For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கண்கள் துடிக்குதோ?-காரணம் இதுதான்!

06:28 PM Mar 27, 2024 IST | admin
கண்கள் துடிக்குதோ  காரணம் இதுதான்
Advertisement

பெரும்பாலும் பலருக்கும் கண்கள் துடிக்கும். இடது கண் துடித்தால் நல்லது என்கிற மாதிரியான நம்பிக்கைகளும் பலரிடம் உண்டு. ஆனால், கண்கள் துடிப்பதற்கும் இதுபோன்ற நம்பிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கண்கள் துடிப்பது என்பது நம் கட்டுப்பாட்டை மீறிய செயல். அதை ப்ளெபரோஸ்பாசம் (Blepharospasm) என்று மருத்துவம் குறிப்பிடும். கண்ணின் மேல் இமையில்தான் இந்தத் துடிப்பை பெரும்பாலும் உணர்வோம். நொடிக்கொரு முறை என கண் துடிப்பானது ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வரை தொடரும். கண்கள் துடிப்பதில் மூன்று வகை உண்டு.

Advertisement

மிதமானது: இது, வேலைப்பளு, ஸ்ட்ரெஸ், களைப்பு, அதிக கஃபைன் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது போன்றவற்றுடன் தொடர்புடையது. தவிர, கருவிழியைச் சுற்றியுள்ள பகுதியோ, கண்இமைகளைச் சுற்றியுள்ள சவ்வுப் பகுதியோ எரிச்சலுக்குள்ளாவதாலும் கண்கள் துடிக்கலாம்.

தீங்கற்றது (Benign essential blepharospasm): நடுத்தர வயது தொடங்கி, முதிய வயது வரை உள்ளவர்களை பாதிப்பது இது. நாளாக, ஆக இதன் தீவிரம் அதிகரிக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு இந்த பாதிப்புக்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகம். இது சீரியஸான பிரச்னை இல்லை என்றாலும் பிரச்னை தொடரும் பட்சத்தில் தினசரி வாழ்க்கையை பாதிக்கும். இந்த வகையில் கண் துடிப்பானது இடைவெளி இல்லாமல் தொடரும், கண் எரிச்சலும் இருக்கும். பிரச்னை தீவிரமானால் வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கள் கூசுவது, மங்கலான பார்வை, மற்றும் முகத்தசைகளில் பிடிப்பு போன்றவை ஏற்படலாம். கண்களை சில மணி நேரம் மூடிக்கொண்டிருக்கும் அளவுக்கு இது தீவிரமாகலாம். இது மரபியல் சம்பந்தப்பட்டது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

Advertisement

ஹெமிஃபேஷியல் பிடிப்பு (hemifacial spasm): இது மிகவும் அரிதானது. இந்த வகைத் துடிப்பில் கண்கள் மட்டுமன்றி வாயைச் சுற்றியுள்ள தசைகளும் சேர்த்து பிடிப்புக்குள்ளாகும். முகத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே பாதிக்கும். முக நரம்பை, ரத்த தமனியானது அழுத்துவதாலேயே பெரும்பாலும் இப்படி ஏற்படும்.காரணங்கள்: மூளையில் அல்லது முகத் தசைகளில் ஏற்படும் அசாதாரண சிக்னல் காரணமாகக் கண்கள் துடிக்கலாம்.

தூண்டக்கூடிய அன்றாட காரணிகள்: களைப்பு, ஸ்ட்ரெஸ், கஃபைன் உணவுகள், ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கம், மனநலம் மற்றும் வலிப்புக்காக எடுத்துக்கொள்ளும் சிலவகை மருந்துகள், சிலவகை வைட்டமின் பற்றாக்குறை. மூளை மற்றும் நரம்பியல் குறைபாடுகள், அதாவது, பார்க்கின்சன்ஸ் நோய், மூளை பாதிப்பு, மல்டிபுள் ஸ்க்ளெரோசிஸ் உள்ளிட்ட சில குறைபாடுகள் காரணமாகவும் அரிதாக சிலருக்கு கண்கள் துடிக்கும் பிரச்னை ஏற்படலாம். சிலருக்கு கண்கள் துடிப்பது என்பது நாள் முழுவதும் இருக்கலாம். சில நாள்களுக்கோ, வாரங்களுக்கோ, மாதங்களுக்கோகூட அது தொடரலாம். அப்படி இருக்கும்போது அது அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும். எப்போதும் கண்கள் துடித்துக்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் பார்வையே பிரச்னைக்குள்ளாவதுபோல உணர்வார்கள்.

ஒரு வாரத்துக்கும் மேல் பாதிப்பு தொடர்ந்தால், கண் இமைகள் மூடிக்கொள்வது போல உணர்ந்தால், கண்கள் துடிப்பது மட்டுமன்றி முகத்தசைகளும் துடிப்புக்குள்ளாவது போல உணர்ந்தால், கண்கள் சிவந்து, வீங்கியிருந்தாலோ, கண்களில் கசிவு இருந்தாலோ, மேல் இமைப் பகுதியானது கீழே இறங்கியது போல உணர்ந்தால் கண் மருத்துவரை அணுக வேண்டும்.

தீர்வுகள்: ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணம் என்று தெரிந்தால் அதற்கேற்ப வைட்டமின் மாத்திரைகளையும் கண்களுக்கான பயிற்சிகளையும் மருத்துவர் பரிந்துரைப்பார். அறிகுறிகளை வைத்து அது கண் தொடர்பான பாதிப்பா அல்லது மூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான பாதிப்பா என்று உறுதிசெய்வார். தேவைப்பட்டால் நரம்பியல் மருத்துவரை அணுகும்படி அறிவுறுத்துவார்.

மிகவும் மைல்டான கண் துடிப்பு என்றால் தானாகவே சரியாகிவிடும். நிறைய ஓய்வெடுப்பதுடன், ஆல்கஹால், புகையிலை மற்றும் கஃபைன் உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமே இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட முடியும். கண்கள் அதீதமாக வறண்டு போனதுதான் காரணம் என்று தெரிந்தால் கண்களுக்கு ஈரப்பதத்தை வரவழைக்கும் செயற்கை சொட்டு மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

டாக்டர் செந்தில் வசந்த்

Tags :
Advertisement