இந்திய ராணுவ நாள்!
நம் மக்களைக் காக்க தன்னலம் நீங்கி உறவுகளின் பிரிவுகளை ஏற்று வெயில், பனி பாராது ரத்தம் சிந்தி இன்னுயிரையும் தாய் மண்ணிற்காக இழக்கத் துணிந்து இந்தியத் திருநாட்டினைப் பாதுகாக்க இந்தக கணமும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்திய ராணுவத்தின் மகத்தான வீர தீரங்களை நினைவுகூறும் நாள் ஜனவரி-15.
சுமார் 200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு 1949, ஜனவரி 15-ம் தேதி இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடு இந்தியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நாளையே, இந்திய ராணுவ நாள் என்ற பெயரில் ராணுவத்தின் சாதனைகள், தேசத்திற்கு ராணுவ வீரர்கள் ஆற்றிய சேவைகள், தியாகங்கள் நினைவுகூர்ந்து கவுரவிக்கப்படும். ஆம். இந்த ஜனவரி 15-ம் தேதி ராணுவ தளபதி பதவி, பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியிடம் இருந்து முதன் முறையாக இந்தியர் ஒருவருக்கு வழங்கப்பட்டது. முப்படைகளுக்கும் தலைமைப் பதவியே ராணுவத் தளபதி என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய நிலையில், இந்தியாவில் குடியரசுத் தலைவரே ராணுவ தளபதியாக இருக்கிறார். அவரே முப்படைகளின் தலைவர்.
ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சருக்குப் பிறகு ராணுவத் தளபதி பதவி ஏற்ற பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பாவே இந்திய ராணுவ தளபதி பதவியை அலங்கரித்த முதல் இந்தியர் ஆவார். இந்திய ராணுவ தளபதி பதவியை வகித்த கடைசி பிரிட்டிஷ்காரர் பிரான்சிஸ் புட்சர் ஆவார். அந்த நேரத்தில், பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா லெப்டினென்ட் ஜெனரலாக பதவி வகித்தார். இந்திய ராணுவ தளபதியாக பதவியேற்றபோது கே.எம்.கரியப்பாவுக்கு வயது 49. 'இந்தியாவுக்கு வெற்றி' என்று பொருள்படும் 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கத்தை கே.எம்.கரியப்பா ஏற்றுக் கொண்டார்.
கிழக்கு இந்திய கம்பெனியின் படைகளே பிரிட்டிஷ் இந்திய ராணுவமாக மாறி, சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய ராணுவமாக உருப்பெற்றது. தற்போதைய உலகின் வலிமையான 4-வது ராணுவமாக இந்திய ராணுவம் கருதப்படுகிறது. அதே சமயம் உலகில் அதிகமாக ராணுவத் தளவாடங்களுக்கு செலவு செய்யும் நாடு, உலகின் மிகப்பெரிய கடற்படை கொண்ட நாடு, என நாட்டின் அந்தஸ்த்தை காட்டவோ, எதிரிகளின் சிம்மசொப்பனம் இந்திய தேசம் என பறைசாற்றுவதிலோ நம் நாடு யாருக்கும் போட்டியில்லை..
இதையெல்லாம் தாண்டிய பலம், வேற்றுமை மறந்து நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பையும், அமைதியையும் மட்டுமே கருதி போர்களிலும், இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர் காலங்களிலும் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெறும் இந்திய அரசுப் பணியாளனாக அல்லாமல், ஒரு மாவீரனாக தன் தோள்களில் தன் தேசத்தை சுமப்பவனுக்கு, கொண்டாட்டங்களால் அல்ல ஒரு இந்தியக் குடிமகனாக அவனை மனதில் நிறுத்தி நினைவுகூறுவதே மிகப்பெரிய மரியாதை.
நம் சகமனிதனுக்குக் கிடைக்கப்பெறும் சாதாரண அடிப்படை சந்தோஷங்களைக் கூட தனக்குள்ளே அழுத்திவைத்துக்கொண்டு சுற்றம், சூழல் எதையும் பொருட்படுத்தாது, தன்னை மெலுகாக்கி, தேசப்பற்றைத் திரியாக்கி, தியாகச் சுடராக ஒளிவீசிக் கொண்டிருக்கும் நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றாக நிமிர்ந்து நின்று பெருமிதமாகவே அடிக்கலாம், ஒரு சல்யூட்…!
வாத்தி அகஸ்தீஸ்வரன்