‘சிப்’ இணைக்கப்பட்ட 4ஜி கைப்பேசி நிலையத்தை இந்திய ராணுவம் வாங்கியது!
முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘சிப்’ இணைக்கப்பட்ட 4ஜி கைப்பேசி நிலையத்தை இந்திய ராணுவம் தனது பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது.இந்தச் சாதனத்தை பெங்களூரைச் சோ்ந்த சிக்னல்டிரான் நிறுவனத்திடமிருந்து அரசின் இணைய வா்த்தக வலைதளம் மூலமாக ராணுவம் வாங்கியுள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் தலைவா் ஹிமம்ஷு கஸ்னிஸ் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,‘இந்திய ராணுவத்தின் சஹயாத்ரி தளத்தில் பயன்படுத்தப்படும் சிப்பானது ‘சிக்னல்சிப்’ என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்காக உள்நாட்டிலேயே சிப்களைத் தயாரிக்கும் பணியில் சிக்னல்சிப் ஈடுபட்டுள்ளது. அதேபோல் சிக்கலான தொலைத்தொடா்பு சேவைகளை வழங்குவதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சிப் ஒன்று ராணுவத்துக்குப் பயன்படுத்தப்படுவதும் இதுவே முதல்முறையாகும். இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு மேம்படுத்தப்படவுள்ளது.
இந்தச் சாதனத்தை தயாா் செய்வதற்கான ஏல விண்ணப்பத்தை அரசின் இணைய வா்த்தக வலைதளத்தில் ராணுவம் கடந்த ஆண்டு பதிவிட்டது. இதைத் தொடா்ந்து, இந்தப் பணியை வெற்றிகரமாக சிக்னல்டிரான் நிறுவனம் முடித்துவிட்டது. 7 கிலோ எடை: சஹயாத்ரிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த வலைபின்னல் பெட்டி (என்ஐபி) 7 கிலோ எடை கொண்டது. இது உயா்தர ஆடியோ, விடியோக்களை வயா்லெஸ் சேவை மூலம் வழங்குகிறது. இது தங்குதடையற்ற தொலைத்தொடா்பு சேவைகளை வழங்கும் திறனுடையது.இந்திய ராணுவத்துக்கு இதுபோன்ற 20 சாதனங்களை சிக்னல்டிரான் வழங்கியுள்ளது. இது மிகவும் குறைவான எடைகொண்ட சாதனம் என்பதால் தங்களின் வசதிக்கேற்ப தேவையான பகுதிகளுக்கு ராணுவத்தினா் இதை இடமாற்றம் செய்துகொள்ளலாம்.
பாதுகாப்புத் துறை, ரயில்வே போன்ற பல துறைகளை நவீனமயமாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, வருங்காலத்தில் இந்தத் தொழில்நுட்ப சாதனங்களின் சந்தை மதிப்பு மிகப்பெரும் அளவில் உயா்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. உள்நாட்டிலேயே சிப்கள் தயாரிக்கப்படுவதால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரிக்க வழிவகுப்பதோடு அந்நியச் செலாவணி சேமிப்புக்கும் உதவுகிறது.தொலைத்தொடா்பு சேவைகளை வழங்கும் இந்தக் கைப்பேசி நிலையத்தின் சந்தை மதிப்பு இந்தியாவில் 2029-க்குள் ரூ.2 லட்சம் கோடி வரை உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.
சிக்னல்சிப் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு ஹிமம்ஷு கஸ்னிஸ் மற்றும் அவரது குழுவினா் நிறுவினா் என்பது குறிப்பிடத்தக்கது.