For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

’அரண்மனை 4’ -விமர்சனம்!

10:17 AM May 03, 2024 IST | admin
’அரண்மனை 4’   விமர்சனம்
Advertisement

சுந்தரவேல் சிதம்பரம் என்ற சுந்தர்.சி லைட்டர் லாப் புராக்டக்ஸ்களை வழங்கி  ரசிகர்களை மகிழ்விப்பதில் ஸ்கோர் செய்தவர்..! குறிப்பாக கோலிவுட்டில் லாஜிக் இல்லா காமெடி சீன்களை கோர்த்து திரைபடம் காண்போரை திருப்திப்படுத்துவதில் மாஸ்டர் டிகிரி வாங்கியவர். அந்த வகையில் இவர் டைரக்‌ஷனில் உருவான ‘அரண்மனை’ படத்தின் முதல் பாகம் 2014-ம் ஆண்டு ரிலீஸானது.. 2-ம் பாகம் 2016லும், 3-ம் பாகம் 2021-ம் வருடமும் வெளியானது. இப்போது வந்துள்ள அரண்மனை 4 மேற்படி மூன்று அரண்மனை படங்களின் கலைவைதான் என்று சொல்ல தோன்றினாலும் அவருக்கே உரிய திரைக்கதை மற்றும் காட்சிகள் அமைத்து இது புது டைப் ஹாரர் காமெடியாக்கும் என்று ஃபீல் பண்ண எக்கச்சக்கமாக மெனக்கெட்டிருப்பது படம் முழுவதும் தெரிகிறது.

Advertisement

கதை என்னவென்றால் வில்லேஜ் ஒன்றில் இருக்கும் பழைய அரண்மனை ஒன்றை கொஞ்சம் பராமரிப்பு பணிகளை செய்து அதை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சந்தோஷ் பிரதாப், தனது மனைவி தமன்னா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அந்த அரண்மனையில் வசித்து வருகிறார். அரண்மனையின் உரிமையாளரான ஜமீன்தார் டெல்லி கணேஷ், அவரது பேத்தி ராஷி கண்ணா ஆகியோரும் அதே இடத்தில் வசிக்கிறார்கள். இதனிடையே, திடீரென்று ஒரு நாள் தீய சக்தி ஒன்றின் மூலம் சந்தோஷ் பிரதாப் கொல்லப்படுகிறார். அத்துடன் அதே சந்தோஷ் பிரதாப் ரூபத்தில் அந்த அரண்மனைக்குள் செல்லும் அந்த தீய சக்தி அவரது குழந்தைகளை கொலை செய்ய முயற்சிக்கிறது. அதனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்ற போராடும் தாய் தமன்னா கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். ஆனால், அவரது மரணத்தை தற்கொலையாக காவல்துறை பதிவு செய்கிறது. விஷயம் கேள்விப்பட்டு அந்த கிராமத்துக்கு வரும் தமன்னாவின் அண்ணனான நாயகன் சுந்தர்.சி தனது தங்கை மற்றும் மாப்பிள்ளை மரணத்திற்கு பின்னணியில் மர்மங்கள் நிறைந்திருப்பதை அறிந்து , அதை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அச்சூழலில், கிராமத்தை சேர்ந்த மேலும் சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளுக்கான காரணத்தை கண்டுபிடிப்பதில்அதி தீவிரம் காட்டும் சுந்தர்.சி-க்கு பாக் என்ற தீய சக்தி பற்றி தெரிய வருவதோடு, அந்த பாக் தீய சக்திதான், தனது தங்கை, மாப்பிள்ளை மற்றும் சில கிராம மக்கள் வரிசையில் தனது தங்கையின் மகளையும் கொலை செய்ய முயற்சிப்பதையும் அறிந்துக் கொள்கிறார். அதனிடம் இருந்து சிறுமியை காப்பாற்ற போராடும் சுந்தர்.சி, அந்த தீய சக்தியை எப்படி அழிக்கிறார்?, பாக் தீய சக்தியின் பின்னணி என்ன?, அது எதற்காக குறிப்பிட்ட மனிதர்களை கொலை செய்ய முயற்சிக்கிறது? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அரண்மனை 4’.

Advertisement

ஹீரோவாக வரும் சுந்தர்.சி, ஒரு டைரக்டராகவும் இருப்பதால் நடிப்பில் ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை காட்சிகளில் கொஞ்சம் கூட மெனக்கெடாமல் வழக்கம் போல் ஊமைப்படத்துக்கு வசனம் சொல்பவர் போல் வந்தாலும் படம் தொய்வடையவில்லை என்பதை உண்மை..தமன்னா நடித்த படங்களில் பெரும்பாலும் கவர்ச்சி நாயகியாகவே, கதாநாயகனை காதலித்தப்படி மரத்தை சுற்றும் பெண்ணாகவே உலா வந்தவருக்கு இதில் அருமையான அம்மா கேரக்டர் கிடைத்துள்ளது. இந்த நாலாம் அரண்மனை படத்தின் பலமே தான்தான் என்பதை உணர்ந்து அழுகை, பதற்றம், கோபம், ஆக்ரோஷம், பிள்ளைகள் பாசம் என நவரச நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக, குழந்தைகளை காப்பாற்ற அவர் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே போராடுவது படம் பார்ப்பவர்களை படத்துடன் ஒன்றவைத்து விடுகிறது.

நாயகி லெவலில் வரும் ராஷி கண்ணாவுக்கு அதற்கான ஸ்பேஸ் கொடுக்கப்படவில்லை. ஒரு கிளாமர் சாங்காவது இருக்கும் என்றால் அம்மணிக்கு அதுவும் கிடைக்கவில்லை. திடீரென்று பளிச்சென்று வருபவர், திடீரென்று மறைந்தும் விடுகிறார். இறுதிக் காட்சியிலாவது அவரை சாமியாட்டம் ஆட வைப்பார்கள் என்று ஆசைப்பட்டு பார்க்குபோது அங்கேயும் ஏமாற்றம் தான். (படம் முடிந்து டைட்டில் கார்டு போடும் போது இடம் பெறும் ராஷி கண்னா மட்டும் அவர் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்.). அந்த குழந்தைகளின் நடிப்பும் அபாரம்

கோலிவுட்டின் செட் பிராபர்ட்டி ஆகி விட்ட யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் ஆகியோரது காமெடி ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அதுவும் அந்த அவெஞ்சர்ஸ் தீம் மியூசிக்கைக் கேட்டு தியேட்டரே அதிர்கிறது. இவர்களுடன் அவ்வபோது இணையும் மறைந்த சேசுவின் காட்சிகள் காமெடி போனஸாக அமைந்திருக்கிறது. சந்தோஷ் பிரதாப், ராமசந்திர ராஜு, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, சஞ்சய், கே.எஸ்.ரவிகுமார் ஆகிய ஏனைய நட்சத்திரங்களின் பங்களிப்பும் மிகச் சரியாக பயன் அளித்துள்ளது.
கே.ஜி.எப். வில்லன் கருடா கேரக்கடரில் நடித்த ராமச்சந்திர ராஜூ சாமியார் ரோலில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைக்கிறார் .

கேமராமேன் இ.கிருஷ்ணமூர்த்தி காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருப்பதோடு, படத்தின் பிரமாண்டத்தை ஒவ்வொரு ரசிகனும் உணரும்படி காட்சிப் படுத்தி பலே சொல்ல வைத்து விட்டார். ஆர்ட் டைரட்கரின் கைவண்ணம் காட்சிகளில் தெரிகிறது. பிரமாண்ட அம்மன் மற்றும் அசுரன் சிலை, அதனுள் நடக்கும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் என அனைத்துமே வெறும் கமர்ஷியல் படம் என்பதையும் தாண்டி ரசிகர்களை கவரக்கூடிய அம்சங்களாக அமைந்திருக்கிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் இடம் பெறும் பாடல்கள் எல்லாமே டோலிவுட் ரசிகர்களுக்காக உருவாகியுள்ளது. மேலும் க்ளைமாக்ஸில் வரும் அம்மன் பாடலையாவது இன்னும் ஆக்ரோஷமாகவும், பக்தி மயமாகவும் அமைத்திருகக்லாம். பின்னணி இசை மட்டும். திகில் மற்றும் கமர்ஷியல் ஜானர்களுக்கு ஏற்ற வகையில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

தொடங்கியது முதல் இறுதிக் காட்சி வரை ரசிப்புத் தனமை ஒன்றை மட்டுமே குறியாக வைத்து படத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர் சுந்தர்.சி, காட்சிக்கு காட்சி சிறுவர்களை கொண்டாடவும், குலுங்கி குலுங்கி சிரிக்கவும் வைக்கிறார். குறிப்பாக வழக்கமான அரண்மனை படங்களில் இருக்கும் கவர்ச்சி, குத்து டான்ஸ், காதல் போன்றவற்றை சுந்தர்.சி தவிர்த்திருப்பதை பாராட்டலாம். படம் முழுக்க ஒரு பக்கம் பேயின் மிரட்டல் மறுபக்கம் நட்சத்திரங்களின் நகைச்சுவை விருந்து, என இரண்டையும் அளவாக கொடுத்து குழந்தைகளையும், பெண்களையும் தன்வசப்படுத்தும் இயக்குநர் மொத்த படத்தையும் பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தி ஒவ்வொரு ரசிகனையும் திருப்திப்படுத்துவதில் ஜெயித்து விடுகிறார்.

மொத்தத்தில் - இந்த அரண்மனை 4- கோடை கால கொடைக்கானல்தான்

மார்க் 3.5/5

Tags :
Advertisement