81 வயதில் இப்படி சீர் கொண்டு செல்வதெல்லாம் சரியல்ல!
எதிர்பார்த்தது போலவே சீர் கொண்டு போன இந்த தாத்தா வைரல் ஆகிவிட்டார். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் வைரல் ஆக்கப்பட்டுவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 81 வயது பெரியவர், தம் மகளுக்காக 14 கி.மீ தூரம் பொங்கல் சீர் கொண்டு போகும் காட்சிகள் சில ஆண்டுகளாக பரவி வருகின்றன. இந்த ஆண்டு அவர் பயணம் துவங்குவது முதல், சைக்கிளில் பயணிப்பதுவரை வீடியோவில் பதிவு செய்யப்படுவதைப் பார்க்கலாம். குறிப்பாக அந்தப் பகுதி மக்கள் அதனை கொண்டாட்டமாக பதிவு செய்வதைக் காண முடிந்தது.
இந்நேரம் 'பின்னாடி கட்டைகள் (BW)' மற்றும் 'அமளி/கலவரம் (Galatta)’ சானல்கள் அவரை நோக்கி படையெடுத்திருப்பார்கள் என நம்புகிறேன். உறவுகளின் உணர்வுப்பூர்மான பிணைப்புகள் அத்தனை எளிதில் விளக்க முடியாதவை. ஒரே இனிப்புதான் ஊட்டப்படும்போது ஒரு ருசி, திணிக்கப்படும்போது வேறொரு ருசி, என்பது போலவே அன்பின் நிமித்தம் வழங்கப்படும் ஒன்றின் மகிழ்வும், நிர்பந்தத்தின் பேரில் தரப்படும் ஒன்று தரும் உணர்வும் வேவ்வேறானது.
பெரியவரின் சீர் வழங்கும் நிகழ்வை வெறும் சடங்கு, சம்பிரதாயமாகப் பார்க்காமல், அவருக்குத் தெரிந்த வகையிலான அன்பின் செய்கையாகவே நான் உள்வாங்கிக் கொள்கிறேன்.அதே சமயம், 81 வயதில், அவ்வளவு தூரம் கரும்புக் கட்டினை தலை மேல் வைத்தபடி, வளைவு நெளிவு மற்றும் வேகத்தடைகளில் கழுத்தை சமன் செய்தபடி, பேருந்துகள் விரையும் நெடுஞ்சாலையில் 81 வயது பெரியவர் சைக்கிளில் பயணிப்பது அவருக்கும் சரி, மற்றவர்களுக்கு சரி மிகவும் ஆபத்தானது. அதனை சரியாகப் புரிந்து கொண்டு, சீர் கொண்டு போக மாற்று முறைகளைப் பயன்படுத்த அறிவுறுத்துவது மிக முக்கியமானது.