அவனி லக்ரா தங்கத்திற்கு உரிய தங்கமே!
அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சரியங்கள் காத்திருக்கலாம் ஆதலால் கடைசி நொடி வரை விடாமல் இருக்க வேண்டும்.. 30 ரன்களை 30 பந்துகளில் தென்னாப்பிரிக்கா அணி எடுக்க வேண்டும் என்ற போது, இந்தியா வெல்லும் என நாம் நினைக்கவில்லை. ஆனால் ஆச்சரியம் நிகழ்ந்தது. அதே போலத்தான் இன்று அவனி லக்ரா தங்கப்பதக்கம் வென்றதும், 23 ஆவது சுடுதலுக்குப் பின், கொரிய வீராங்கனையை விட 0.8 புள்ளிகள் (239.2) பின் தங்கியிருந்தார்.
தங்கப்பதக்கத்தை உறுதி செய்ய இறுதி வாய்ப்பு, 10.9, 10.8, 10.8, 10.6, 10.7 என வரிசையாக மிகச்சிறப்பாக சுட்ட கொரிய வீராங்கனை நிச்சயமாக இறுதி வாய்ப்பை சிறப்பாக சுட்டு தங்கம் வெல்வார் என்றே அனைவரும் நினைத்திருப்போம்..10.8 புள்ளிகள் பின் தங்கினாலும், நம்பிக்கையோடு 10.5 புள்ளியை சுட்டார் அவனி லக்ரா, 9.8 எடுத்தாலே தங்கப்பதக்கம் என்ற நிலையில் கொரிய வீராங்கனை, துரதிஷ்டம் 6.8 புள்ளிகளையே பெற்றார் கொரிய வீராங்கனை. அவனி லக்ரா தங்கம் வென்றதை அவராலே நம்ப முடியவில்லை. அப்படியான ஒரு புன்னகையை வெளிப்படுத்தினார்.
0.8 புள்ளிகள் பின் தங்கி இருக்கிறோமே, வெள்ளி தான் கிடைக்கும் என்ற அலட்சியத்தில் அவனி லக்ரா கடைசி வாய்ப்பை சுட்டிருந்தால், கொரிய வீராங்கனைக்கு நெருக்கடி இல்லாமல் போயிருக்கும். கடைசி சுற்று வரை விடாமல் போராடிய அவனி லக்ரா தங்கத்திற்கு உரிய தங்கமே!
2012ஆம் ஆண்டு நடந்த கார் விபத்து ஒன்றால் உண்டான முதுகுத் தண்டுவட பாதிப்பால் அவனி மாற்றுத்திறனாளி ஆனார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர். 2015இல் ஜெய்ப்பூரில் உள்ள ஜகத்புரா விளையாட்டு வளாகத்தில் தமது பயிற்சியைத் தொடங்கினார்.அவரது தந்தை அவனி விளையாட்டில் ஈடுபட ஊக்கமளித்தாகவும், தொடக்கத்தில் அவர் துப்பாக்கி சுடுதல், வில் வித்தை என இரண்டிலுமே ஆர்வம் காட்டினார் என்றும் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி இணையதளம் தெரிவிக்கிறது.