Apple iPhone-11 மொபைல் - சென்னையில் உற்பத்தி தொடக்கம்!
உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தனது iPhone -11 மாடலின் உற்பத்தியை சென்னைக்கு அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் பெரும்பாலானவை கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டங்களில் சீனாவை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் சீனாவுக்கு மாற்றாக ஒரே சக்தியாக தற்போது இந்தியா இருந்து வருகிறது. இதனால் இந்தியாவில் தொழில்களை தொடங்க சர்வதேச நிறுவனங்கள் முனைப்புக்காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இதனை உறுதிபடுத்தும் வகையில் உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தனது iPhone -11 மாடலின் உற்பத்தியை சென்னைக்கு அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொடங்கியுள்ளது. இதற்காக இந்த மாத தொடக்கத்தில், ஆப்பிளின் கூட்டு நிறுவனமான ஃபாக்ஸ்கானின் இந்திய தொழிற்சாலையை விரிவுபடுத்துவதற்காக 100 கோடி டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கிறது. ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் 11ஐ தயாரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் இது நாட்டில் முதல் முறையாக தயாரிக்கப்படும் ஒரு சிறந்த மாடல் ஐபோன் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, குபேர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஐபோன் XR மாடலை இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு இணைக்கத் தொடங்கியது. 2017 ஆம் ஆண்டில், ஆப்பிள் ஐபோன் SE மாடல் மற்றும் 2016 மாடலின் உள்நாட்டு உற்பத்தியை பெங்களூர் ஆலையில் தொடங்கியது.
இதனிடையே ஆப்பிள் நிறுவனம் பெங்களூருக்கு அருகிலுள்ள தனது விஸ்ட்ரான் ஆலையில் ஐபோன் SE 2020 மாடலையும் இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.