தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அறுபடைவீடு இலவச ஆன்மீக சுற்றுப்பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்!

05:29 PM Jan 28, 2024 IST | admin
Advertisement

மிழக அரசின் சார்பிலான இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (ஜன.28) சென்னை, கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி திருகோயிலில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்கும் 207 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி, ஆன்மிகப் பயணப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. இதில், இணையதளம் மூலம் ஆன்மீக சுற்றுப்பயணத்திற்கு விண்ணப்பித்த 207 மூத்த குடிமக்கள் அறுபடை முருகனின் திருக்கோயில்களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய கோயில்களுக்கு அழைத்துச்செல்ல ப்படுகின்றனர்.சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள 207 மூத்த குடிமக்களுக்கு போர்வை மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி சுற்றுப்பயணத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

Advertisement

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, இந்து சமய அறநிலையத்துறை ஆன்மிகப் பயணத்திற்கு முக்கியத்துவம் தருகின்ற வகையிலும், ஒரே நேரத்தில் பல்வேறு திருக்கோயில்களுக்கு பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்திடும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ஆடி மாதங்களில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதங்களில் வைணவ திருக்கோயில்களுக்கும் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுகிறது. சீனாவில் உள்ள மானசரோவர் புனித பயணம் செல்லும் 500 நபர்களுக்கும், நேபாளத்திலுள்ள முக்திநாத் திருக்கோயிலுக்கு புனித பயணம் செல்லும் 500 நபர்களுக்கும், அரசு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று ராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணத்தில் கடந்த ஆண்டு 200 பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இந்த ஆண்டு 300 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ள நிலையில் அதன் முதற்கட்ட பயணம் ஜனவரி 31-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.75 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது.

Advertisement

முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றை ஒரே முறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் 207 மூத்த குடிமக்கள் இன்றைய தினம் புறப்படுகின்றனர். இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு போர்வை, சால்வை, துண்டு, பெட்சீட், குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகளை வழங்கியுள்ளோம். இந்த 6 ஆன்மிகப் பயண பேருந்துகளில் மூத்த குடிமக்களுடன் அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர்.

அறுபடைவீடுகளுக்கும் ஒரே முறையில் தனிப்பட்ட ஒருவர் சென்று வருவது சற்று கடினமானதாக இருப்பதோடு, அதற்கான செலவினம் ரூ. 50 ஆயிரம் வரை ஆகும். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ. 15,830 செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி 1000 மூத்த குடிமக்களை அழைத்துச் சென்று வர ஆகும் செலவினம் ரூ.1,58,30,000 ஆகும். இந்த தொகையானது திருக்கோயிலின் நிதியிலிருந்து செலவிடப்படவில்லை. இதன் முழு செலவினத் தொகையினை அரசு மானியமாக வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆன்மிகப் பயணம் மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் அமைந்திட வாழ்த்துகளை தெரிவித்து, இறைவனை பிராத்திக்கின்றோம்.

அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் என்பது மிகச் சிறப்பான புதிய திட்டம் என்பதால் பக்தர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்றது. குறைந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் தகுதி உடையவர்கள் தேர்வு செய்து இன்று அனுப்பி உள்ளோம். இது இந்து சமய அறநிலையத் துறையின் மீது பக்தர்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை புலப்படுத்துகிறது. அறுபடை வீடு ஆன்மிகப் பயணமானது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படை வீட்டிலிருந்து தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 மூத்த குடிமக்களை அறுபடை வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறப்பான தரிசனத்தை ஏற்படுத்தி தருவோம்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்வதற்கு இதுவரையில் எந்த விண்ணப்பமும் வரவில்லை. ஒரு சிலர் அக்கோயிலுக்கு செல்வதற்கான மார்க்கத்தை கேட்டபோது இந்து சமய அறநிலைத்துறை பயண மார்க்கத்தை அவர்களுக்கு தெரிவித்திருக்கின்றது. விண்ணப்பங்கள் வந்தால் அது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்." என தெரிவித்தார்.

Tags :
Arupada VeeduFreeinauguratedLord Murugan KovilsMinister Sekarbabu!Spiritual Tourஅறுபடை வீடுஆன்மிகப் பயணம்முருகன் கோயில்கள்
Advertisement
Next Article