ஃபாக்ஸ்கான் ஆலையில் மணமான பெண்களுக்கு பணி மறுப்பா?
தென்னிந்தியாவில் உள்ள சென்னை ஐபோன் தொழிற்சாலை (iPhone Factory) ஒன்றில் திருமணமான இரண்டு பெண்கள் வேலையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் இந்த செய்திகளின் பின்னணியில், விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையிடமிருந்து மத்திய அமைச்சகம் கோரியுள்ளது.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் உதிரி பாகங்களை கொண்டு ஐ-போன் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பாக விளம்பரம் செய்துள்ளது. அப்போது திருமணம் ஆன இரண்டு பெண்கள் வேலை கேட்டு நேரில் சென்றுள்ளனர். அப்போது கேட் அருகில் நின்ற அதிகாரிகள் திருமணம் ஆகிவிட்டதா? என்ற கேட்டுள்ளனர். அப்போது அந்த இரண்டு பெண்களும் திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் இங்கு வேலை கிடையாது எனத் தெரிவித்துள்ளனர். இது அந்த பெண்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இது தொடர்பான செய்தி மெல்லமெல்ல பரவியது. ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை மிகப்பெரிய அளவில் கட்டுரையாக எழுதி உலகின் மிக ப்பெரிய நிறுவனங்களில் திருமணம் செய்த பெண்களுக்கு வேலைகிடையாது என்ற பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாக விமர்சித்திருந்தனர். இந்த சம்பவம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டு கேட்டுள்ளது. மண்டல தலைமை தொழிலாளர் அலுவலக ஆணையரும் அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டுள்ளது.
ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் போது, பாகுபாடு காட்டக்கூடாது என 1976-ம் ஆண்டின் சமவேலைக்கு சமஊதியம் சட்டத்தின் பிரிவு-5 தெளிவாக தெரிவிக்கிறது. இந்தச் சட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தலுக்கு உரிய அதிகாரம் கொண்டது மாநில அரசு என்பதால், அதனிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.