For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக கோப்பை தொடர்: ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை !!

10:18 PM Nov 19, 2023 IST | admin
உலக கோப்பை தொடர்  ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை
Advertisement

கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நாட்களாக உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்த இந்த தொடரின் லீக் சுற்றில் மொத்தம் 10 அணிகள் மோதின. ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒரு முறை மோதிய நிலையில், தொடர்ச்சியாக 9 வெற்றிகளை வசப்படுத்தி அசத்திய இந்தியா புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Advertisement

தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அடுத்த 3 இடங்களைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. இதைத் தொடர்ந்து, மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்துடன் மோதிய இந்தியா 70 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 4வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த 2வது அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

Advertisement

சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பரபரப்பான பைனல், அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்த தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய அணியும், தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியாவும் மோதிய இந்த போட்டி, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. போட்டியை நேரில் காண ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டதால் மோடி ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இந்திய விமானப் படையின் ‘சூரியாகிரன்’ குழு விமானங்கள் ஸ்டேடியத்துக்கு மேலாகப் பறந்து செய்த சாகசம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இரு அணிகளும் மாற்றம் ஏதுமின்றி பைனலில் களமிறங்கின. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். கேப்டன் ரோகித், கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். வழக்கம்போல ரோகித் அடித்து விளையாட, இந்திய ஸ்கோர் டாப் கியரில் எகிறியது. மறுமுனையில் 7 பந்துகளை சந்தித்த கில் 4 ரன் எடுத்து ஸ்டார்க் வேகத்தில் ஸம்பா வசம் பிடிபட்டார். அடுத்து ரசிகர்களின் ஆரவார வரவேற்புக்கிடையே உள்ளே வந்த கோஹ்லி பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ரோகித் பவுண்டரியும் சிக்சருமாக விளாசி அரை சதத்தை நெருங்கினார்.

ஸ்டார்க் வீசிய 7வது ஓவரில் கோஹ்லி ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க, ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கம் அதிந்தது. மேக்ஸ்வெல் வீசிய 10வது ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்த ரோகித், மீண்டும் தேவையில்லாமல் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட் தானம் செய்தார். ஷ்ரேயாஸ் 4 ரன் மட்டுமே எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் விக்கெட் கீப்பர் இங்லிஸ் வசம் பிடிபட, இந்தியா 10.2 ஓவரில் 81 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து கடும் நெருக்கடியில் சிக்கியது. இதனால், கோஹ்லி கே.எல்.ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஓவருக்கு 8+ ரன் என்ற வேகத்தில் சென்று கொண்டிருந்த ஸ்கோர் , படிப்படியாகக் குறைந்து 5 ரன்னாக சரிந்தது.

எனினும், உறுதியுடன் விளையாடிய கோஹ்லி அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். அவர் 54 ரன் எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் ஆட்டமிழக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கோஹ்லி ராகுல் 4வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த ஜடேஜா மிக நிதானமாக விளையாட, ராகுல் அரை சதத்தை நிறைவு செய்தார். ஜடேஜா 22 பந்தில் 9 ரன் மட்டுமே எடுத்து ஹேசல்வுட் வேகத்தில் இங்லிஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். ராகுல் 66 ரன் (107 பந்து, 1 பவுண்டரி), ஷமி 6 ரன் எடுத்து ஸ்டார்க் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பும்ரா 1 ரன்னில் வெளியேற, சூரியகுமார் 28 பந்தில் 18 ரன் எடுத்து ஹேசல்வுட் பந்துவீச்சில் இங்லிஸ் வசம் பிடிபட்டார்.குல்தீப் 10 ரன் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட்டாக, இந்தியா 50 ஓவரில் 240 ரன் குவித்து ஆல் அவுட்டானது. சிராஜ் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க் 3, ஹேசல்வுட், கம்மின்ஸ் தலா 2, மேக்ஸ்வெல், ஸம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 241 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி. களமிறங்கியது. வார்னர், ஹெட் இணைந்து துரத்தலை தொடங்கினர். வார்னர் 7 ரன் எடுத்து ஷமி வேகத்தில் கோஹ்லியிடம் பிடிபட ஆஸி.க்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே மார்ஷ் 15, ஸ்மித் 4 ரன் எடுத்து பும்ரா வேகத்தில் வெளியேற, ஆஸி. 7 ஓவரில் 47 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இதனால் உற்சாகம் அடைந்த இந்திய வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். ஒவ்வொரு பந்துக்கும் ரசிகர்கள் ஆரவாரக் கூக்குரலிட்டு ஊக்கப்படுத்த… இரு அணி வீரர்களுக்குமே களத்தில் பதற்றத்துடன் கூடிய நெருக்கடி நிலவியது. ஆஸி. வீரர்கள் கொடுத்த சில வாய்ப்புகளை இந்தியா பயன்படுத்திக்கொள்ளத் தவற, அந்த அணி கொஞ்சம் கொஞ்சமாக இலக்கை நோக்கி முன்னேறத் தொடங்கியது.

ஹெட் லாபுஷேன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு நங்கூரம் பாய்ச்சி நிற்க, அவர்களைப் பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் பரிதவித்தனர். அபாரமாக விளையாடிய ஹெட் 95 பந்தில் சதம் விளாசி ஆட்டத்தை ஆஸி. பக்கம் திருப்பினார். மறு முனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாபுஷேன் அரை சதம் அடித்தார். ஹெட் 137 ரன் (120 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹெட் லாபுஷேன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 192 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து வென்று 6வது முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது. லாபுஷேன் 58 ரன் (110 பந்து, 4 பவுண்டரி), மேக்ஸ்வெல் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடர்ச்சியாக 10 வெற்றிகளுடன் பைனலுக்குள் நுழைந்த இந்தியா, துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவியது, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை உடைந்து நொறுங்க வைத்தது. எதிர்பாராத இந்த தோல்வியால் இந்திய வீரர்களும் மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர். இந்தியா 3வது முறையாக உலக சாம்பியனாகும், பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடித் தீர்க்கலாம் என காத்திருந்த ரசிகர்கள் கண்ணீர் மழையில் நனைந்தனர். 2003 உலக கோப்பை பைனலில் ஆஸி.யிடம் தோற்று 2வது இடம் பிடித்த இந்தியா, இம்முறை அதற்கு பழிதீர்க்கும்… 3வது முறையாக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு கானல் நீராகக் கரைந்து போனது. டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

டெயில் பீஸ்

🏏 நடப்பு தொடரில் ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் 5வது முறையாக டாஸ் வென்றார்.

🏏 கில் படத்தை பகிர்ந்து ‘சதம் வேண்டும்’ என சச்சின் மகள் சாரா நேற்று முன்தினம் சமூக ஊடகத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால் கில் 4 ரன்னிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

🏏 ஸ்டார்க் பந்துவீச்சில் 3வது முறையாக கில் ஆட்டமிழந்தார். 4 ஆட்டங்களில் ஸ்டார்க்கின் 45 பந்துகளை எதிர்கொண்ட கில் 38 ரன் எடுத்துள்ளார்.

🏏ஒரு ஆண்டில் நடந்த ஒருநாள் ஆட்டங்களில் அதிக ரன் குவித்த ஜோடிகளின் பட்டியலில் ரோகித்-கில் இணை 1523 ரன்னுடன் 2வது இடம் பிடித்தது. 1998ல் டென்டுல்கர்-கங்குலி 1635 ரன் குவித்து முதல் இடத்திலும், 1999ல் ஆஸி.யின் கில்கிறிஸ்ட்- வாக் இணை (1518 ரன்) 3வது மற்றும் 2000ல் டென்டுல்கர்-கங்குலி (1483 ரன்) 4வது இடத்திலும் உள்ளனர்.

🏏 ஒருநாள் போட்டிகளில் ஒரே அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் குவித்தவர்கள் பட்டியலில் ரோகித் நேற்று முதல் இடம் பிடித்தார். அவர் ஆஸி அணிக்கு எதிராக 86 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். கிறிஸ் கேல் இங்கிலாந்துக்கு எதிராக 85 சிக்சர், ஷாகித் அப்ரிடி இலங்கைக்கு எதிராக 63 சிக்சர், ஜெயசூரியா பாகிஸ்தானுக்கு எதிராக 53 சிக்சர்கள் அடித்துள்ளனர்.

🏏 ஷ்ரேயாஸ் நடப்பு தொடரில் 3வது முறையாக 11 ஓவருக்குள் குறைந்த ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி உள்ளார். நேற்று 3பந்தில் 4 ரன், லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக 16 பந்தில் 4 ரன், ஆஸிக்கு எதிராக 3 பந்தில் டக் அவுட் ஆகியுள்ளார்.

🏏 ஒரு உலக கோப்பையில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற பெருமை ரோகித்துக்கு கிடைத்துள்ளது (11 போட்டியில் 597 ரன்). ரோகித் தொடர்ந்து 2வது முறையாக உலக கோப்பையில் 400+ ரன் குவித்துள்ளார்.

🏏 ஒரு உலக கோப்பையில் அரையிறுதி, பைனலில் 50+ ரன் அடித்தவர்கள் பட்டியலில் கோஹ்லி நேற்று இடம் பிடித்தார். உலக கோப்பையில் தொடர்ந்து 5 ஆட்டங்களில் அரைசதத்துக்கு மேல் விளாசியவர்கள் பட்டியலில் 2வது முறையாக கோஹ்லி இடம் பிடித்தார். அவர் 2019, 2023 உலக கோப்பையில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் உள்ள ஒரே ஒரு வீரர் ஆஸி.யின் ஸ்டீவன் ஸ்மித் (2015).

🏏ஒரு உலக கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய ஸ்பின்னர் பட்டியலில், இலங்கையின் முரளிதரன் சாதனயை ஸம்பா நேற்று சமன் செய்தார் (23 விக்கெட்).

🏏 10வது ஒவரின் கடைசி பந்தில் ஷ்ரேயாஸ் பவுண்டரி அடித்தார். அதன் பிறகு 97 பந்துகளுக்கு பிறகுதான் இந்தியாவுக்கு பவுண்டரி கிடைத்தது. அதாவது 16 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட கிடைக்கவில்லை. அதன் பிறகு 27வது ஓவரின் 2வது பந்தில் ராகுல் பவுண்டரி அடித்து அந்த வறட்சியை போக்கினார். இந்த 16 ஓவர்களையும் கோஹ்லி, ராகுல் தான் விளையாடினர்.

🏏 பைனல் நேரடி ஒளிபரப்பை ஹாட்ஸ்டாரில் 5.2 கோடி பேர் பார்த்து ரசித்தது புதிய சாதனையாக அமைந்தது.

Tags :
Advertisement