சென்னை ‘ரிப்பன் மாளிகை’யை சுற்றி பார்க்க ரெடியா?
நம் சின்ன வயதில் இருந்தே சென்னையில் அமைந்துள்ள மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் -கை கடந்து செல்லும் போதெல்லாம் இந்த வெள்ளை மாளிகை உருவானதெப்படி? இப்பில்டிங்-க்குள் என்ன இருக்கும்? எப்படி இருக்கும்? என்று யோசித்து உண்டுதானே? பிரிட்டிஸார் 1639இல் இங்கு வந்திறங்கி வணிகம் செய்ய ஆரம்பித்து ஆட்சி செய்ததெல்லாம் தெரியும்தானே? அந்த வகையில் 1688 செப்டம்பர் 29-ம் தேதியிலிருந்து மெட்ராஸ் மாநகராட்சி செயல்படத் தொடங்கியது. நாதனியேல் ஹிக்கின்சன் என்பவர் முதல் மேயராகப் பொறுப்பேற்க, ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர்கள், யூதர்கள், இந்துக்கள் எனப் பலதரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்றும் நகரை நிர்வகிக்க உருவாக்கப்பட்டது. நகராட்சிக்கு என்று தனி அலுவலகம் கட்டப்படாத நிலையில், கோட்டைக்குள் இருந்த டவுன் ஹாலில் அது இயங்கிவந்தது. தெருக்கள் அமைத்தல், சாலை போடுதல், கழிவுநீரோடைகள் அமைத்தல், பாலங்கள், பள்ளிகள் கட்டுதல் ஆகிய பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளத் தொடங்கியது.
புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து 10 மைல்களை உள்ளடக்கி சுமார் 40 ஆயிரம் மக்களுடன் நகரமாக வளரத் தொடங்கிய மெட்ராஸ், இன்று 426 சதுர கி.மீ பரப்பளவுக்கு விரிந்து கிட்டத்தட்ட 1 கோடி மக்களுடன் பெருநகர சென்னை மாநகராட்சியாக வளர்ந்துள்ளது. கோட்டைக்குள் இயங்கிய மாநகராட்சி ஒரு கட்டத்துக்குப் பிறகு ஜார்ஜ் டவுன் எர்ரபாலு செட்டித் தெருவில் வாடகைக் கட்டடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டது.நகராட்சியின் பணிகள் விரிவடைந்த பிறகு, நிரந்தர அலுவலகம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. அதையேற்று பிரிட்டிஷ் நிர்வாகம் கட்டியெழுப்பித் தந்த கட்டடம்தான் தற்போது மாநகராட்சி இயங்கும் ரிப்பன் மாளிகை.
நவசெவ்வியல் முறையில் அமைந்த ரிப்பன் மாளிகைக் கட்டடம், இந்தியாவில் பிரிட்டிஷார் முன்னெடுத்த கட்டிடக் கலையான இந்தோ-சராசனிக் பாணியின் உச்சங்களில் ஒன்று. பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயாக அப்போது இருந்த மின்டோ பிரபு, 1909 டிசம்பர் 11 அன்று இந்த மாளிகைக்கு அடிக்கல் நாட்டினார். அக்காலகட்டத்தின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ஜி.டி.எஸ்.ஹாரிஸ், இந்த மாளிகையை வடிவமைக்க, லோகநாத முதலியார் என்ற ஒப்பந்தக்காரர் கட்டிமுடித்தார். இந்த மாளிகையின் திட்ட மதிப்பீடு 7.5 லட்சம் ரூபாய். அதில் 5.5 லட்சம் ரூபாய் லோகநாத முதலியாருக்கு ஊதியமாகவே கொடுக்கப்பட்டதாக தரவுகள் சொல்கின்றன.
நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட ரிப்பன் மாளிகை, 1913-ல் திறக்கப்பட்டது. ‘உள்ளூர் தன்னாட்சி நிர்வாகத்தின் தந்தை’ என்று போற்றப்பட்ட பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ரிப்பன் பிரபுவின் நினைவாக இந்த மாளிகைக்கு ‘ரிப்பன் மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட்டது.செவ்வக வடிவத்தில் அமைந்திருக்கும் ரிப்பன் மாளிகை 279 அடி நீளமும், 105 அடி அகலமும், 141 அடி உயரமும் கொண்டது. கட்டடத்தின் முதல் மூன்று தளங்களும் சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கின்றன. இந்த மாளிகையின் சிறப்பம்சமாகத் திகழும் மணிக்கூண்டு கோபுரத்தின் உயரம் 8.2 அடி; இயந்திர விசை மூலம் இயங்கும் இந்த மணிக்கூண்டுக் கடிகாரம் பிரிட்டனின் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் இயங்கும் கடிகாரத்தைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிகாரத்தோடு இணைக்கப்பட்ட ஜில்லெட் & ஜான்ஸ்டன் நிறுவனம் வடிவமைத்த 4 வெண்கல மணிகள் இப்போதும் இந்த மாளிகையில் இருக்கின்றன.
ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்திருக்கும் சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றை புதைத்து வைத்திருக்கின்றன. பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் ரிப்பன், மேயராக இருந்த சுதந்திரப் போராட்டவீரர் சத்தியமூர்த்தி, மாநகராட்சியின் ஆணையராக இருந்த பி.எம்.சிவஞான முதலியார் உள்ளிட்ட மாநகராட்சியோடு தொடர்புடைய பலரின் சிலைகள் இங்கே இருக்கின்றன.இப்பேர்பட்ட வரலாறு கொண்ட சென்னை வெள்ளை மாளிகை எனப்படும் ரிப்பன் பில்டிங்க்கை பொது மக்கள் சுற்றிப் பார்க்க தற்போது ஒரு அறிய வாய்ப்பானது கிடைத்துள்ளது.
ஆம்..சுமார் 111 ஆண்டுகள் பழமையான இந்த ரிப்பன் மாளிகையைச் சுற்றிப் பார்க்க சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பித்து சுற்றிப் பார்ப்போருக்கு சென்னை மாளிகையின் வரலாறு, அதன் கட்டுமான வரலாறு, சென்னையின் வரலாறு மற்றும் சென்னை மாநகராட்சியின் வரலாறு என நிறைய தெரிந்து கொள்ளும் வண்ணம் அமையும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.ரிப்பன் மாளிகையைச் சுற்றிப் பார்ப்பதற்கு, commcellgcc@gmail.com என்ற இமெயில் மூலமாகவோ அல்லது 9445190856 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டோ விண்ணப்பித்துக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நிலவளம் ரெங்கராஜன்