இந்தியாவின் கொடி நாள்!
வருஷத்தின் 365 நாட்களும் ஏதேனும் ஒரு சிறப்பை தாங்கியே நிற்கிறது. ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு விஷயத்தை அறிவுறுத்துகிறது. நாம் முன்னோர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை நினைவு கூறவும், அவர்களின் பெருமைகளை பேசவும் நமக்கு நேரம் இல்லை அதை நினைவு கூர்ந்தால் வாழ்க்கையில் அவர்கள் அடைந்த வெற்றிக்கான படிகள் நமக்கு வெளிச்சமாகும். ஆனால் அதனை நாம் செய்வது இல்லை ஒரு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தான் அதனை நாம் நினைவு கூறுகின்றோம். அப்படி நாம் முன்னோர்களின் தியாகங்கள் போற்றும் ஒரு நாளாகவும், இந்திய திருநாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக எல்லைகளில் இருந்து பாதுகாக்கும் ஒவ்வொரு வீரனின் நலனில் நம்மால் முடிந்த சிறு பங்களிப்பை வழங்க கொண்டாடப்படும் ஒரு நாள் தான் ஆயுதப்படை கொடி நாள். . இன்றைய நாளில் நம்மால் முடிந்த உதவிகளை இந்திய முப்படை வீரர்களுக்கு வழங்குவோம்.
கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் நமது நாட்டைப் பாதுகாப்பதில் ராணுவத்தினருக்கு முக்கிய பங்கு உண்டு . எனவே , நாட்டின் கண்ணாக போற்றப்படும் ராணுவத்தினரை பாதுகாப்பது அவசியம் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினர் . இதையடுத்து ராணுவத்தினர் நலன் காப்பது குறித்து முடிவு செய்ய ராணுவ அமைச்சகத்தின் சார்பில் 1949 ஆம் ஆண்டு ஆகஸ்டு 28 ஆம் தேதி ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது . இந்த கமிட்டி பல மட்டங்களில் ஆலோசனையில் ஈடுபட்டது . அண்டை நாட்டுடன் போரில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுதல் , போரில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவுதல் , ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு உதவுதல் ஆகிய 3 நோக்கங்களைக் கொண்டு கொடி நாள் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது . அதன்படி 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 7 அன்று முதல் கொடி நாள் அறிவிக்கப்பட்டது . அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிறு கொடியை வழங்கி நிதி வசூலில் ஈடுபடுகின்றனர் . ராணுவத்தின் ஒரு அங்கமான கேந்தர்ய சைனிக் போர்டு என்ற அமைப்பின் மூலம் இந்த நிதி வசூல் பராமரிக்கப்படுகிறது .
கொடிநாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமே அன்றைய தினம், இந்திய தேசியக் கொடிகளை நாடு முழுவதும், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியப்பெருமக்கள், இளைஞர்கள், என அனைவர் மூலமாகவும் நாடு முழுதும் விற்பனை செய்து அதில் கிடைக்கும் தொகையை இந்திய ராணுவ வீரர்களின் நலனுக்காக பயன்படுத்துகிறது நமது அரசு.
பாகிஸ்தான், சீனா, பங்களா தேஷ், உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான எல்லைப்பிரச்னைகளின் போது மூண்ட போர்களில் தமது இன்னுயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவும் பொருட்டும், போரில் உடலுறுப்புகளை இழந்து மாற்றுத்திறனாளிகளாகி விட்ட முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் பொருளாதாரத் தேவைகளில் உதவும் பொருட்டும், இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கொடிநாள் அன்று நன்கொடை திரட்டி ராணுவ வீரர்களுக்கு அளித்து நாட்டின் பாதுகாப்பில் அவர்களது பங்களிப்பைக் கெளரவிக்கிறது. இந்திய எல்லைப்புறங்களில் பாலைவனங்களிலும், பனி பெய்யும் இமயத்திலும், கடல்புறத்திலுமாக இரவு பகல் பாராது அயராது உழைத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் இந்தச் சிறு மரியாதை நலிவடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துப் பொருளாதாரத் தேவைகளை தீர்க்கச் செய்யும் பேருதவியாகக் கருதப்படுகிறது.
ஆகவே இன்று பொதுமக்கள் ஏதேனும் ஒருவகையில் கொடிநாள் நிதி செலுத்தி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்ய மறவாதீர்!
எல்லையில் அவர்கள் உறங்காமல் கண்ணும் கருத்துமாக விழித்திருந்து அயராது உழைப்பதால் மட்டுமே இங்கே இந்தியாவுக்கு உள்ளே நம்மால் நிம்மதியான வாழ்வை வாழ முடிகிறது.
அண்டை நாடுகளைப் பாருங்கள். இலங்கையிலும், சிரியாவிலும், இஸ்ரேலிலும், ஈரான், ஈராக்கிலும் போர் நடந்ததால் அகதிகளாக்கப்பட்ட லட்சோபலட்சம் மக்களைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம் நாம்? போர் என்பது ஒரு நாட்டைப் பாதுகாப்பதற்கான முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, தன் நாட்டு மக்களை அகதிகளாக்கும் முயற்சியாக என்றுமே இருக்கக் கூடாது.
அந்த வகையில் முப்படைகளிலும் அங்கம் வகிக்கும் நமது இந்திய ஜவான்களே ஒட்டுமொத்த இந்தியர்களின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம். எனவே அவர்களைக் கொண்டாடக் கிடைத்த இத்தகைய வாய்ப்புகளை நாம் தவற விட்டு விட வேண்டாம்!
நிலவளம் ரெங்கராஜன்