்கள், 10 உதவி ஆணையர்கள் கண்காணிப்பில் 1500 போலீசார் மேற்கொள்கின்றனர்.

கண்காணிப்பு கேமரா, நடமாடும் கழிப்பறை, குடிநீர் தொட்டி, இரண்டடுக்கு தடுப்பு வேலிகள், அவற்றின் மீது இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருவாய் துறை சார்பாக பரிசுப் பொருட்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெறும் வீரருக்கு தமிழ்நாடு முதலைமச்சா சார்பில் ஒரு காரும், சிறந்த காளைக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக ஒரு காரும் வழங்கப்படவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நாளை காலை 7.30 மணிக்கு வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைக்கிறார்.

அவருடன் கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராண, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், அவனியாபுரம் வார்டு கவுன்சிலர் கருப்பசாமி மற்றும் மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மாடு பிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு டோக்கன் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. க்யூஆர் கோடு கொண்ட டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே, ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியும். மாடுகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் .போலீஸ் துறை விதித்துள்ள கட்டுபாடுகள் இதோ:

ஜல்லிக்கட்டில் பங்கேற்க வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு மற்றும் முத்துப்பட்டி ரோடு வழியாக காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை மட்டுமே அனுமதி.

காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள், அவனியாபுரம் முத்துப்பட்டி சந்திப்பில் நிறுத்த அனுமதிக்க இன்று நள்ளிரவு 12 மணி முதல் காளைகள் மற்றும் உரிமையாளர்கள், அவருக்கு உதவியாக ஒருநபர் மட்டும் வரிசையில் நிற்க அனுமதி.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த அனுமதிச்சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதி.

காளைகளுடன் வரும் உரிமையாளரும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது.

காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்காக கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ கொண்டுவரக்கூடாது.

ஜல்லிக்கட்டு காளைகளின் மூக்கணாங்கயிறுகளை நீக்குவதற்கு உரிய பயிற்சிபெற்ற அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் மாவட்ட நிர்வாகத்தால் நியமனம்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதிசீட்டு மற்றும் உரிய மருத்துவ தகுதிச்சான்றும் கொண்டுவரவேண்டும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மது போதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்புறம் மற்றும் அருகில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எந்த நபர்களையும் வீட்டில் இருந்தோ அல்லது மேல் மாடியில் இருந்தோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கும்போது, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரசனை ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை.

அனுமதி பெற்ற காளைகள், உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளையும் மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags :
avaniyapuramcity policejallikatturestrictions
Advertisement
Next Article