அருந்ததி ராய்க்கு PEN Pinter Prize 2024 விருது!
அருந்ததி ராய் – முற்போக்கு இந்தியப்பெண் முகங்களில் ஒருவராக அறியப்படுகிறார். எழுத்தாளர், சமூக சேவகர், அணு உலை எதிர்ப்பாளர், அரசியல் ஆய்வுக்கட்டுரையாளர் என பல முகங்கள் கொண்டவர். இந்திய எழுத்தாளர்களில் முதல் புக்கர் பரிசு வென்றவர். இன்றளவும் இவரின் ‘காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ விறுவிறுப்பான விற்பனையில் உள்ளது.
இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுக்களான மாவோயிஸ்ட்களை சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் காடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களது அரசியல், வாழ்வு மற்றும் நகர்வுகள் குறித்த “தோழர்களுடன் ஒரு பயணம்” எனும் பெயரில் புத்தகமாக எழுதி அவர் ஆவணப்படுத்தியுள்ளார்.அதேபோல நொறுங்கிய குடியரசு எனும் பெயரில் அவர் எழுதிய புத்தகம் காஷ்மீரின் அரசியல் குறித்து விரிவாக பேசுகிறது. மேலும் பெருமகிழ்வின் பேரவை மற்றும் ஆசாதி உள்ளிட்ட புத்தகங்கள் இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் வாசகர்களால் கவனம் பெற்ற புத்தகங்கள் ஆகும்.டெல்லியில் கடந்த 2010-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக எழுத்தாளா் அருந்ததி ராய், முன்னாள் பேராசிரியா் ஷேக் செளகத் ஹுசைன் ஆகியோா் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) விசாரணையைத் தொடங்க டெல்லி துணைநிலை கவர்ன வி.கே. சக்சேனா கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்..
இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற நாடக ஆசிரியர் ஹரோல்ட் பின்டரின் நினைவாக ‘English PEN Pinter’ விருது 2009-ம் ஆண்டு நிறுவப்பட்டது. நடப்பாண்டுக்கான இந்த விருது இந்தியாவின் பிரபல எழுத்தாளரும், சமூகப் போராளியுமான அருந்ததி ராய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் பிரிட்டிஷ் நூலகம் இணைந்து நடத்தும் விழாவில் அக்டோபர் 10 அன்று, இந்த விருதினை அருந்ததி ராய் பெற இருக்கிறார். மேலும் அந்த விழாவில் அவர் உரையாற்றவும் உள்ளார்.
இங்கிலாந்து, அயர்லாந்து குடியரசு அல்லது காமன்வெல்த் நாடுகளில் வசிக்கும் சிறந்த இலக்கியத் தகுதி கொண்ட எழுத்தாளருக்கு ஆண்டுதோறும் இந்த பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கான நடுவர் குழுவில் ’ஆங்கில பென்’ தலைவர் ரூத் போர்த்விக், நடிகர் காலித் அப்தல்லா மற்றும் எழுத்தாளர் ரோஜர் ராபின்சன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதற்கு முன்பு மைக்கேல் ரோசன், மார்கரெட் அட்வுட், மலோரி பிளாக்மேன், சல்மான் ருஷ்டி, டாம் ஸ்டாபார்ட் மற்றும் கரோல் ஆன் டஃபி ஆகியோர் இந்த விருதை வென்றுள்ளனர்.
தற்போது பென் பின்டர் பரிசை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக அருந்ததி ராய் கூறியுள்ளார். "உலகம் எடுத்துக்கொண்டிருக்கும் கிட்டத்தட்ட புரிந்துகொள்ள முடியாத திருப்பத்தைப் பற்றி எழுத ஹரோல்ட் பின்டர் இன்றும் எங்களுடன் இருந்திருக்க வேண்டும். அவர் இல்லாத சூழலில் அவரது இடத்தை நிரப்ப நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.