அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்: ஆனாலும் ஜெயில்தான்!
அமலாக்கத்துறை கைதுசெய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்திருந்தார். 90 நாட்களுக்கு மேல் கெஜ்ரிவால் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை கருத்தில் கொண்டு டெல்லி முதலமைச்சருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அதே சமயம் சிபிஐ தரப்பிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அதிலும் ஜாமின் கிடைக்காமல் கெஜ்ரிவால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக குற்றம் சாட்டி டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவாலை மார்ச் 11-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஜூன் 2-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கேஜ்ரிவால், இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், இடைக்கால ஜாமீன் நிறைவடைந்ததும் ஜூன் 2-ம் தேதி திகார் சிறையில் அர்விந்த் கேஜ்ரிவால் சரணடைந்தார். அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா அமர்வு இன்று தீர்ப்பளித்து.
அவர்கள் அளித்த தீர்ப்பில், அர்விந்த் கேஜ்ரிவால் 90 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அதனால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறோம். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை நாங்கள் கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பதவி விலக வேண்டுமா அல்லது முதலமைச்சராக தொடர வேண்டுமா என்ற முடிவை கெஜ்ரிவாலிடமே விட்டு விடுகிறோம். மேலும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் பிரிவு 19-ன்படி கைதுசெய்யப்பட்டதே தவறு என்ற வாதம் குறித்து விரிவான அமர்வு விசாரிக்க நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். அதாவது அமலாக்கத்துறை கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சட்டப்பிரிவுகளின் மீது அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது. குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகள் தொடர்பான அரசியல் சாசன கேள்விகளை முன்வைத்து அதை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியும் சுப்ரிம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது