இந்திய கொடி தினம் எனப்படும் ஆயுதப்படை கொடி தினம்!
நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுது.பனி முகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும், அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும், பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.
இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.
நம் இந்தியா என்னும் தேசம் சீனா மற்றும் பாகிஸ்தான் என்கிற இரு நாடுகளை அண்டை நாடுகளாக கொண்டுள்ளது. சீனாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை தங்கள் வசம் கொண்டுள்ள நாடுகள்.உலகில் வேறு எங்கும் காணாத நிலைமையாக அதாவது இரு அணு ஆயுத நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் இந்திய தேசத்திற்கு உள்ளது.
இந்நாடுகளுடன் இந்தியா நல்ல உறவு வைத்துக்கொள்ள முயன்றாலும் இந்தியாவுடன் நல்லுறவை கொஞ்சமும் விரும்பாத நாடுகளே சீனாவும் பாகிஸ்தானும்.ஆகையால் எந்நேரமும் எல்லைப்புறத்தில் மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் காவல் காக்க வேண்டிய சூழலில் இந்திய பாதுகாப்பு படைகள் உள்ளன.
நன்றாக கவனியுங்கள். சர்வதேச அளவில் நவீன போர் முறையில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரு நாட்டின் மீது (அணு ஆயுதம் சம்பந்தப்படாத) ஒரு மிலிட்டரி தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய முதல் நாடு என்ற பெருமையை பாலாகோட் விமான தாக்குதல் மூலம் இந்தியாவிற்கு இந்திய விமானப்படை பெற்று தந்தது.எவ்வித எதிர்ப்பையும் எதிர்கொள்ளாது unchallenged ஆக இந்திய விமானப்படை பாகிஸ்தான் நாட்டின் உள்ளே வெகுதூரம் சென்று தாக்குதல் நடத்திய விதம் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பயங்கர நடுக்கத்தை ஏற்படுத்தியது . அதனாலேயே பாகிஸ்தான் பல மாதங்களுக்கு அதன் வான்வெளியை பயணிகள் விமானம் கூட பறக்க விடாமல் அடைந்திருந்தது
அணு ஆயுதம் வைத்திருப்பது மிகப்பெரிய பாதுகாப்பு. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாட்டின் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்த எந்த நாட்டின் ராணுவமும் தயங்கும் என்ற எண்ணம் (இந்த பாலகோட் பயங்கரவியாதிகள் முகாமை இந்திய விமானப்படை தாக்கியதால்) தவிடு பொடியாகியது. அணுகுண்டு மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது என்கிற உண்மையை உலகிற்கு உணர்த்தியது.
இப்படி நாட்டு மக்கள் பாதுகாப்பாக உறங்க வேண்டும் என்பதற்காக தங்கள் தூக்கத்தை தியாகம் செய்து கண் துஞ்சாமல் இந்திய எல்லைகளை காத்திடும் இந்திய பாதுகாப்பு வீரர்களை நினைவு கூற வேண்டிய நாளே கொடி நாள் எனப்படும் டிசம்பர் மாதம் ஏழாம் தேதியாகும்.
இச்சூழலில் இந்த நாளில் தமிழ் மக்களுக்கு இந்திய பாதுகாப்பு படை வீரர்களை பற்றி அதிகம் தெரிந்திராத சில தகவல்களை தருவதன் மூலம் பாதுகாப்பு படை வீரர்களை நன்றியுடன் நினைவு கூறுவோமா?.
(1) உலகிலேயே அதிக உயரத்தில் (கடல் மட்டத்திலிருந்து 6000 அடி) இருக்கும் (சியாச்சின்) போர் முனையை வெற்றிகரமாக தன் கட்டுப்பாட்டில் இந்திய ராணுவம் வைத்துள்ளது.
(2) இந்திய ராணுவம் என்பது ஒரு விருப்ப சேவை (voluntary service) அமைப்பு.
உலகின் பல நாடுகளை போல ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
இந்திய அரசியல் சட்டத்தில் ராணுவ சேவையை கட்டாயப்படுத்த (விதிமுறைகளின் படி) வழி இருந்தாலும் இதுநாள் வரை அது பயன்படுத்தப்படவில்லை.
(3) இந்திய ராணுவத்தின் High Altitude Warfare School (HAWS) உலகின் தலைசிறந்த பயிற்சி கேந்திரமாகும்.
பலமுறை அமெரிக்கா மற்றும் UK யின் பல special ops கமேண்டோக்கள் இந்த கேந்திரத்தில் இந்தியர்களிடம் பயிற்சி பெற்ற பின்னரே ஆப்கானிஸ்தானில் போர் முனை டூட்டிக்கு சென்றுள்ளனர் என்பது மிகப் பலருக்கு தெரியாத விஷயம்.
(4) 1971 இல் பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையின் போது LONGEWALA என்ற இடத்தில் வெறும் 120 வீரர்களையும் ஒரே ஒரு Jeep mounted recoilless gun மட்டும் வைத்துக்கொண்டு ஒரு இரவு முழுவதும் பாகிஸ்தானின் 2000 வீரர்களையும் 45 டாங்குகளையும் முன்னேற விடாமல் தாக்குப்பிடித்த ராணுவம் இந்திய இராணுவமாகும்.(பொழுது புலர்ந்ததும் இந்திய விமானப்படையின் 4 விமானங்கள் பாகிஸ்தானின் டாங்குகளை துவம்சம் செய்தது ஒரு folklore).
(5) 2013 உத்தரகாண்ட் வெள்ளத்தின் போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் 2140 முறை (sorties) பறந்து வெள்ளத்தில் சிக்கிய 20000 க்கும் அதிகமான சிவிலியன்களை காப்பாற்றினார்கள். 3,82,400 kg of relief material and equipment.களை பாதிக்கப்பட்ட பகுதியில் இறக்கினார்கள். இது ஒரு உலக சாதனையாகும். இதுவரை போரில்லாத பேரிடர்களில் (இந்திய விமானப்படையின்) இந்த சாதனையை யாரும் மிஞ்சவில்லை.
(6) உலகிலேயே மிக உயரமான இடத்தில் லடாக் பள்ளத்தாக்கு டிராஸ் மற்றும் சுறு ஆறுகளுக்கு நடுவே கட்டப்பட்ட பாலம் இந்திய இராணுவத்தினரால் கட்டப்பட்டது.
(7) 1971இல் பாகிஸ்தானுடனான சண்டையில் டாக்காவில் 93000 பாகிஸ்தான் போர் கைதிகள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர்.இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நடந்த மிகப்பெரிய சரணாகதி இதுதான். அப்போது டாக்காவில் இருந்த மொத்த இந்திய இராணுவத்தினர் எண்ணிக்கை 4000 க்கும் குறைவு.
(https://pledge.mygov.in/support-armed-forces-flag-day/ என்ற இணையதளத்திற்குச் சென்று கொடிநாள் சபதம் ஏற்றுக்கொண்டால் மேற்கண்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது)
(கொடி நாளில் இந்திய பாதுகாப்பு படையினருக்கு ..) .
....
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
........
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
........
மதுரத் தேமொழி மாந்தர்க்கெல்லாம்
வாணி பூசைக்கு உரையென பேசீர்
........
எதுவும் நல்கி இங்கு எவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்
.................................... மகாகவி பாரதியார்