நீதிபதியாகிய நான் பிரதமரிடம் தனியாக பேசியதென்ன? சந்திரசூட்!
கடந்த மாதம் செப் 7 -ல் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி நீதிபதி சந்திரசூட் வீட்டில் நடந்த ஒரு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு நடத்தினார். அதற்காக போயிருந்த மோடியை சந்திரசூட் குடும்பத்தினர் வரவேற்று அழைத்து சென்றனர். இது குறித்த வீடியோவை மோடி 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அப்போது இதனை அரசியலாக்கிய சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்களை அரசியல்வாதிகள் எப்படி சந்திக்கலாம் என கேள்வி எழுப்பின. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து டெல்லியில் நடந்த லோக்சட்டா கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரசூட் சொன்னது:
இது போன்ற சந்திப்புகள் ஏன் நடக்கின்றன என பலர் நினைக்கின்றனர். அப்போது நீதித்துறை சார்ந்த விஷயங்கள் ஆலோசனை செய்யப்படாது.நீதித்துறை மீது அரசியல்வாதிகள் அதிக மரியாதை வைத்துள்ளது நமது அரசியலமைப்பின் முதிர்ச்சியை காட்டுகிறது. இது அனைவருக்கும் தெரியும். நீதித்துறைக்கான நிதியை மாநிலங்கள் ஒதுக்குகின்றன. இது நீதிபதிகளுக்கானது கிடையாது. மாவட்டங்களில் நீதிமன்ற கட்டடங்கள், நீதிபதிகளுக்கான வீடுகள் தேவைப்படுகின்றன. இதற்காக தலைமை நீதிபதிகள் முதல்வர்களை சந்திக்க வேண்டும்.
நானும் அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றி உள்ளேன். புதிதாக நியமிக்கப்படும் தலைமை நீதிபதி, முதல்வரை அவரது வீட்டில் சந்திப்பார். பிறகு, தலைமை நீதிபதியை அவரது வீட்டில் முதல்வர் சந்திப்பார். இந்த சந்திப்பிற்கு என திட்டம் இருக்கும். அப்போது நீதித்துறை சார்ந்து நடக்கும் திட்டங்கள் குறித்து நீதிபதியிடம் முதல்வர் விளக்குவார். இதற்காக முதல்வரை நீதிபதி சந்திக்கக்கூடாதா ? கடிதம் மூலம் தகவல் பரிமாறினால், திட்டங்கள் முடிவடையாது.
இந்த சந்திப்பின் போது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து எந்த முதல்வரும் எந்த கேள்வியையும் கேட்க மாட்டார். அது போன்ற தருணங்களில் நீதித்துறை தொடர்பான கருத்துக்களை அவர்கள் ஒருபோதும் நிகழ்த்தக் கூடாது.சுதந்திர தினம், குடியரசு தினம், திருமணம் அல்லது இரங்கல் நிகழ்ச்சிகளின் போது முதல்வரும், தலைமை நீதிபதியும் சந்தித்து கொள்வார்கள். இதனால் நீதித்துறை பணிகளில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என கேட்கின்றனர். இவ்வாறு சந்திரசூட் தெரிவித்தார்